ஈழத்தின் யுத்த கால புகைப்படக் கலைஞர் அமரதாஸ் நேர்காணல்

1454630442
உங்களைப் பற்றிய அறிமுகம், பிறந்து வளர்ந்தது, உங்கள் குடும்ப பின்னணி?

ஈழத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு அழகிய கிராமத்தில் பிறந்தவன் நான். பொருளாதார ரீதியில் பின்தங்கியிருந்த குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவன். முறைசார் கல்வியில் மிகச் சிறந்த அடைவுமட்டத்தைக் கண்டு வளர்ந்து வந்து, இனப்பிரச்சினையின் விளைவான போராட்ட கால நடவடிக்கைகளால் உயர் கல்வி மட்டங்களில் பாதிப்புக்களைக் காண நேர்ந்தது. இருந்தாலும், என் முறைசாராக் கல்வி முயற்சிகளூடாகவும் சுய தேடலூடாகவும் போர்க்கால வாழ்வியலூடாகவும் நிறைய கற்றுக்கொண்டேன். முறை சாராக் கல்வி முறையிலேயே நான் அதிக வளர்ச்சியைக் கண்டிருப்பதாக நினைக்கிறேன். கலை ரீதியில் எந்தப் பின்னணியும் இல்லாதிருந்த குடும்பப் பின்னணியிலிருந்து சிறு வயதில் ஓவியங்கள் வரைய ஆரம்பித்தேன். பிறகு கவிதைகள் எழுதினேன். நாடகங்கள் நடித்தேன். சிறுகதைகள் மற்றும் கலை இலக்கிய விமர்சனங்கள் எழுத ஆரம்பித்தேன். ஒளிப்படங்களை எடுக்க ஆரம்பித்தேன். பிறகு திரைப்பட முயற்சிகளில் இறங்கினேன். கடுமையான போர்க்காலத்தில், சிறிலங்கா அரசின் கடும் பொருளாதாரத் தடைகளின் பின்னணியில் எனது செயற்பாடுகள் எல்லாமே அமைந்திருந்தன. இப்படியாகவே கடுமையான யுத்த காலத்தில் ‘இயல்பினை அவாவுதல்’ என்ற பெயரில் போர்க்கால அனுபவங்களை உள்ளடக்கிய ஒரு கவிதைத் தொகுதியை சொந்த முயற்சியில் வெளியிட்டேன். பெரிய அளவில் ஒரு வாரம் ஒரு தனிநபர் ஒளிப்படக் காட்சியை நடாத்தினேன். அதையொட்டி, போர்க்கால வாழ்வியலும் நிலவியலும் பிரதிபலிக்கும் வகையிலான, 350 பக்கங்கள் வரை கொண்ட ஒளிப்பட நூலை வெளியிட்டேன். ‘வாழும் கணங்கள்- அமரதாஸ் ஒளிப்படங்கள் : Living Moments – Photographs of Amarathaas ‘ என்ற பெயரில் அமைந்த அந்த நூல் ஆங்கிலத்திலும் அமைக்கப்பட்டிருந்தது. ஒளிப்படக் கலை தொடர்பிலும் , சினிமாக் கலை தொடர்பிலும் பயிற்சிப் பட்டறைகள், விரிவுரைகள் நிகழ்த்தியிருக்கிறேன்.

வன்னி பெரு நிலம் மீதான உங்கள் இறுதி யுத்த பயணத்தின் அனுபவம் என்ன?அப் பயணத்தின் பெரு வலியான நாட்களை நினைவுகூர முடியுமா?

இறுதி யுத்த காலமென்பது பேரிழப்புகளை மட்டுமல்ல, சில சொற்களுக்குள் அடக்கிவிட முடியாத பெருவலி கொண்ட பேரனுபவத்தையும் தந்திருக்கிறது. மிகவும் நெருக்கடிகளையும் உயிராபத்துக்களையும் கொண்ட அக் கொடிய காலத்துள் ஒரு சாட்சியாக எனது மூன்றாவது கண்ணாகிய கமெரா வுடன் அலைக்கழிந்து, அடிப்படையான வளங்களோ ,பொருளாதார வசதிகளோ,தொழில் நுட்ப வாய்ப்புக்களோ இல்லாத நிலையில், பற்றாக்குறைகளே மலிந்த நிலையில் இருந்து, பெருமளவிலான பதிவுகளையும் செய்திருக்கிறேன் என்பதை இப்போ நினைத்துப் பார்க்க ஆச்சரியமாகவே உள்ளது. நான் நினைக்கிறேன், உலகில் இத்தகைய அனுபவங்கள் வாய்க்கப்பெற்றவர்கள் அரிதாகத்தான் இருக்க முடியுமென்று. பொருளாதாரத் தடையும், தடைசெய்யப்பட்ட கனரக, இரசாயன ஆயுதப் பிரயோகங்களும் கொண்டு சிறிலங்கா அரச படைகளால் நிகழ்த்தப்பட்ட கொடிய, கண்மூடித்தனமான தமிழின அழிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் இருந்து , உண்ணவும் உறங்கவும் கதியற்று, பல்வேறு இழப்புகளையும் கண்டு இரத்தமும் வியர்வையும் கண்ணீரும் சிந்தியபடியே ஓட நிர்ப்பந்திக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் மத்தியில் இருந்து முள்ளிவாய்க்கால் கடைசி வரை சென்று எல்லா வலிகளையும் உணர்வுகளையும் நான் இயன்றவரை பதிவு செய்தேன். எல்லா அனுபவங்களையும், கதைகளையும் இதில் சொல்லிவிடுவது முடியாதது. அதற்கான கால அவகாசமும் இப்போ எனக்கில்லை. காலம் கூடி வரும்போது என் அனுபவங்களில் சிலவாவது பல்வேறு திரைப்படங்களாக, நூல்களாக வெளிவரக் கூடும். இப்போதைக்கு என் போர்க்கால ஒளிப்படங்கள் அதிகம் பேசும்.

நடக்கும் ஒரு நிகழ்வின், அல்லது சம்பவத்தின் ஆவணங்களாக மாறி விடுகின்றன புகைப்படங்களும், காணொளிகளும். உங்கள் புகைப்படங்கள் இனப்படுகொலைக்கான ஆவண ஆதாரங்கள் இல்லையா?

நிச்சயமாக எனது ’இறுதிப் போர்க்கால’ ஒளிப்படங்கள், பல சர்வதேச வல்லாதிக்க சக்திகளின் துணையோடு சிங்களப் பேரினவாத சக்திகள் நிகழ்த்திய, தமிழின அழிப்பு நடவடிக்கைகளை ஆதாரபூர்வமாகப் பேசக்கூடியவையே. அவற்றுள் பலவும், வெவ்வேறு வழிகளில் வெளியாகியிருக்கின்றன. தமிழின அழிப்பு நடைபெறவில்லை என்று சிறிலங்கா அரசோ, இனவாத சக்திகளோ, சட்டத்தரணியோ, அரசியல் வாதியோ, ராஜதந்திரியோ, சர்வதேச அரசுகளின் தலைவர்களோ என் முன் வந்து வாதிடவே முடியாது. நான் வெறும் சடலங்களையும் அழிவுக் காட்சிகளையும் மட்டுமே படமாக்கவில்லை. மக்களின் வலிகளும் உணர்வுகளும் என் படங்களில் பெருமளவுக்கு பதிவாகியிருக்கும். அவற்றையெல்லாம் சர்வதேச அளவில் காட்சிப்படுத்தவும் நூல்களாக்கவும் எண்ணியிருக்கிறேன். இதற்கு, நல்லெண்ணமும் விரிந்த சிந்தனையும் கொண்ட தமிழினச் செயற்பாட்டாளர்களின் ஒத்துழைப்பு தேவைப்படும். எந்த அமைப்புக்களினதோ இயக்கங்களினதோ வல்லாதிக்க சக்திகளினதோ பின்னணியும் எனக்கில்லை. எந்தக் கருத்தியலின் பிடியிலும் நானில்லை. விடுதலையுணர்வும் அற நிலைப்பாடுகளுமே என்னை வழிநடத்தும். சேர்ந்து பயணித்து தமிழினத்துக்கான சரியான நீதிக்கு வலுச்சேர்க்க விரும்புவோர் யாராக இருந்தாலும் வாருங்கள். எனது அண்மைக்கால ஐ.நா உரையின் ஒரு பகுதியை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

”நடந்திருப்பது போர்க்குற்றங்கள் மட்டுமல்ல. இனப்படுகொலை என்று நிரூபிக்கக்கூடிய வகையில் கண்மூடித்தனமான மோசமான குற்றச் செயல்களும் நடந்திருக்கின்றன.போர்க்குற்றங்கள் எனப்படுபவை வேறு, இனப்படுகொலைக் குற்றங்கள் எனப்படுபவை வேறு. இரண்டுக்குமான விளக்கங்களை நான் இதில் சொல்ல விரும்பவில்லை. போர்க்குற்றங்களுக்கான நிறைய ஆதாரங்கள் ஏற்கெனவே வெளிவந்து விட்டன. அவை நிரூபிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன . இனப்படுகொலைக்கான ஆதாரங்களை என்னால் வழங்க முடியும். ஏனெனில் நான் இனப்படுகொலை நடந்த களத்திற்கு உள்ளே இருந்தவன்.”

இப்போது நடந்த ஐநா அமர்வில் நீங்கள் எப்படி உரையாற்றினீர்கள்? அது பற்றிச் சொல்லுங்களேன்? ஐநா அமர்வில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்குமா?

இப்போது நிகழும் சர்வதேச அரசியல் பின்னணியில் பார்த்தால் சிறிலங்கா அரசின் மூலமோ ஐ.நா மூலமோ இன அழிப்பைச் சந்தித்த தமிழினத்துக்கு நீதியான, சரியான பரிகாரம் கிடைத்துவிடப்போவதில்லை என்பது புரியும். எனினும் ஐ.நா மன்றத்தை ராஜதந்திர ரீதியில் கையாளவேண்டிய தேவை தமிழினத்திற்கு இருப்பதைத் தவிர்க்க முடியாது. இது இலகுவான காரியமில்லை. ஐ.நா என்பது சுயமாக,எந்தத் தலையீடுகளும் இல்லாமல் முடிவுகளை எடுக்கும் அமைப்பல்ல. அதைச் சுற்றி உலகின் பலமான, சுயநல நோக்கமே பிரதானமாகக் கொண்ட வல்லரசுகளும், வல்லாதிக்க சக்திகளும் ஆக்கிரமித்திருக்கின்றன. ஐ.நா என்பது இன்று உண்மையான அர்த்தத்தில் சர்வதேச அரசுகளின் அரங்காகவே தென்படுகிறது. தமிழர்கள் ஒரு வலுமிக்க தரப்பாக இல்லாத இந்த ஐ.நா அவையில், தமிழர்களைக் கருவியாகப் பாவித்து எல்லோரும் தத்தம் காரியங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். தமிழின அரசியல் நகர்வுகள் எப்பவும் ஜெனிவா நோக்கியதாக இல்லாமல் சர்வதேச சமூகம் நோக்கியதாக இருக்க வேண்டும். சர்வதேச சமூக மட்டத்தில் தமிழினத்தின் தேவையும் இருப்பும் கவர்ச்சி மிக்கதாகவும் நம்பகத்தன்மையோடும் உறுதிசெய்யப்பட வேண்டும். அப்போது தான் ஜெனிவாவில் கொஞ்சமாவது சாதிக்க முடியும். இது விரிவான விவாதத்துக்குரிய விடையம். தமிழர்கள் ஒரு வலுமிக்க தரப்பாக இல்லாத இந்த ஐ.நா அவையில் ஒரு வலுமிக்க சாட்சியமாக இருக்க நினைத்தேன் . என்னால் இந்த நேரம் செய்யக் கூடியதாக இருந்த ஆகக்கூடிய தமிழினத்துக்கான பங்களிப்பாக இதைக் கருத முடியும். இது ஒருவகையான குறுக்கு வழிமுறை என்றே நினைக்கிறேன். என்னைப் போன்ற அரசியல் செல்வாக்கோ அரசியல் அடையளங்களோ அற்றவர்கள் ஐ.நா மன்றத்தினுள் நுழைவதென்பது சாதாரணமான காரியமல்ல. ஐ.நா வாக இருந்தாலென்ன அமெரிக்காவாக இருந்தாலென்ன, உலகின் எந்த மூலையிலும் தமிழினத்துக்கான, நிதிக்கான என் அறத்தின் குரலைப் பதிவு செய்துகொண்டே இருப்பேன். என் அண்மைக்கால ஐ.நா உரையின் ஒரு பகுதியை இந்த இடத்தில் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும்.

”என் இனத்திற்கு இப்படியொரு அவலம் நிகழ்ந்து, அதை நான் பதிவு செய்து, இப்படியொரு சர்வதேச அரங்கில் காட்சிப்படுத்த வேண்டியிருக்கிற அவல நிலையை எண்ணி மிகவும் வருந்துகிறேன்.

படமெடுக்கும் போது உயிரோடிருந்த பலர் இறந்து போனதைப் பார்த்திருக்கிறேன். அநீதியான முறையில், அநியாயமாக, வலிந்து இறந்துகொண்டிருக்கும் போது, அந்த இறப்பை எந்த வகையிலும் நிறுத்த முடியாமல், பார்த்துக்கொண்டு மட்டுமே படமெடுத்துக்கொண்டு மட்டுமே இருக்கவேண்டிய நிர்ப்பந்தமான, அவலமான நிலைமை உலகில் யாருக்கும் வரக்கூடாது.இலங்கைக்குள் நீண்டகாலமாக நிலவிவருவது இனப்பிரச்சினை தான். தமிழினம் வெளிப்படையாக அழிக்கப்படும் போது தடுத்து நிறுத்த முன்வராத, அரசியல் மற்றும் பொருளாதார நலன்களையும் சுயநல உள்நோக்கங்களையும் கொண்ட வல்லாதிக்க சக்திகள் மலிந்த சர்வதேச சமூகம், தமிழினத்துக்கு சுயநல நோக்கின்றி பொருத்தமான, சரியான தீர்வினைப் பெற்றுக் கொடுக்குமென்று நம்புவது கடினம் தான்.

ஆயினும், இந்த ஐ.நா மன்றத்தில் உண்மைகளோடும் காட்சி ரீதியான ஆதாரங்களோடும் ஒரு உயிருள்ள சாட்சியாக, எல்லா விதமான அநீதிகளுக்கும் எதிரான அறத்தின் குரலை அழுத்தமாகப் பதிவு செய்கிறேன்.சுயநிர்ணய உரிமை என்பது தேசிய இனங்களின் அடிப்படை உரிமை என்று ஐ.நா நிறுவனம் அங்கீகரித்துள்ளது. ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைக் கூறுகளாக ஐ.நா வரையறுக்கின்ற அத்தனைக் கூறுகளையும் கொண்டது தமிழினம். அதற்கு சுயநிர்ணய உரிமை உண்டு.இனப்படுகொலைக்கான நீதியான பரிகாரமே, இலங்கை இனப்பிரச்சினைக்கான நீதியான தீர்வுக்கு வழிவகுக்க முடியும்.இலங்கையில் நடந்தவை போர்க்குற்றங்கள் மட்டுமல்ல, தமிழின அழிப்பும் தான் என்பது சர்வதேச சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படும் போதுதான், தமிழினம் சுயநிர்ணய உரிமை கொண்ட தனியான இனமென்பதும், இன விடுதலைக்கான நீண்ட கால விடுதலைப் போராட்ட நியாயங்களும், தியாகங்களும் ஏற்றுக்கொள்ளப்பட்டவையாக அமைய முடியும்.இந்த ஐ.நா மன்றம் என்பது, வெறுமனே கற்களாலும் சடப்பொருட்களாலும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறதா அல்லது உண்மையான மனிதாபிமானமும் அறமும் நீதி பரிபாலனமும் கலந்து கட்டியெழுப்பப்பட்டிருக்கிறதா என்பதை இந்த ஐ.நா மன்றமே உறுதி செய்துகொள்ளட்டும்.”

உள்நாட்டு விசாரணையை தீர்வாகச் சொல்கிறது ஐநா அமர்வு. இதை மக்களும் உங்களைப் போன்றோரும் ஏற்றுக் கொள்கின்றீர்களா? இன்று ஈழ மக்கள் சந்திக்கும் முதன்மையான பிரச்சனை எது?

இலங்கையில் உள்நாட்டு விசாரணை மூலம் தீர்வு காணச் சொல்லியும், அப்படியேதும் தீர்வு காணப்பட்டால் அது சரியான நீதியான தீவாக அமையுமென்றும் எந்தச் சட்டம்பியால் எந்தத் தர்க்க அடிப்படையில் சொல்ல முடியும். குற்றவாளியையே நீதிசொல்ல வைக்கும் மிகவும் மோசமான நயவஞ்சகமான குற்றச்செயலல்லவா இது. நமக்கிருக்கும் வாய்ப்புக்களை, மேலதிக வாய்ப்புக்களைப் பெறவும் நமக்குத் தேவையான சரியான இலக்கை அடையவும் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் தமிழின அரசியல் தேக்கமான நிலைமைக்குப் போய் மோசமான சரிவை நோக்கி தமிழினம் தள்ளப்பட்டுவிடும் என்பதே யதார்த்தம். சர்வதேச இனப்படுகொலை விசாரணை என்ற கோணத்தில் தமிழர் அரசியலை நகர்த்துவதுதான், இப்போதைக்கு நம் முன் இருக்கக்கூடிய தமிழின விமோசனத்துக்கான வலுமிக்க ஒரே வழி. தமிழினம் பாரிய அழிவைக்கண்டு வலுவிழந்து நிர்க்கதியாக நிற்கும் இந்த நேரத்தில் பலரும் ராஜதந்திர அரசியல் செய்யாமல் சரணாகதி அரசியல் செய்ய முயல்கிறார்கள். இங்கே ராஜதந்திரம் எனப்படுவது சரியான அர்த்தத்தில் சரியான இலக்கை அடைவதற்கான வழிமுறையாகப் பார்க்கப்பட வேண்டும். தமிழினத்தின் கடந்தகால அரசியல் விடுதலைப் போராட்ட ராஜதந்திரச் சறுக்கல்களில் இருந்து கற்றுக்கொண்டு, சமகால சர்வதேச அரசியல் நிலைமைகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, சோரம் போகாமல் அற நிலைப்பாடுகளுடன் முன்னேறக்கூடிய ராஜதந்திர அரசியல் வழிமுறைகளே தமிழினத்துக்கு அவசரமாகவும் அவசியமாகவும் இப்போ தேவைப்படுகிறது.

இன்று ஈழ மக்கள் சந்திக்கும் முதன்மையான பிரச்சனை எது?

இன்று ஈழத்தமிழ் மக்கள் நிறையப் பிரச்சினைகளைச் சந்திக்கிறார்கள். அவர்கள் முன் உள்ள முதன்மையான பிரச்சனையாகச் சொல்லக் கூடியது, இன அழிப்புக்கான சரியான நீதி கோரிய திசையில் அவர்களை உறுதியாகப் பயணிக்க விடாமல் , சர்வதேச வல்லாதிக்க சக்திகளும் சிறிலங்கா இனவாத சக்திகளும் சில தமிழ் அரசியல்வாதிகளும் அவர்களை அலைக்கழிப்பது தான். இதை எதிர்கொள்வதென்பது இலகுவானதல்ல. மிகவும் கடினமானதுமல்ல. உலகெங்கும் பரந்தும் கூறுபட்டும் கிடக்கும், மிகவும் தொன்மை வாய்ந்த நாடற்ற தேசிய இனமாகிய ஈழத் தமிழினம் இன அழிப்பின் நிமித்தம் ஒன்றுபட வேண்டும். தாமதிக்கப்படுகிற நீதி மறுக்கப்படுகிற நீதியாகும்.

உங்களுக்கு திரைப்பட ஆர்வம் உண்டா? அனுபவம் உண்டா?

நிச்சயமாக எனக்கு திரைப்பட ஆர்வம் நிறையவே உண்டு. அடிப்படையில் நான் கலைஞன். நுணுக்கமாகப் பார்த்தால் நான் காட்சிக் கலைஞன். ஓவியம், நாடகம், கவிதை, கதை, ஒளிப்படம் போன்ற கலைகளூடாக சினிமாவை நோக்கி நகர்பவன். சினிமா என்பது உலகில் மிகவும் சக்தி மிக்க காட்சி ஊடகமாகத் திகழ்கிறது. ஆனால் அதில் ஈடுபடுவதென்பது சாதாரணமான காரியமல்ல. தொழில் ரீதியாகப் பார்த்தால் உலகிலேயே மிகவும் கடினமான தொழில் திரைப்படம் எடுப்பது என்று இயக்குநர் மகேந்திரன் என்னிடம் சொன்னார். இதனை அனுபவபூர்வமாகவும் உணர்ந்திருக்கிறேன். உடல், உள ரீதியான முழு ஈடுபாட்டுடன் கூடிய, இரவு பகலென்றில்லாத கடின உழைப்பினை நல்லதொரு திரைப்படத்திற்காக ஒரு இயக்குநர் வழங்கவேண்டியிருக்கும். திரைப்பட உருவாக்கத்தைப் பொறுத்தவரையில் அது தனிநபரோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை. மேலும் அது சமூக, கலாச்சார, பொருளாதார, அரசியல் நெருக்கடிகளைக் கடந்து வரவேண்டியிருக்கும். மகேந்திரன், பாலுமகேந்திரா, தங்கர் பச்சான், பிரசன்ன விதானகே, தர்மசிறி பண்டார நாயக்க, அசோக ஹந்தகம போன்ற குறிப்பிடத்தகுந்த, பல தமிழ், சிங்கள சினிமாக் கலைஞர்களோடு நன்கு பழகியும், சில சந்தர்ப்பங்களில் இணைந்து பணியாற்றியும் இருக்கிறேன். இருந்தாலும் இவர்களின் பிரதிபலிப்பல்ல நான். போர்க்காலத்தில் ஈழத் திரைப்பட முயற்சிகளிலும் , கணிசமான திரைப்படங்களை உருவாக்கும் நிலையிலிருந்த நிதர்சனம் நிறுவனத்தின் வளர்ச்சியிலும் எனது பங்களிப்புக்களும் இருந்தன. அந்த நிறுவனத்தோடான எனது பங்களிப்பானது தரமான ஈழ சினிமாவைக் கட்டியெழுப்புவது சார்ந்ததே. அந்த நிறுவனத்தின் குறிப்பிடத்தகுந்த முயற்சிகளில் ஒரு அழைப்பாளனாகச் சென்று தொழில்நுட்ப ரீதியான பங்களிப்புகளைச் செய்திருக்கிறேன். தனி முயற்சியாக,

வன்னிப்பகுதியில் நண்பர்களைத் திரட்டி, அப்போது யாருக்கும் கிடைக்க முடியாதிருந்த பல நல்ல திரைப்படங்களைத் தேடி எடுத்து, காட்சிப்படுத்தி அதுசார்ந்த கலந்துரையாடல்களை நடத்தியிருக்கிறேன். பல்வேறு மட்டங்களில் திரைப்படத்துறை சார்ந்து பயிற்சிப்பட்டறைகளையும், விரிவுரைகளையும், விமர்சனங்களையும் நிகழ்த்தியிருக்கிறேன். இங்கிலாந்தைச் சேர்ந்த ‘ஸ்கிறிப்ற் நெற்’ என்கிற திரைத்துறை சார் கல்வி நிறுவனம் நடாத்திய, திரைக்கதை உருவாக்கம் மற்றும் திரைப்பட இயக்கம் சார்ந்த, தேர்வு முறையிலான பல மட்டப் பயிற்சிப்பட்டறைகளில் கலந்துகொண்டு, இறுதிச் சிறப்புத் தேர்ச்சி நிலையை அப்போது அடைந்திருந்தேன். ஈழ சினிமா செயற்பாட்டாளர்களாகக் குறிப்பிடக் கூடிய ஞானதாஸ், கேசவராஜன், ஜேசுராசா போன்றோர் அப்போது உடனிருந்தார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக நிறைய நல்ல திரைப்படங்கள் பார்த்தும், சுயமாகத் தேடியும், சிந்தித்தும், உள் இயங்கியும், மானுட வாழ்வை உற்றுநோக்கியும் தான் சினிமாவையும் வேறுபல கலைகளையும் கற்றுக்கொண்டிருக்கிறேன். எந்த ஒரு கலையினையும் குறிப்பிட்ட நபர்களுக்குப் பின்னிருந்தோ நிறுவனங்களுக்குப் பின்னிருந்தோ கற்றுத் தேர்ச்சி பெற்றதாகச் சொல்ல முடியாது. என் சுய தேடலில் இருந்தும், அனுபவங்களில் இருந்தும் உணர்வுகளில் இருந்தும் தான் எனது கலைகளுக்கான, வெளிப்பாடுகளுக்கான வலுவான ஊட்டம் கிடைக்கும்.

ஈழ சினிமா முயற்சிகள் எப்படி இருக்கின்றன?

ஈழ சினிமாவானது, தொழில் தரம் மிகுந்த துறையாக, ஈழத்தமிழ் வாழ்வியலைப் பிரதிபலிக்கும் கலையாக வளர்த்தெடுக்கப்படவேண்டும். நீண்ட காலப் போரானது, வாழ்வினதும் பண்பாட்டுப் போக்கினதும் எல்லாக் கூறுகளையும் பாதித்தது போல சினிமா முயற்சிகளையும் பாதித்தது. நிதர்சனம் நிறுவனத்தின் முயற்சிகளுக்கு திட்டவட்டமான வரையறைகளும் பிரத்தியேகத் தேவைகளும் இருந்தன. இருந்தாலும் குறிப்பிடத்தகுந்த முயற்சிகள் நடந்திருக்கின்றன. அந்தச் சூழலில் ஞானரதன், கேசவராஜன் போன்ற சிலரின் முயற்சிகள் குறிப்பிடப்பட வேண்டியவை. குறிப்பாக ஞானரதன், நிதர்சனம் நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் ஈழ சினிமாவின் தொடர்ச்சிக்கும் குறிப்பிடத்தகுந்த வலுச் சேர்த்திருக்கிறார். எப்படிப் பார்த்தாலும் ஈழ சினிமா முயற்சிகள் குறிப்பிட்ட எல்லைகளைத் தாண்ட முடியாதவையாகவே இருந்தன. போர்க்காலமானது, ஈழ சினிமாவின் இருப்பிற்கும் வலுவான தொடர்ச்சிக்கும் காரணமாக இருந்த அதே வேளை, ஆரோக்கியமான வளர்ச்சிக்குத் தடையாகவும் இருந்தது. அண்மைக்காலமாக ஈழத்திலும் புலம்பெயர் சூழலிலும் சில வரவேற்கத்தக்க முயற்சிகள் நடக்கின்றன. அசலான ஈழ சினிமா என்று சர்வதேச அரங்கில் பெருமையோடு முன் நிறுத்தக் கூடிய முயற்சிகள் மிகவும் அரிது.

தென்னிந்தியாவில் பெரும் துறையாக தமிழ் சினிமா வளர்ந்திருந்தும் , அது ஈழத் தமிழ் சினிமாவுக்கு குறிப்பிடத்தகுந்த பங்கைச் செலுத்தவில்லை. அது தமிழ் சினிமாவுக்கே பெருமைப்படும் படியான, குறிப்பிடத் தகுந்த படங்களைத் தருவது அரிது. ஈழ சினிமாவானது, தென்னிந்திய தமிழ் சினிமாவிலிருந்து ஊட்டம் பெற்றாலும் தொழில் நுட்ப உதவிகள் வேண்டி நின்றாலும் அதன் மோசமான பாதிப்புகளில் இருந்து விலகி தனித்துவமாக வளர வேண்டும். ஈழ சினிமாவானது தனித்துவமான அடையாளங்களுடன் பிரக்ஞை பூர்வமாக கட்டியெழுப்பப்பட வேண்டும். ஒட்டு மொத்த தமிழ் சினிமாவோடு ஒப்பீட்டளவில் சிங்கள சினிமாவைப் பார்த்தால் அதன் வளர்ச்சியும் தரமும் சற்று வியப்புக்குரியதுதான். ஒப்பிட்டளவில் சிங்கள இனமானது, இனரீதியான ஒடுக்குமுறைகளுக்கு உட்பட்டிருக்கவில்லை என்பதும் அதற்கான முக்கிய காரணிகளில் ஒன்றாக இருக்கக் கூடும். ஈழ சினிமா என்று ஒரு கருதுகோள் இருக்கிறது. அதற்கென்று பிரத்தியேகத் தேவைகளும் ஈழத்தமிழின நலன் சார் கடப்பாடுகளும் இருக்கின்றன.

நம்பிக்கை தரும் படைப்பாளியான உங்களுடைய எதிர்கால திட்டம் என்ன?இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்?

காலம் என்னை அலைக்கழிக்காமலிருக்குமென்றால் அதிகமதிகம் எனக்குப் பிடித்த கலைகளோடுதான் என் காலத்தைக் கொண்டாடுவேன். வருங்காலத்தில் நல்ல திரைப்படங்களை இயக்க வேண்டும். அவற்றுக்கான திரைக்கதைகளையோ, ஒளிப்பதிவு சார் விடயங்களையோ என்னால் முழுமையாகக் கையாள முடியும் . நல்ல தயாரிப்பாளர்கள் முதலில் கிடைக்க வேண்டும். என் கடந்தகால, நிகழ்கால அனுபவங்களை எழுத்துக்களாக, நூல்களாக, கலைகளாக வெளிப்படுத்த வேண்டும். நான் அதிகம் எழுதுகிறவனில்லை. அதற்கான அவகாசங்களும் மனநிலையும் அதிகம் இருப்பதில்லை. ஏற்கெனவே வன்னியில் இருந்து எழுதி வெளியான, போர்க்காலத்தில் தொலைந்து போன கவிதைகளும் , கதைகளும், கலை விமர்சனங்களும், பதிவுகளும் முடியுமானால் தேடித் தொகுக்க வேண்டும். கலை இலக்கியச் செயற்பாடுகளுக்கான களங்களை உருவாக்க வேண்டும். முக்கியமாக இப்போது என் கைவசமிருக்கும் எனது ஏராளமான போர்க்காலப் படங்களைச் சர்வதேச ரீதியில் காட்சிப்படுத்தி, நூல்களாக்கி வெளியிடவும், சில விவரணப்படங்களை உருவாக்கவும் வேண்டும். உடனடியாகச் செய்ய முடியாவிட்டாலும் அதற்கான முயற்சிகளில் இருக்கிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, இவற்றையெல்லாம் சாதிக்கப் பொருளாதார ரீதியிலான பலமான நிலைக்கு வரவேண்டும். பார்த்தீர்களா எங்கு போனாலும் எப்படியிருந்தாலும் இப்போதைக்கு நிம்மதியாக, அமைதியாக இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது.
நன்றி ..மின்னம்பலம்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net