ரவுடித்தனம் செய்தால் மாணவர்களுக்கு இனி சிறை ..நீதிபதி இளஞ்செழியன்

seli
யாழ்.மாவட்டத்தில் தெருச் சண்டைகள் மற்றும் ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் சிறைக்குள் தள்ளப்படுவார்கள் என்று எச்சரித்துள்ள யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளம்செழியன், குறித்த மாணவர்கள் உயர் கல்விக்காக பல்கலைக்கழகம் செல்ல முடியாத நிலை ஏற்படும் என்றும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ரவுடித்தனம், தெருச் சண்டித்தனம் என்பவற்றில் ஈடுபடும் பிள்ளைகளை கட்டுப்பாட்டில் வைப்பதற்கு சம்பந்தப்பட்ட பெற்றோர்கள் உடனடியாகச் செயற்பட வேண்டும் என்றும் நீதிபதி இளஞ்செழியன் அறிவுறுத்தியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தனிமனித நலனைவிட சமூக நலனே நீதிமன்றத்தி;றகு முக்கியம். எனவே, ரவுடித்தனத்திலும் தெரு சண்டித்தனத்திலும் ஈடுபடும் மாணவர்களுக்கு, அவர்கள் மாணவர்கள் என்ற ஈவிரக்கம் நீதிமன்றத்தினால் காட்டப்படமாட்டாது. எனவே, தெரு ரவுடிகளாகச் செயற்படும் பிள்ளைகளை, அவர்களுடைய பெற்றோர்கள் உடனடியாகக் கட்டுப்பாட்டினுள் கொண்டு வர வேண்டும்.

சமூகக் குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பில் பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்களும் கூடிய கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக உயர்தர வகுப்பு மாணவர்களின் ஒழுக்கத்தில், அவர்கள் இறுக்கமான ஒழுக்க நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும்.

ஒழுக்கசீலர்களாக மாணவர்களை மாற்றுவதற்கு அச்சப்படும் ஆசிரியர்கள் அச்சமில்லாத இடங்களுக்கு இடம் மாற்றம் பெற்றுச் செல்வது நல்லது. சமூகத்தைக் காப்பாற்றும் பொறுப்பில் இருந்து எந்த அதிபரும் ஆசிரியரும் தவறக் கூடாது.

மண்ணின் எதிர்காலத் தலைவர்களாகவுள்ள மாணவர்கள் சமூக சீர்கேடுகளில் சிக்கி, தங்களுடைய வாழ்க்கையை நாசமாக்கிக் கொள்வதை நீதிமன்றம் அனுமதிக்க முடியாது. எனவே, ரவுடித்தனத்தில் ஈடுபடும் மாணவர்கள் அதனை உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையேல் அவர்களுக்கு சிறை வாழ்க்கை நிச்சயம் என்பதை மறந்துவிடக் கூடாது.

Copyright © 0206 Mukadu · All rights reserved · designed by Speed IT net