ராம் கைது ஆனதும் தானும் செய்யப்படலாம் அச்சத்தில் இருந்தார் தாயார். கண்மணியம்மா

விடுதலைப்புலிகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட தளபதியான ராம் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து தானும் கைது செய்யப்படலாம் எனும் அச்சத்தில் நகுலனும் இருந்ததாக அவரது தாயார் கணபதிப்பிள்ளை கண்மணியம்மா தெரிவித்து உள்ளார்.

விடுதலைப்புலிகளின் சாள்ஸ் அன்ரனி படைப்பிரிவின் சிறப்பு தளபதியாக இருந்த நகுலன் என அழைக்கப்படும், கணபதிப்பிள்ளை சிவமூர்த்தி செவ்வாய்க்கிழமை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டார்.

அவரது கைது தொடர்பில் நீர்வேலி தெற்கில் வசித்து வரும் அவரது தாயாரிடம் வினாவிய போதே அவ்வாறு தெரிவித்தார்.
Nakulan Mother_CI
மேலும் தெரிவிக்கையில்,

எனது மகன் 1975ம் ஆண்டு 10ம் மாதம் 4ம் திகதி பிறந்தவர். பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டு இருந்த வேளை 1989ம் ஆண்டு விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்து கொண்டார். அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் இருந்ததில்லை.

அந்நிலையில் 2007ம் ஆண்டு மே மாதம் 23ம் திகதி ஏறாவூரில் இடம்பெற்ற மோதலில் நகுலன் உயிரிழந்து விட்டதாக 2007ம் ஆண்டு ஜூன் மாதம் 8ம் திகதி இராணுவம் அறிவித்தது. இருந்த போதிலும் விடுதலைப்புலிகள் அது தொடர்பில் எந்த அறிவிப்பையும் விடுக்கவில்லை.

அதன் பின்னர் மீண்டும் 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் இறுதி வார பகுதியில் நகுலன் இலங்கை இராணுவத்தின் இரகசிய முகாம்களில் ஒன்றான மின்னேரியா இராணுவ முகாமினுள் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

அதனை நாம் கேள்வியுற்று ஒருவர் எவ்வாறு இரு தடவை உயிரிழக்கலாம் என நாம் அது தொடர்பில் யாழில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தோம்.

அதனை தொடர்ந்து 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் திகதி மாவீரர் நாள் அன்று எம்மை இராணுவ புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள் மட்டக்களப்புக்கு அழைத்து சென்று அங்குள்ள விடுதி ஒன்றில் எம்மை தங்க வைத்தனர்.

அந்த விடுதிக்கு எமது மகனை அழைத்து வந்து எம்முடன் கதைக்க விட்டனர். அதன் பின்னர் மகனை மீண்டும் அழைத்து சென்றனர். அவ்வேளை மகனுக்கு திருமணத்திற்கு பெண் பாருங்கள் அவரை விரைவில் விடுதலை செய்வோம் என மகனை அழைத்து வந்தவர்கள் கூறி சென்றனர்.

அதன் பின்னர் நாங்கள் மகனுக்கு பெண் பார்த்து திருமணம் முற்றான பின்னர் 2013ம் ஆண்டு நடுப்பகுதியில் புனர்வாழ்வு அளித்து விடுதலை செய்தனர்.

மகனின் விடுதலையை அடுத்து அவருக்கு திருமணம் செய்து வைத்தோம் திருமணத்தின் போது இராணுவத்தினர் மற்றும் புனர்வாழ்வு நிலையத்தில் இருந்து வந்தவர்கள் என பலர் கலந்து கொண்டனர் அத்துடன் அவர்கள் திருமண வேலைகளில் கூட உதவி ஒத்தாசைகள் செய்தனர்.

திருமணம் முடிந்து 15ம் நாள் மீண்டும் எனது மகனை கைது செய்து கொண்டு சென்றனர். பின்னர் ஒரு மாதத்தின் பிறகு விடுதலை செய்தனர்.

திருமணத்தின் பின்னர் மகன் விவசாய நடவடிக்கைளில் ஈடுபட்டு வந்தார் அவருடைய மனைவி ஆசிரியை ஆவார். இவர்களுக்கு இரண்டு வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது.

அவ்வேளைகளில் நீர்வேலி இராணுவ முகாமில் இருந்து வருவதாக ரவி மற்றும் மோகன் என தம்மை அறிமுகம் செய்து கொண்ட இருவர் வந்து மகனுடன் கதைத்து செல்வார்கள். சில வேளை தமது முகாமுக்கு அழைத்து செல்வார்கள். அங்கு என்ன நடந்தது என மகன் எமக்கு எதுவும் கூறுவதில்லை.

எமது மகனுடன் தொடர்பில் இருந்த ரவி மற்றும் மோகன் ஆகிய இருவரும் எம்முடனும் நன்றாகவே பழகினார்கள் எம்முடனும் வந்து நலம் விசாரித்து கதைப்பார்கள்.

இந்த சம்பவங்களுக்கு பின்னர் கடந்த பல மாதங்களாக எவருடைய தொந்தரவும் இல்லாமல் மகன் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

அந்நிலையில் கடந்த 25ம் திகதி திங்கட்கிழமை மாலை வேளை வீட்டுக்கு முச்சக்கர வண்டியில் மூவர் வந்து இருந்தனர். அதில் ஒருவர் நன்றாக தமிழ் பேசினார் மற்றவருக்கு தமிழ் தெரியாது என கூறினார் மற்றையவர் முச்சக்கர வண்டியில் அமர்ந்து இருந்தார்.

தமிழ் கதைத்தவர் மகன் எங்கே என கேட்டார். மகன் வன்னியில் உறவினர் ஒருவரின் மகளின் பூப்புனித நீராட்டு விழாவுக்கு சென்று உள்ளார் என கூறினேன்.

அப்ப நாங்கள் நாளை வருகின்றோம் என கூறி சென்றார்கள். அதன் படி மறுநாள் செவ்வாய்க்கிழமை(நேற்றைய தினம்) காலையில் வீட்டுக்கு வந்தார்கள் வந்தவர்கள் மகன் எங்கே என கேட்டார்கள். அவ்வேளை மகன் தோட்டத்தில் உள்ளார் ஏன் மகனை விசாரிக்கிறீர்கள் என கேட்டேன். மகனிடம் விசாரணை ஒன்று மேற்கொள்ள வேண்டும் என கூறினார்கள். .

அதன் பின்னர் தோட்டத்திற்கு செல்லும் வழியை கேட்டார்கள். விசாராணை செய்ய என்றால் நான் மகனை வீட்டுக்கு அழைக்கின்றேன். வீட்டில் வைத்து விசாரணை செய்து விட்டு செல்லுங்கள் என நான் கூறினேன். அவர்கள் அதற்கு சம்மதித்தார்கள்.

நானும் மகனை அவர்களின் கூற்றை நம்பி அழைத்தேன். வீட்டுக்கு வந்த மகனை யாழில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரித்து விட்டு விடுகின்றோம் என அழைத்து சென்றார்கள். அதன் போது தந்தையாரும் தானும் வருவதாக கூறி அவர்களுடன் சென்றார்.

அங்கு சென்ற பின்னர் மேலதிக விசாரணைக்காக வவுனியா அழைத்து செல்கின்றோம் என கூறி தந்தையை வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

புனர்வாழ்வு பெற்று திரும்பிய மகனின் கைது தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளோம். என தெரிவித்தார்.
குளோபல் தமிழ்

Copyright © 2186 Mukadu · All rights reserved · designed by Speed IT net