மாண்ட தோழர்களே உங்களுக்கு வீரவணக்கம்.வேலன்

மே 1 பேரெழுச்சி ஏற்பாடுகள்….
may3
மேமாதம் என்றால் எல்லோரும் உணர்ச்சிப் பிரவாகம் எடுத்து புறப்பிட்டு விடுவர். இவர்கள் எல்லோருமே தத்தம் நாட்களில் முக்கிய தினமாகக் கொண்டு இருக்கின்றனர். இந்த வேளையில் தொழிலாளர் வர்க்கத்தின் தினத்தையும் அபகரித்துக் கொண்டு மக்களை திசை திருப்புவதற்கு போட்டி போட்டுக் கொண்டு உலகில் இருக்கின்ற தொழிலாளர் விரோத சக்திகள் அனைவரும் புறப்பட்டு விடுவார்கள். இதுதான் பல பத்து ஆண்டுகளாக நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. இவைகளில் ஒரு மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும். உண்மையான வர்க்க முகாம் எது என்பதை தெளிவுபடுத்தி விழிப்புணர்வு கொள்ள வைப்பது அவசியமாகும்.
மே தினம் உழைப்பாளருக்கு உரியது இது
உற்பத்தி சாதனத்தை உடமையாகக் கொள்ளாதவர்கள் > உற்பத்தி சக்தியை விற்றுப் பிழைப்பவர்கள்
உற்பத்திச் சாதனத்தை அரசின் கீழ் கொண்டுவர வேண்டும்என்று போராட வேண்டும் என்று அறிவுறுத்தும் நாள்
உற்பத்தி சக்தி விற்றுப் பிழைப்பவர்கள் உற்பத்திச் சாதனங்களை கட்டுப்படுத்தும் உரிமையை அறிவுத்தும் நாள்.
தமது உரிமைக்காக போராடும் நாள். தெருக்களில் நனையப்பட்ட இரத்தங்களை கொடியாகக் கொண்டு ஒன்றிணையும் நாள். தமது உரிமைப் போராட்டம் சர்வதேசியம் கொண்டது என்று வலியுறுத்தும் நாள். ஆகவே இந்த நாளை எமக்காக விட்டு விடுங்கள்.
உலக வரலாறு தொழிற்துறை யுகத்திற்கு வந்த பொழுது தொழிற்சாலை ஊழியர்களை உருவாக்கிக் கொண்டது. இவர்கள் மூலதனத்தை தமதாக்கிக் கொள்ளவில்லை. இவர்கள் மூலதனம் கொண்ட பணக்காரர்களின் ஆலைகளில் தமது உழைப்பை விற்றுப் பிழைத்தனர்.
தாம் பெறும் ஊதியத்திற்கு பதிலாக தமது உழைப்பினை 16- 20 மணித்தியாலங்கள் விற்கவேண்டியிருந்தது. இவற்றில் இருந்து விடுதலை பெற வேண்டியே முதலில் போராட்டத்தைத் தொடங்கினர்.
முதலில் குறைந்த நேரம் கேட்டுப் போராடி வந்தனர். இந்த நேரம் 10மணித்தியாலங்கள் என நிர்ணயித்தே போராடினர். அமெரிக்க நகராகிய பிடடெல்பியா மாநிலத்தில 1806 முதல் முதலில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தலைவர்கள் பலரை சதி வழக்குகளில் அவர்களை சிக்கவைத்தனர். இவைகள் அனைத்துக் காலத்திலும் போராட்ட முன்னணி வீரர்கள் கொல்லப்படுவதை சரி வழக்குகளில் சிக்கவைப்பது பணம் படைத்த வர்க்கத்தவர்களின் நடைமுறையாகவே இருந்து வந்துள்ளது. இவற்றையும் மீறி பல போராட்டங்கள் சிதைவுகளுக்கு மத்தியிலும் தொடர்ந்தன.
உலகின் முதலாவது தொழிற்சங்கம் அமெரிக்க நகராகிய பிடடெல்பியா மாநிலத்தில் தான் உருவாகியது. இதற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர்தான் பிரித்தானியாவில் தொழிற்சங்கங்கள் உருவாகியது. 1827ல் பிடடெல்பியா கட்டிடத்தொழிலாளர்கள் நடத்திய வேலை நிறுத்தத்தில் தான் 10 மணிநேர வேலை நேரம் குறித்த கோரிக்கை பிரதானமாக வைக்கப்பட்டது. தொழிலாளர்களுக்காக தொழிலாளர்களுக்காக வாதிடுபவன் (Workingmen’s Advocate) என்ற பத்திரிகை கொண்டுவரப்பட்டது.
1837இல் சில இடங்களில் 10 மணி வேலை நேரம் அழுலுக்கு வந்தது. இதேபோல 1856ல் அவுஸ்ரேலியாவில் 10 மணி வேலை நேரம் அழுலுக்கு வந்தது.
இவ்வாறு பல தோல்விகளையும் வெற்றிகளையும் சந்தித்துக் கொண்டு போராட்;டங்களின் மூலம் தொழிலாளர்களின் வர்க்க உணர்வு என்பது அடையாளம் காட்டப்படுகின்றது. இந்தக் காலத்தில் தோன்றிய பலதலைவர்கள் மனித குலத்திற்கு முன்னேற்றம் கொண்ட பாதைகளைக் காட்டினார்கள். இந்தக் கால இடைவெளிகளில் பொதுவுடமை அறிக்கை வெளியிடப்படுகின்றது. இந்த அறிக்கையின் மூலம் போராட்டத்திற்கான வழியைக் காட்டியது. இதே போல ஆசான் மார்க்ஸ் எழுதிய மூலதனமும் முதலாளித்துவ வர்க்கத்தின் கொடிய முகத்தை உழைக்கும் மக்கள் முன் கொண்டு வந்தது. அவர் முதலாளித்துவ வர்க்கத்தை அங்குலம் அங்குலமாக ஆய்வு செய்தார்.
இந்தக் காலத்தில் முதலாம் அகிலம் தொழிலாளர் வர்க்கத்திற்கு வழிகாட்டியது. உலகத் தொழிலாளர்களிடையே வர்க்க உணர்வை பெருக்க போராடியது. இவர்கள் இன, மத, மொழி,தேச எல்லை கடந்து தொழிலாளர் வர்க்கம் என்ற உயர் விழுமியத்தை உலகிற்கு வெளிக்கொணர்ந்தது.
மேதினத்திற்கு காரணமாக இருந்த போராட்டத்தின் தயாரிப்பை 1885களில் தொழிலாளர்களின் உரிமை (Rights of Labour) என்ற அமைப்பு ஒழுங்கு செய்தது. அதில் உறுப்பினர்கள் உணர்வு பூர்வமாக சேர்ந்தனர். இதனால் உறுப்பினர்களின் எண்ணிக்கை பெருகியது. போராட்டங்களின் எண்ணிக்கைகளும் அதிகரித்தன. பல தொழிற்சாலைகளின் வேலை நிறுத்தங்கள் தொடரப்பட்டன.
1886ம் ஆண்டு இடதுசாரி தொழிலாளர் இயக்கத்தின் ஐக்கிய முன்னணியினால் போராட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டது.
1886 நடைபெற்ற மே தின ஊர்லவத்தில் 5 லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொண்டார்கள். இதில் கலந்து கொண்டவர்கள் பலர் காயமடைந்தனர், ஒரு இராணுவ அதிகாரி, 7 காவலர்கள், 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். இதன் பின்னராக பல போராட்டத்தலைவர்கள் கொல்லப்பட்டார்கள். இவர்களின் போராட்டம் என்பது ஆரம்பத்தில் வேலைநேரக் குறைப்பாக இருந்தது குறிப்பிடத்தக்கதாகும். இது இருந்த பொழுதிலும் தொழிற்புரட்சியினால் தொழிலாளர் வர்க்கத்தின் உருவாக்கம் என்பது மற்றைய நாடுகளிலும் இவ்வாறான உரிமை கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முதலாம் சர்வதேச அகிலம் குரல் கொடுத்தது, இவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தனர். இதன் பின்னர் உருவாகிய இரண்டாம் அகிலமும் போராட்டங்களை முன்னடத்தியது, தலைமை தாங்கியது,அறிவுறுத்தல்கள் வழங்கியது.
1889ல் கூடிய இரண்டாம் சர்வதேச அகிலத்தின் 1வது மாநாட்டில் 8மணி நேர வேலைக்கு போர்க்குரல் கொடுப்பதாக அறிவித்தது. அந்த மாநாட்டில் ‘எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணிநேரத்தை சட்ட பூர்வமாக்க கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பரீஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது.” இதன் அறிவுறுத்தலின் பேரில் உலகில் அனைத்து நாடுகளிலும் போராட்டத் திகதியாக்கப்பட்டது.
இது குறித்து ஏங்கெல்ஸ் பின்வருமாறு கூறுகின்றார்.
‘நான் இந்த வரிகளை எழுதிக் கொண்டிருக்கும் இதே நேரத்தில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பாட்டாளி வர்க்கம் தனது பலத்தை ஆய்வு செய்து கொண்டிருக்கின்றது. ஆது முதன் முறையாக ஒரே கொடியின் கீழ் ஒரு படையாக 8 மணிநேர வேலை நாள் சட்டமாக வேண்டும் என்ற ஒரே உடனடியான நோக்கத்திற்காக திரண்டிருக்கிறது. நாம் பார்க்கக் கூடிய இந்த அற்புதமான காட்சியை உலகெங்கிலுமுள்ள முதலாளிகளையும், நிலப்பிரபுக்களையும் எல்லா நாடுகளிலுமுள்ள பாட்டாளிகளும் இணைந்து விட்டனர் என்ற உண்மையை உணரச் செய்யும். மார்க்ஸ் மட்டும் இந்த காட்சியை பார்ப்பதற்கு என்னுடன் இன்று உயிரோடிருந்தால்..” இவ்வாறு தொழிலாளர் தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றார்.

இதே காலத்தில் மேதினத்தை வெறும் ஓய்வு நாளாகவும் பொழுது போக்கு நாளாகவும் மாற்றவும் முயற்சிகள் நடைபெற்றேறியது. எனினும் போராட்ட முன்னணிப் போராளிகளின் முயற்சியால் காலத்துக்கு காலம் அவர்களை வெற்றி கொள்ள முடிந்தது. ஆனால் இன்றைய நிலை என்பது வெறும் பிற்போக்குத் தனத்தின் கூடாரமாகவே மேதினம் நினைவு கூரப்படுகின்றது.
நினைவு கூறலா அல்லது விடுமுறை தினமா அல்லது போராட்டத்தை தொடருவதற்கான பயிற்சிப் பட்டறையா?

ஐரோப்பிய நிலை….
ஐரோப்பாவில் இரண்டாம் அகிலத்தின் போராட்டப் பாதையின் தெரிவானது தொழிலாளர் வர்க்கத்திற்கு எதிரானதான இருந்தது. இவர்கள் சொல்லில் சமதர்மத்தையும், செயலில் முதலாளித்துவத்தையும் பின்பற்றினர். இவர்களை சமூக ஜனநாயகவாதிகள் என அழைத்துக் கொள்கின்றனர். இவர்கள் தொழிலாளர் வர்க்கத்தினரிடையே உருவான பிரபுத்துவ பிரிவினருக்காக கொள்கைகளை மாற்றிக் கொண்டனர். இதனால் முதலாளித்துவப் பாதையாளர்களாக மாறினர். சமூக ஜனநாயகவாதிகள் இரண்டாம் அகிலம் என்ற சர்வதேச தொழிலாளர் வர்க்க அமைப்பையே தமது அமைப்பாக பின்னாளில் கொண்டு வந்தனர். பிரபுத்துவ வர்க்கப் பிரிவினரே மேதினத்தை கழியாட்ட விழாவாகக் கொண்டு வந்தனர். இதனால் சர்வதேச உழைப்பாளிகள் இதனைத் தவிர்த்தி மே தினத்தில் வருகின்ற முதலாவது ஞாயிறு அன்று உழைப்பாளிகள் தினத்தை அனுசரிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதில் இருந்து மாறுபட்டு 1917 நடைபெற்ற முதலாவது சமதர்ம நாட்டின் உருவாக்கம் என்பது உலகின் எல்லாப் பாகங்களிலும் உள்ள தொழிலாளர்களுக்கு உத்வேகத்தை ஊட்டியது. இந்தப் புரட்சியும், அடிமைத்தனத்தில் இருந்து வெளியேற வேண்டுமென்ற உத்வேகமும் இந்த தினத்தில் உறுதிமொழி எடுக்கும் தினமாகவும், மக்களை அணிதிரட்டும் தினமாகவும் கொள்ளப்பட்டது.
ஆனால் தொடர்ந்தும் சமூக ஜனநாயகவாதிகள் தொடர்ச்சியாக அவர்களும் உழைப்பாளர் பிரிவாக தம்மை அடையாளம் காட்டிக் கொண்டு மேதினத்தை அனுசரிக்கின்றனர். இருந்த போதிலும் மேதினத்திற்கு என்றே ஒருக்கிணைப்புக் குழுக்களை ஏற்படுத்தி ஒரே ஊர்வலமாக அனேக சந்தர்ப்பங்களில் நடைபெறுகின்றன. இந்த ஊர்வலத்தின் போது அவரவர் பதாதைகளை தாங்கிச் செல்கின்றனர்.
இந்தப் ஊர்வலத்தில் யாரும் விண்ணப்பிக்க முடியும். இந்த ஊர்வலத்தில் ஜனநாயகக் கோட்பாட்டிற்கு அமைய பிற குழுக்களை ஏற்றுக் கொள்கின்றனர். இவ்வாறு இணைந்து கொள்கின்ற மற்றைய தேசத்தவர்கள் தத்தம் கருத்துக்களை முன்கொண்டுவர சந்தர்ப்பம் கொடுக்கப்படுகின்றது.
அதே வேளை ஒருங்கிணைப்புக்குழுக்களிடையே முரண்பாடுகள் தோன்றுவதுண்டு. அது குறிப்பாக சமூக ஜனநாயக கட்சிகளுக்கும் – பொதுவுடமைவாதிகளுக்கும் இடையே முரண்பாடு ஏற்படுவதுண்டு. அவ்வேளை வெவ்வேறான ஊர்வலங்களை நடத்திக் கொள்வர். சிலவேளைகளில பிரதான ஊர்வலம் தொடங்குவதற்கு முன்னரே தமது ஊர்வலங்களை நடத்துவர்.
இங்கிருக்கின்ற பிரச்சனை எல்லா இடங்களிலும் ஒரே தன்மை கொண்டதுதான். உழைக்கும் வர்க்கம் வர்க்க ரீதியாக விழிப்படையாமல் இருப்பதாலும்> பிரபுத்துவ வர்க்கதன்மை கொண்ட தொழிலாளர்கள் தமது பரந்த மனப்பான்மையை வெளிப்படுத்தும் கோசங்களையும்> நாடாளுமன்றத்தில் ஊறித்திளைத்த கட்சிகளின் கொள்கை பிழைப்பு நடவடிக்கைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இவ்வாறான கட்சிகள் ஐரோப்பாவில் தொழிலாளர் கட்சி அல்லது சமூக ஜனநாயகக் கட்சி அல்லது சோசலிசக் கட்சி என்று வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகின்றது. இந்தக் கட்சிகள் சோலிசப் பாதையை கைவிட்டு விட்டார்கள். இவர்களின் அரசியல் முதலாளித்துவ பொருளாதார சித்தாந்தத்தை பின்பற்றுவன. இந்தக் கட்சிகளின் ஆட்சியில் தான் உலகின் பல யுத்தங்கள் நடைபெற்றிருக்கின்றன. முதலில் முதலாம் உலக யுத்தத்தின் போது தாயகத்தைப் பாதுகாப்போம் என்று மற்றைய தேசத்தின் உழைக்கும் வர்க்கத்தவர்கள், சொந்த உழைக்கும் மக்களின் புதல்வர்கள் களத்தில் மாண்டு மடிய ஆதரவு கொடுத்தனர். இவர்கள் செய்திருக்க வேண்டியது என்னவெனில் சந்தையைப் பிடிப்பதற்காக தொடுக்கப்படும் யுத்தத்திற்கு எதிராக செயற்பட்டிருக்க வேண்டும்.
இவர்களின் வழிவந்தவர்களே இன்று பெயரில் சமதர்மக் கட்சிகள் என்று கூறிக் கொண்டு உலகின் பலபாகங்களிலும் அமெரிக்க வல்லரசு தொடுக்கும் புதிய உலக ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான போரை ஆதரிக்கின்றனர். இவர்கள் படைகளை அனுப்பி உலகத்தில் இருக்கின்ற வளங்களை தமக்கு இலகுவாக கிடைப்பதற்கு வழிவகை செய்கின்றனர். ஐரோப்பா, அமெரிக்கா தவிர்ந்த உலகம் வறிய நாடுகளை இவர்களின் கழிவுகளை சுமக்கும் நாடுகளாகவும், மலிந்த வகையில் கனிவளங்களையும், மூலப்பொருட்களையும் கொடுக்கும் நாடுகளாக தொடர்ந்து வைத்திருப்பதை கொள்கையாகக் கொண்டிருக்கின்றனர். சோசலிசத்தின் பெயரில் இயங்கும் முதலாளித்துவ பாதுகாவலர்கள் தொடர்ந்தும் தொழிலாளர் வர்க்க நலன் என்றும், ஜனநாயகத்தை (promoting) விதைப்பதான கூறிக் கொண்டு மற்றைய தேசங்களின், தேசிய இனங்களின் அடையாளத்தை அழிக்கின்றனர்.

இதில் ஐரோப்பாவில் வாழும் தமிழர்கள் தேசியம் என்ற குடையின் செல்பவர்கள் தொழிற் சங்கத்ததைப் பற்றியோ அல்லது தொழிலாளர் வர்க்கப் போராட்டம் பற்றியோ தெளிவு இல்லாதவர்கள். இலங்கையில் பழக்கப்பட்ட சமூக உறவின் எச்சங்களைக் கொண்டவர்களாகவே இருக்கின்றனர். அதாவது ஆணவம், அகம்பாவம், ஆதிக்கத்திமிர், ஆண்டான் அடிமைச் சிந்தனையான இவர்கள் கீழானவர்கள் என்ற மனப் போக்கு இவைகளை உள்ளடக்கியதாகவே இருந்தது. இவர்கள் தான் கொடி பிடித்துக் கொண்டு செல்பவர்கள். இவர்களுக்கு மேதினம் என்றால் தேசியத்திற்காக கொடிபிடிப்பதுதான் அர்த்தம் என விதைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கூறும் உலகத் தொழிலாளர் ஒற்றுமைதான் என்ன? இதுபற்றிய சிந்தனையை 2009 பின்னராக காலத்தில் கூட கண்டடைய முயற்சிக்கவில்லை.
மே தினம் என்றாலே எமது நாடுகளில் ஏதே திருவிழாவிற்கு ஆயத்தம் செய்வது போல அனைத்துக் கட்சிகளும் ஆயத்தத்தில் இறங்கி விடுகின்றனர். இவர்கள் ஏன் இதனை அனுசரிக்கின்றனர் என் எந்த அடிமட்ட தொண்டனும் கேட்பதும் இல்லை. அதுபற்றி விளக்கம் கொடுக்க கட்சியும் இல்லை. இதற்கு ஒவ்வொருவரும் வெவ்வேறு விளக்கத்தை தருவர். இவற்றில் இருந்து இன்றைய நிலையைப் பார்ப்போமானால் முதலாளித்துவ கட்சிகளின் கழியாட்ட விழாவாக இன்று மாறியுள்ளது. முதலாளித்துவ கட்சிகளுக்கும் மே தினத்துக்கும் தொடர்பு இருக்கின்றதா?
இப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதே முதலாளித்துவத்தின் சுரண்டலை எதிர்த்தே. இங்கு உற்பத்தி சாதனத்தை உரிமையாகக் கொண்டவர்கள் கட்சியை வழிநடத்துகின்றனர். இவர்களின் அரசியல் என்பது முதலாளிகளின் நலன் கொண்டதாகவே இருக்கின்றது. வர்க்க முரண்பாடுகள் கொண்டிக்கும் நிலையில் சக்திகள் ஒன்றோடொன்று போராடிக் கொண்டிருக்கின்ற போது வர்க்கங்களுக்கு அப்பால் நடுநிலையாக நிற்பதாக வெளியில் காட்டிக்கொண்டு நிற்கும் அரசு உள்ளது.
இன்றைய கட்சிகளை எடுத்துக் கொண்டால் திறந்த பொருளாதாரம் தான் எனக் பிரகடனப்படுத்துகின்றனர். தேசியத்தை பேசிக் கொண்டு அவர்களும் திறந்த பொருளாதாரம் என்றுதான் பிரகடனப்படுத்துகின்றனர்.
இவ்வாறாயின் சொத்துரிமையை பாதுகாப்பவர்களுக்கும் கூலிக்கு உழைப்பை விற்பவர்களின் நலனுக்கும் ஏதாவது தொடர்பு இருக்கின்றதா? இவர்கள் இருவரின் நலனும் வெவ்வேறானவையாகும். ஓன்று சுரண்டுபவர் மற்றது சுரண்டப்படுபவர்.
இவர்கள் இவ்வாறு இந்த நாளை கொண்டாடுவதன் மூலம் கழியாட்டமாக இந்த நாளை பயன்படுத்துகின்றனர். இவர்களின் மேடைகளில் திரைப்பட நடிகர்கள், பிரபல இசையமைப்பாளரால் இசைக் கச்சேரி நடத்தப்படும். இது ஒரு பெரும் திருவிழா போல நடத்தப்படும்.
பிரதான மைதானத்தை தமக்குரியதாக்க இப்பவே போட்டிகள் பிரதான கட்சிகளிடையே ஏற்பட்டுள்ளன. ஆனால் சுதந்திரமான தொழிலாளர் அமைப்புக்கள் நிர்மூலம் செய்ப்பட்ட நிலையில் தான் முழு தேசம் இருக்கின்றது. வடக்கில் இராணுவ பிரசன்னம் மக்களை சாப்பிட மட்டுமே வாயைத் திறக்கவும் நிலைதான் இருக்கின்றது.
அதேவேளை மற்றைய தேசிய இனங்களை அடக்கிய நிலையில் பிற்போக்கு தேசியமாக உருவெடுத்த நிலையில் தொடர்ச்சியாக அதிகார கட்டமைப்பை தமது கையில் வைத்திருக்கவும், உழைக்கும் மக்களை திசைதிருப்பிக் கொள்ளவும் இந்த மேதினம் பயன்படுத்தப்படுகின்றது. இடதுசந்தர்ப்பவாதிகளும் தேசத்தின் சுயநிர்ணயத்தை ஏற்றுக் கொண்டால் எங்கே சிங்கள பெருந்தேசிய மக்களின் உணர்வு பாதிக்கப்படுமே என்று செயற்படுகின்றார்கள்.

குறுக்கீடுகள்…..
தொழிலாளர்களை பிரித்து வைப்பதற்கோ அல்லது வர்க்க உணர்வைப் பெற முடியாது செய்வதற்கு பல சக்திகள் இன்றைய பொருளாதார அமைப்பால் உருவாக்கப்படுகின்றனர். இவைகள் ஊடகங்கள், உப கலாச்சாரங்கள், புதிய மதக்குழுக்கள், புதிய நோய்தீர்க்கும் ((Healing Therapy) பாதைகள் என புதிது புதிதாக அறிமுகப்படுத்தப்படுகின்றது. இவற்றின் மூலமாக மக்களின் சமூக உறவில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றனர். இவர்களில் பொருளாதார அமைப்பினால் உருவாக்கப்படும் துன்பியல் விளைவுகளை சரிப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர். இதில் வேடிக்கை என்னவெனில் இந்தப் பொருளாதார அமைப்பின் விழைவே எல்லாவற்றிற்கும் காரணம் என தெரிந்தும் ஆழும் வர்க்கத்தின் ஆதரவுப் பிரிவுகள் உப வழிகளைக் காட்டி மக்களை திசைதிருப்புவதுடன் அவற்றை ஒரு சந்தையாகவும் பயன்படுத்துகின்றனர்.

அரசியல் கட்சிகள் போலவே குறிப்பாக கிறிஸ்தவ மதப்பிரிவினரும் மேதினத்தைக் அணுசரிக்கின்றனர். இவர்கள் இதற்கு மத அடையாளம் கொடுக்கின்றனர். இலங்கையில் சூசையப்பரை தொழிலாளர்களின் தெய்வமாக வழிபடுகின்றனர் என. இந்தத் திகதியிலே சூசையப்பர் தினமாக நினைவு கூர்கின்றனர்.
கட்சிகளின் தொழிற்சங்கங்கள் என்று ஒவ்வொரு கட்சிகளும் வைத்துக் கொண்டு தொழிலாளர்களை அவர்களின் வர்க்க நலன் பொருட்டு ஒன்று சேர விடாது. தத்தம் கட்சியின் மீதான வெறிப்பார்வைகளை ஊட்டிக் கொண்டு உழைப்பாளிகளை நடிகர்களின் ரசிகர் மன்ற உறுப்பினருக்கு கீழாகவே இவர்கள் வைத்திருக்கின்றனர். இந்த நிலமை இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளில் ஒரே நிலமைதான் இருக்கின்றது.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி, ஐ.தே.க, இலங்கை தொழிலாளர் கொங்கிரஸ் உட்பட மற்றைய கட்சிகள் எடுத்துக் கொண்டால் எல்லாக் கட்சிகளுமே உற்பத்தி சாதனத்தை உடமையாக கொண்ட வர்க்கத்தவர் நலன்பேணும் கட்சிகளாகவே இருக்கின்றன. இவ்வேளையில் இவர்கள் தமக்கென தொழிற்சங்கங்களை வைத்துக் கொண்டு உழைக்கும் மக்களை பிரித்து வைத்திருக்கின்றனர். இன்றைக்கு தொழிற்சங்கம் என்ற போர்வையில் அதன் தலைமையில் இருப்பவர்கள் முதலாளிகளே. தொண்டைமான்கள் என்ன ஒன்றும் இல்லாத ஏழையா? இல்லைவே இல்லை. இவர்கள் மக்களின் இயலாமையை பயன்படுத்திக் கொண்டு வருகின்ற காரணத்தினால் இவர்களால் இவர்களின் வர்க்க நலனைப் பாதுகாக்கும் பொருட்டு எந்தக் கட்சி வந்தாலும் அமைச்சர்களாக இவர்களால் இடம் பிடிக்க முடிகின்றது.
தொழிலாளர் வர்க்க நலன் என்று கதைத்துக் கொண்டு அரசு என்பதே உழைக்கும் மக்களுக்கான ஒடுக்குமுறை ஸ்தாபனம் தான். இந்த அமைப்பிற்கு உட்பட்டதுதான் இராணுவம், பொலீஸ், நீதித்துறை என்பன உழைக்கும் மக்கள் எழுச்சி கொள்கின்ற போது அடக்கும். இவர்கள் முதலாளி வர்க்கத்தின் பாதுகாவலர்களே. இவ்வாறான வேளையில் முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் அமைப்பினுள் அங்கம் வகித்துக் கொண்டு உழைக்கும் மக்களுக்காக போராட முடியும் என்று எவரும் கூற முடியாது. இது உழைப்பாளிகளுடன் எப்பொழுதும் முரண் கொண்ட ஒரு நிறுவனம் அமைப்பு.
ஏன் ஜே.வி.பி, ல.ச.ச.க, இ.க.க இவைகளை அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளாக இருந்திருக்கின்றார்கள். உழைக்கும் மக்களின் நலனைப் பேணக் கூடியதாக இருக்க சந்தர்ப்பம் இல்லை. ஏன் ஜே.வி.பி, ல.ச.ச.க, இ.க.க இவைகளை இவ்வாறான வரையறைக்குள் இருந்துதான் இதனைப் பார்க்க முடியும். இவ்வாறு இருக்கையில் உழைக்கும் மக்கள் இவ்வாறான பிற்போக்குவாதிகளுக்குப் பின்னால் அணிதிரள்வது அவர்கள் தமது தலையிலே மண்ணை அள்ளிப் போடுவதற்கு ஒப்பாகும்.
இனி மறுபடியும் மேதினத்தை உழைக்கும் மக்களுக்குரியதாக்கிக் கொள்ள வேண்டும். போராட்ட வரலாற்றில் முன்னர் 8 மணிநேர வேலை என்று தொடரப்பட்ட பொருளாதார குறிக்கோளுக்கான போராட்ட உள்ளடக்கம் காலத்துக்கு காலம் மென்மேலும் வளர்ச்சிடைந்தே வந்திருக்கின்றது.
இன்று சுவீடன் நாடு 6 மணிநேரத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்கள். இங்கு தொழிலாளர் வர்க்கத்தின் உரிமை மென்மேலும் உயர்த்திக் கொண்டு செல்ல வேண்டிய தேவை உள்ளது. இங்கு தொழிற்சங்கப் போராட்டங்கள் என்பது வர்க்கப் போராட்டத்தின் ஒரு அங்கமாகும். இங்கு தனியே தொழிலாளர் வர்க்கத்தின் உரிமையை உறுப்படுத்துவது நோக்கமாகும். இனிவருங்காலத்தில் 6 மணிநேரத்திற்கான போராட்டப்பாதையை வகுக்க வேண்டிய தேவையுள்ளது. ஆனால் மேலதிகமாக உழைப்பாளர்களை வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டு ஓய்வு பெறும் வயதை அதிகரித்துக் கொண்டு செல்வது என்பது உபரியாக தொழிலாளர்களை வைத்திருப்பதற்காகும். இவ்வாறு உபரி வேலையில்லாத தொழிலாளர்களை வைத்துக் கொள்வதன் ஊடாக தொழிலாளர்களை பிரித்தாள இலகுவாக இருக்கும் என்பதாகும்.
தொழில் வளர்ச்சியின் ஆரம்பத்தில் ஆண்தொழிலாளர்களே உழைப்பை விற்கின்ற நிலைக்கு வந்தனர். இவர்களை நம்பியே இவர்ககளின் குடும்பம் இருந்திருக்கின்றன. தொழிற்துறை வளர்ச்சியினால் ஏற்பட்ட தொழிற்பிரிவினை என்பது சிறுவர்கள், பெண்கள் என உழைப்பை விற்பதற்காக சந்தைக்கு வந்தனர். இவர்களுக்கு கொடுக்கும் சம்பளம் ஆண் தொழிலாளிக்கு கொடுக்கும் கூலியை விட குறைவானதாக இருந்தது. இந்த நிலையை மாற்றும் போராட்டங்கள் முழுமையாக வெற்றி பெறாவிடினும் பல மாற்றங்களை இன்று கண்டுள்ளது.
தொழிற்சங்கத்தின் மூலம் உற்பத்திச் சாதனத்தை கைப்பற்றும் காலம் வரைக்குமான போராட்டத்தின் படிமுறை வளர்ச்சியாக ஒவ்வொரு போராட்டத்தையும் சட்டரீதியான, சட்ட ரீதியற்ற போராட்டங்கள் மூலம் பெற முடிகின்றது. மூலதனத்தின் பெருக்கத்தின் அவசியம் கருதி முதலாளித்துவமும் எழுத்துருவில் தொழிலாளர்களுக்கு உரிமை கொடுக்க சம்மதித்துள்ளது. அவ்வாறு இருந்த போதிலும் மூலதனத்திற்கு நெருக்கடி ஏற்படுகின்ற போது அதன் உழைப்பாளிகள் மீது தடைகளை ஏற்படுத்தி மூலதனத்தைப் பாதுகாத்து வந்துள்ளது. இந்த வேளையில் இன்றைய காலமானது உரிமைகளை வெறும் பேச்சுக்கும், ஐரோப்பிய பாணி என புகுத்தல் மூலம் உலகை தமது சந்தைக்கான ஒரு தளங்களாக பயன்படுத்தும் நிலையும் இருக்கின்றது. இந்த நிலையைப் எதிர்ப்பது என்பது வெளிமூலதனத்தின் ஆதிக்கத்தையும் எதிர்க்கும் போராட்டங்களும் வர்க்கப் போராட்டத்தின் ஒரு அம்சமாகின்றது.
தொழிற்சங்கத்தின் மூலம் பொருளாதாரப் போராட்டங்களில் மாத்திரம் திருப்பி கொள்ளாது மென்மேலும் வெற்றி கொள்வதற்கான அணுகுமுறை கொண்ட போராட்ட வடிவங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். தொழிற்சங்கப் போராட்டமும் வர்க்கப் போராட்டத்தின் அம்சமாகும்.
இவற்றிற்கு எல்லாம் எதிரியாக வருகின்றார்களோ அவர்கள் எல்லாம் உழைக்கும் மக்களின் எதிரிகளே. இந்த நாளில் மே தினத்தினை உழைக்கும் மக்களுக்கு உரியதாக்க உள்ள அளவுகோல் இதுவாகும். இதனைக் கொண்டு உழைக்கும் மக்கள் யார்? உற்பத்தி சாதனங்களை பாதுகாக்கும் வர்க்கத்தவர் யார்? என்ற அளவுகோல் முக்கியமானதாகும்.
மேதினத்தை உழைக்கும் மக்களுக்காகவே விட்டுவிடுங்கள், உங்களுக்கோ பல விழாக்கள் இருக்கின்றன. உங்கள் வர்க்கத்தின் தேவையை அங்கே தீர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் உழைக்கும் மக்களின் வேர்வையாலும், இரத்தத்தாலும் நனைந்த இந்த நாளை உழைக்கும் மக்களின் முன்னணி படைகளாக உருவாக்க இந்த தினத்தை மறுபடியும் எடுக்க வேண்டும். இந்தத் தினம் வெறும் சாத்திர சம்பிரதாயங்களுக்குள்ளான சோக வரலாற்றை மாற்றியமைக்க வேண்டும். எங்கள் நாளை நாமே நினைவு கோர உரிமையுடையவர்கள்.
முதலாளித்துவ- தேசிய – ஜனநாயக உரிமைக்கான போராட்டத்தின் ஊடாகவே உழைக்கும் மக்களின், மறுகாலனியாதிக்கத்தில், சிங்கள பேரினவாதத்தின் ஓடுக்குமுறையில் இருந்து வெற்றிபெறமுடியும்.

உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net