லா லிகா தொடர்: மீண்டும் முதலிடத்தில் பார்சிலோனா

article_1462095195-LEADLaligaagarakisuaஸ்பானியக் கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையே இடம்பெற்று வரும் லா லிகா தொடரில், கடந்த சனிக்கிழமை (30) இடம்பெற்ற போட்டிகளின்போது வெவ்வேறு நேரங்களில் மூன்று அணிகள் முன்னிலையில் இருந்தபோதும் இறுதியாக பார்சிலோனா அணி தனது முதலிடத்தைப் பெற்றுள்ளது.

றியல் மட்ரிட், றியல் சொஸைடட் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியின் இறுதி நேரங்களில் றியல் மட்ரிட்டின் கரித் பேல் பெற்ற கோலின் காரணமாக அவ்வணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 84 புள்ளிகளைப் பெற்று ஒரு கட்டத்தில் முன்னிலைக்கு வந்திருந்தது. இப்போட்டியில் காயம் காரணமாக, அவ்வணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, கரிம் பென்ஸீமா ஆகியோர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர், அத்லெட்டிகோ மட்ரிட், ரயோ வலெக்கனோ ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், அத்லெட்டிகோ மட்ரிட்டின் அந்தோனி கிறீஸ்மன் பெற்ற கோலோடு 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற அவ்வணி, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 85 புள்ளிகளைப் பெற்று ஒருகட்டத்தில் முன்னிலைக்கு வந்திருந்தது.

இந்நிலையில், பார்சிலோனா, றியல் பேட்டிஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இவான் றகிட்டிக், லூயிஸ் சுவாரஸ் பெற்ற கோல்களின் உதவியோடு 2-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற பார்சிலோனா, லா லிகா புள்ளிகள் தரவரிசையில் 85 புள்ளிகளைப் பெற்று, தனது முதலிடத்தை மீண்டும் பெற்றுக் கொண்டது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net