கோத்தபாய வழக்கில் தவணை கோரிய அரச சட்டத்தரணி! சட்டத்தரணி தவா கடும் எதிர்ப்பு

வெளிநாடு சென்றுள்ள முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்காக நீதிபதியிடம் விசாரணை ஒத்திவைப்பை அரச சட்டத்தரணி கோரியதால் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி தவராசா கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

கடந்த 2006ம் ஆண்டு டிசெம்பர் மாதம் முதலாம் திகதி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கொழும்பு கொள்ளுப்பிட்டி பித்தளைச் சந்தியில் வைத்து குண்டுவைத்து கொலை செய்ய முயற்சித்தமை தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது.

அவரை கொலை செய்ய முயற்சித்தார்கள் என்னும் குற்றச்சாட்டில், கார்த்திகேசு சிவாஜி, நிவலிங்கம் ஆரூரன், பத்மநாதன் ஐயர் ஶ்ரீஸ்கந்தராஜா சர்மா, நொகொத் மைக்கல், நொகொத் பரமதேவன்ஆகிய ஐவருக்கும் எதிராக 2013 ம் ஆண்டு டிசெம்பர் மாதம் 4ம் திகதி சட்டமாஅதிபரினால் சுமார் 13 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் 08ம் திகதி வழக்கின் முதலாவது அரசதரப்பு சாட்சியான கோத்தபாய ராஜபக்சவிற்கு நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பப்பட்டது.

இந்நிலையில் இன்றைய தினம் கொழும்பு சிறப்பு மேல் நீதிமன்றத்தின் ஆணையாளர் ஐராங்கனி பெரேரா முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது அரச சிரேஸ்ட சட்டத்தரணி, இவ்வழக்கின் சாட்சியாகிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச வெளிநாடு சென்றிருப்பதனால் இன்று குறித்த நீதிமன்றத்திற்கு வருகை தர முடியவில்லை. எனவே வழக்கினை வேறு தினத்திற்கு ஒத்திவைக்குமாறு விண்ணப்பம் செய்தார்.

எதிரிகள் தரப்பில் நீதிமன்றில் தோன்றிய சிரேஸ்ட சட்டத்தரணியான கே.வி தவராசா அரச சட்டத்தரணியின் வேண்டுகோளுக்கு இணங்க கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

இதேவேளை இவ்வழக்கில் எதிராளிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள குற்றப் பத்திரத்தில் 41 சாட்சியங்களும் 13 வழக்கு ஆவணங்களும் பதிவு செய்யப்பட்டுள்ள போதும் எதிரிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஒரே ஒரு சான்று குற்ற ஒப்புதல் வாக்குமூலம் மட்டுமேயாகும்.

குறித்த முதலாவது அரச சாட்சியான முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அரச தரப்பினால் நீதிமன்றிற்கு அழைக்கப்படுவதற்கான முக்கிய காரணம் குறித்த கொலை முயற்சியின் நிகழ்வுகள் இடம்பெற்றது என்பதை நிரூபிக்க மட்டுமே ஆகும்.

இலங்கை குற்றவியல் நடைமுறைக் கோவையின் பிரிவு 420ன் கீழ் குற்றப்பகர்வு மீதான விளக்கத்தில் எதிர் தரப்பினால் இத்தகைய நிகழ்வு இடம்பெற்றதை ஏற்றுக்கொள்ளுமிடத்து குறித்த நிகழ்வுகளை நிரூபிக்க அரச தரப்பு சாட்சிகளின் பிரசன்னம் அவசியமற்றதாகும்.

எதிரிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பகர்வில் தாக்கல் செய்யப்பட்டஒரே ஒரு சான்றான குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தின் நம்பகத்தன்மையிலேயே இந்த வழக்கின் தீர்வு தங்கியுள்ளது என சட்டத்தரணி தனது வாதத்தை முன்வைத்த போது

அரச சட்டத்தரணி அடுத்த தவணையில் முதலாவது சாட்சியாகிய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் நீதிமன்ற பிரசன்னத்தை தான் பொறுப்பெடுப்பதாக உறுதி வழங்கியதன் பேரில் மேல் நீதிமன்ற ஆணையாளர் ஐராங்கனி பெரேரா வழக்கை எதிர்வரும் ஆனி மாதம்27ம் திகதி விவாததிற்கு ஒத்திவைத்தார்.

எதிரிகள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி கே.வி.தவராசா சட்டத்தரணிகளான குகராஜா செல்வராஜா துஸ்யந்தன் ஆகியோர் ஆஜராகினர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net