டக்ளஸ் தேவானந்தாவை நான் நேசிக்கின்றேன்.சி.வி. விக்னேஸ்வரன்

wigneswaran_CI
ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு தமது உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடக்கூடிய நாட்கள் வெகுதொலைவில் இல்லை. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார்.

யாழ்.சென்.ரோக்ஸ் சனசமூக நிலையத்தினரால் கட்டப்பட்ட மறைந்த முன்னோடிகள் நினைவுத்தூபி இன்று புதன்கிழமை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் திறந்து வைக்கப்பட்டது.

அந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

அரசியல் தலைவர்கள் தங்கள் அரசியல் காரணங்களுக்காக மட்டுமே ஏனைய கட்சிகளைச் சார்ந்த அரசியல் தலைவர்களுடன் கருத்து வேறுபாடுகளில் மோதலுறுகின்றனர்.

மற்றையபடி அவர்களுடன் எந்தவிதமான தனிப்பட்ட கருத்துவேறுபாடுகளோ அல்லது கோபதாபங்களோ எங்களுக்குக் கிடையாது.

ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியின் தலைவர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களும் நானும் அரசியல் காரணங்களுக்காக கருத்து வேறுபாடுகளுடன் மேடையில் பேசிக்கொண்டுள்ளோம்.

ஆனால் தனிப்பட்ட முறையில் திரு.டக்ளஸ் தேவானந்தா அவர்களை நானும் நேசிக்கின்றேன். அவரும் எனக்கு மிகுந்த கௌரவம் அளிக்கின்றார்.

எமது எதிர்க்கட்சித் தலைவர் கௌரவ தவராஜா அவர்கள் அதே கட்சியைச் சேர்ந்தவர். எமது வேறுபட்ட கருத்துக்களை நாம் பகிரங்கமாக வெளிப்படுத்துவோம்.

ஆனால் மனிதாபிமான முறையில் நாமிருவரும் மிகவும் நெருக்கமாக உறவாடுகின்றோம். அண்மையில் அவருடன் சேர்ந்தே எமது அரசியல் முன்மொழிவுகளை கௌரவ திரு. கரு ஜெயசூரிய அவர்களிடமும் கௌரவ சம்பந்தன் ஐயா அவர்களிடமும் கையளித்தோம்.

இன்றைய அரசியல் மாற்றங்களின் அடிப்படையில் ஏனைய கட்சித் தலைவர்கள் தமது அரசியல் சிந்தனைகளை மாற்றிக் கொண்டு எம்முடன் இணைந்துகொண்டு அரசியலில் ஈடுபடக்கூடிய சூழ்நிலைகள் கூடுதலாகக் காணப்படுகின்றது.

அவ்வாறான ஒரு நிலை ஏற்படுகின்ற போது ஒட்டுமொத்தத் தமிழர்களும் ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு தமது உரிமைகளை வென்றெடுக்கப் பாடுபடக்கூடிய நாட்கள் வெகுதொலைவில் இல்லை.

அவ்வாறானதொரு நிலை வரும் என்பதால் நீங்கள் யாரை அழைத்து இது போன்ற திறப்பு விழாக்களைச் செய்ய நினைத்தாலும் அதில் தவறேதும் இல்லை. ஆகவே எனதருமை மக்களாகிய நீங்கள் இங்கிருந்து அங்கு தாவுவதும் மீண்டும் அங்கிருந்து இங்கு தாவுவதுமான செயற்பாடுகளை நிறுத்திக்கொண்டு, கட்சி ரீதியாக மனக்கசப்புக்களை ஏற்படுத்துவதைத் தவிர்த்து, உங்களது முன்னோர் உங்களுக்கு வழங்கிய அறிவுரைகளையும் வழிமுறைகளையும், வழிபாட்டு முறைகளையும் மனதில் இருத்தி முன்னேற்றப் பாதையில் செயற்பட முன்வர வேண்டும் என கேட்டுக் கொண்டு கொள்கிறேன்.

நாம் வெறுமனே பொருள் ஈட்டுவதையும் வருமானத்தையும் மட்டும் கருத்தில் கொள்ளாது ஆரோக்கியமான சமூகம் பற்றியும் சமூக மேம்பாடு பற்றியும் சிந்தித்தல் அவசியமாகின்றது.

எங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியம், அவர்களின் கற்றல் நடவடிக்கைகள், அவர்களின் பழக்கவழக்கங்கள் பற்றியெல்லாம் நாங்கள் கவனம் எடுக்க வேண்டும்.

உங்கள் பகுதியில் இடம்பெறக்கூடிய சட்ட விரோத செயல்கள் மற்றும் தீய பழக்க வழக்கங்கள் ஆகியவற்றில் இருந்து உங்கள் பிள்ளைகளைப் பாதுகாத்தலும் அவர்கள் பற்றி விழிப்பாக இருத்தலும் பெற்றோர்களாகிய உங்களின் தலையாய கடன். இவை பற்றி நீங்கள் மிகவும் அவதானமாக இருத்தல் வேண்டும்.

இயேசு கிறிஸ்து நாதரின் அன்பு எம்மிடையே மலர வேண்டுமானால் அது பிள்ளைகள் மீது பெற்றோர்கள் காட்டும் பாசத்திலேயே முதலில் உதிக்க வேண்டும். பிள்ளைகளைப் பெற்றால் மட்டும் போதாது. அவர்களை அன்புடன் வளர்க்கவும் முன்வர வேண்டும்.

இன்று போதைப் பொருட்கள் கடத்தல் மையமாக யாழ்ப்பாணம் மாற்றப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான கிலோ நிறையுடைய கஞ்சா போதைப் பொருட்கள் இங்கு கடத்தி வரப்படுகின்றன. எனவே இக் கடத்தலைத் தடுப்பதற்கு கரையோரங்களில் வாழ்கின்ற பொதுமக்களே எமக்கு கூடுதலாக உதவ வேண்டும்.

கலாச்சார பிறழ்வு அற்ற மிகவும் பண்பட்ட சீரிய சமூகமாக வாழ்ந்த வடபகுதி தமிழர்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், கல்வி என்பவற்றை திட்டமிட்டு அழிக்கக்கூடிய இவ்வாறான தீய நடவடிக்கைகளுக்கு நாம் ஒரு போதும் உடந்தையாக இருக்கக் கூடாது.

எனவே இவ் விடயம் தொடர்பில் உங்களது ஒத்துழைப்பும் ஆதரவும் மிகவும் வேண்டப்படுகிறது. உங்கள் பங்குத்தந்தைமார் உங்களைச் சரியாக வழி நடத்துவார்கள் என்பதில் எமக்குச் சந்தேகமில்லை. ஆனால் அவர்களின் அறிவுரைகளை மனதில் எடுக்க நீங்கள் யாவரும் முன்வர வேண்டும். என முதலமைச்சர் தெரிவித்தார்
குளோபல் தமிழ்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net