”அகத்தீ” என்னும் டென்மார்க் திரைப்படம் பற்றி ..சஞ்சயன் நோர்வே

”அகத்தீ” என்னும் டென்மார்க் திரைப்படம் பற்றிய எனது குறிப்புக்கள்
***************
27.05.2016 டென்மார்க் சண் அவர்களின் அகத்தீ என்னும் திரைப்படத்தினை ஒஸ்லோவில்; வெளியிட்டார்கள். 1971ம் ஆண்டுகாலத்தில் இருந்து திரைப்படத்துறையில் ஈடுபட்டவர், பல திரைப்படங்களை இயக்கியவர், இசைத் துறையில் பல தசாப்தங்களாக ஈடுபடுவர் டென்மார்க் சண் என்பதால் எனக்குள் இத்திரைப்படம்பற்றியதொரு எதிர்பார்ப்பு உருவாகியிருந்தது. அதேவேளை டென்மார்க்கில் இருந்து இத்திரைப்படத்தினைப் பாராட்டி முகப்புத்தகத்தில் வெளியாகியிருந்த ஒரு குறிப்பும் எனது ஆர்வத்தினை அதிகரித்திருந்தது.
10398387_1303261039700990_1502689819061860835_n
தவிர இந்தத் திரைப்படத்தின் கதாநாயகன் ஜெயசாந் ஒஸ்லோவைச் சேர்ந்தவர். தனது நடிப்புத்திறமையை 9c Oslo என்னும் திரைப்படத்தில் அவர் வெளிப்படுத்தியிருந்ததால் அகத்தீயை பார்ப்பது என்று தீர்மானித்திருந்தேன்.
திரைப்படம் ஆரம்பிக்கும் முன்பே திரு. சண் அவர்கள் தனது அனுபங்களைப் பகிர்கையில் இந்தப் படம் மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே வெளிவந்துள்ளது என்றும். மூவர் தன்னை ஏமாற்றினார்கள் என்றும் கூறினார்.
இதை நான் எழுதவேண்டியதன் காரணம் திரைப்படம் முடிந்தபின் கிடைக்கப்பெற்ற விமர்சனங்களுக்கு மேற்கூறியவையே முக்கிய காரணம் என சண் அவர்கள் கூறமையாகும். அது மட்டுமல்ல மிக கடினாமாக பொருளாதார சூழ்நிலையிலேயே இந்தப்படம் வெளிவந்தது என்றும் அதனாலேயே இன்று கிடைக்கப்பெற்ற விமர்சனங்களில் உள்ள விடயங்களை கவனிக்கமுடியவில்லை என்றும் கூறியிருந்தார்.

துறைசார் அனுபவசாலிகளான வ.ஐ.ச ஜெயபாலன், சர்வேந்திரா ஆகியோரை சண் அவர்கள் தனது திரைப்படத்தைப்பற்றிக் கூறுமாறு கேட்டபோது அவர்கள் இருவருமே திரைக்கதையின் பலவீனம் திரைப்படத்தின் தரத்தினை வெகுவாகப்பாதிக்கிறது என்பதை நேரடடியாகவே கூறியிருந்தார்கள்.
நான் அவர்களைப்போன்ற துறைசார் அனுபவசாலி அல்ல. சற்று அதிகமாக திரைப்படங்களை பார்க்கும் ஒரு திரைப்பட ரசிகன் என்று வேண்டுமானால் என்னை வரையறுக்கலாம். எனவே ஒரு சாதாரண பார்வையாளனாக, புலம்பெயர் தமிழர்களின் திரைப்படத்துறையின் ஆர்வலனாக அகத்தீயைப்பற்றி பேசுவது அவசியமாய் இருக்கிறது, எனக்கு.

முதலில் இத்தனை வயதிலும் திரைப்படத்துறையில் ஈடுபடும் டென்மார்க் சண் அவர்களின் ஆர்வத்தை பாராட்டாமல் இருக்கமுடியாது என்று ஒருவர் திரையரங்கத்தில் குறிப்பிட்டதை நான் ஆமோதிக்கிறேன். சண் அவர்கள் இந்தத் திரைப்படத்தில் திரைக்கதை, வசனம், இசை, இயக்கம் ஆகிய பொறுப்க்களை ஏற்றிருக்கிறார். இதுவும் இலகுவான விடயம் அல்ல. ஒரு சில இடங்களில் வசனங்கள் மிக நன்றாக எழுதப்பட்டுள்ளன. திரைப்படத்தில் உள்ள ஆதவன் அவர்களின் தத்துவார்த்தமான உரையாடல்களில் அர்த்தமும், ஆழமும் உண்டு.
திரைப்படத்தில் திரை அனுபவமில்லாத நடிகர்களின் நடிப்பினை நாம் பாராட்டத்தான் வேண்டும். கதாநாயகனின் நடிப்புத் திறமைக்கு தீனிபோடும் காட்சிகள் குறைவாகவே இருந்தன என்பது எனது கருத்து. ஆதவன்போன்ற திறமையானவர்களின் சில காட்சிகள் இயல்பான காட்சிகளாக இல்லை. இப்படியான பல இயல்புத்தன்மையற்ற காட்சிகளை மிக இலகுவாக தவிர்த்திருக்கலாம். தவிர்த்திருக்க வேண்டும். இவைகளை இயக்குனரின் கவலையீனங்கள் அல்லது சுயதரக்கட்டுப்பாட்டின் பலவினங்கள் என்றே கொள்ளவேண்டியிருக்கிறது.
இது தவிர பல இடங்களில் நாடகங்களில் வருவதுபோன்ற வசன நடையில் அமைந்த வசனங்கள், இயல்பற்ற உரையாடல்கள் என்பனவும் திரைப்படத்தின் தரத்தினை மிகவும் குறைக்கின்றன.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. இந்தத் திரைப்படத்தில் இசை அப்படித்தான் இருக்கிறது. காட்சிக்கான இசையின் தன்மை, வாத்தியக் கருவிகளின் தேர்வு, ஒலியின் அளவு, ஒலிப்பதிவுசெய்யப்பட்ட ஒலிகளை ஒன்றிணைத்த தன்மை என்று பலவிடயங்களில் இசையமைப்பாளர் கவனம் செலுத்தவில்லை என்பதுவும் திரைப்படத்தின் பலவீனங்களில் ஒன்று.

ஒரு திரைப்படத்தின் முக்கிய அம்சம் ஒளிப்பதிவு. ஒவ்வொரு காட்சியையும் சட்டகத்தினுள் அடக்கி அதனூடாகவும் கதைபேசும் கலையை வரப்பெற்றவரே சிறந்த ஒளிப்பதிவாளர். அதுவே திரைப்படப் பாத்திரங்களின், கதையின் கனதியை திரைப்டத்தினுள் காவிச்செல்லும். பர காட்சிகளில் ஒளியைக் கையாண்டிருக்கும் முறை ஒளிப்பதிவில் தொழில்நுட்ப அனுபவமின்மையை வெளிப்படையாகவே காட்டுகிறது.
கமராவை தூக்கும் வல்லமை உடையவர்கள் எல்லோரையும் ஒளிப்பதிவுக் கலைஞர்கள் என்று கூறமுடியாது என்பது எனது கருத்து.

புலம்பெயர் இளையோரின் குறும்திரைப்படங்களில் உள்ள ஒளிப்பதிவுத் திறமை, கலைத்துவம், நேர்த்தி, கோணங்கள், தொழிநுட்பத்தின்மேலான கவனம் ஆகியவற்றில் எதையுமே அகத்தீயில் காணமுடியவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தினைத் தருகிறது.

செலவினை குறைப்பதற்காக யாழ்ப்பாணத்தில் டப்பிங், ஒலிச்சேர்க்கை, எடிட்டிங் ஆகியவற்றை செய்வித்ததாக இயக்குனர் கூறினார். சில காட்சிகளின்போது சேர்க்கப்பட்ட ஒலிகளுடன் என்னால் ஒன்றித்துப்போக முடியவில்லை. காலடியோசைகளை முக்கியமாகக் குறிப்பிடலாம்.
திரைப்படத்தை பார்த்தபின், இப்போதுவரை என்னால் ஒரு விடயத்தினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இத்தனை அனுபவமுள்ள ஒருவர் எவ்வாறு ஒரு கலைஞனாக இந்தப் படத்தை இப்படியான நிலையில் வெளியிட முன்வந்தார் என்பதாகும்.

சற்றுக் காலமெடுத்து மேற்கூறிய பலவிடயங்களிலும் சிறிது கவனம் செலுத்தியிருப்பின் திரைப்படத்தின் மிகப்பெரிய பலவீனம் திரைக்கதை என்பதுடன் நின்றுபோயிருக்கும். இப்போது முழுத்திரைப்படமும் கேள்விக்குறியுடன் நிற்கிறது.

இப்படத்தினை வெளியட முன், இயக்குனரைத் தவிர்த்து எவரும் பார்க்கவில்லையா? அவர்கள் பலவீனங்களை சுட்டிக்காட்டவில்லையா என்ற கேள்விக்கு இயக்குனர்தான் பதில் சொல்லவேண்டும்.
இத்தனை பலவீனங்களுக்கும் இயக்குனர் கூறும் காரணங்களான தான் மூவரால் ஏமாற்றப்பட்டதும், தனது பொருளாதார நிலை ஆகியவற்றை என்னால் முழுவதுமாக எற்றுக்கொள்ளமுடியவில்லை. தவிர இரண்டு மணிநேர படமாக எடுக்கப்பட்டு பின்பு நீளம் குறைக்கப்பட்டது என்றும் அதனால்தான் இப்படியாயிற்று என்பதையும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாதது.
கலைஞனிடம் தரம்பற்றிய சுயபிரக்ஞை அவனது படைப்பின் அனைத்து அங்கங்களிலும் இருக்கவேண்டும். இது மிகவும் அடிப்படையானது.

திரைப்படத்தில் நெருடலை, இயல்பற்ற தன்மைகளை, கவலையீனங்கள் ஆகிய எல்லாமே இயக்குனரின் தரக்கட்டுப்பாடுக்குள் உள்ள பகுதிகளே. இவற்றிற்கும் செலவிற்கும் எதுவித தொடர்பில்லை என்பது எனது கருத்து. எனவே இவ்விடங்களில் செலவைப்பற்றி குறிப்பிடுவது ஏற்றுக்கொள்ளமுடியாதது. இசையும் அப்படியே.
எடிட்டிங்ஐ வேண்டும் என்றால் இயக்குனரது கட்டுப்பாட்டுக்குள் இல்லாது எனலாம். ஆனாலும் திரைக் கதையை எடிட்டிங்க்கு ஏற்றவாறு படமாக்கியிருக்கவேண்டிய பொறுப்பு இயக்குனருடையதல்லலா?
திரைப்படத்தின் டப்பிங் இலங்கையில் நடந்திருக்கிறது. இது செலவு சம்பந்தப்பட்டவிடயம் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். இன்றைய காலத்துக் கணிணியுகத்தின் உதவியுடன் கதாநாயகன், கதாநாயகி, ஆதவன், இன்னும் பலரின் சொந்தக் குரல்களை பாவித்திருக்கமுடியும். அது தரத்தினை மேலும் உயர்த்தியிருக்கும். இவ்விடயம்பற்றி வ.ஐ.ச ஜெயபாலன் ஒரு உதாரணத்துடன் இந்தப் பிரச்சனையை எவ்வாறு இலகுவாக கையாண்டிருக்கலாம் என்று மிகச் சிறப்பாக எடுத்துக்கூறியதை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
யதார்த்தத்தின் பிரதிபலிப்புத்தான் கலை. யதார்த்தத்தை யதார்த்தமாக படைக்கமுடியாதுபோகும் பட்சத்தில், படைப்பாளி சுயவிமர்சனத்திற்கு தன்னை உட்படுத்திக்கொள்ளாது புறக்காரணிகளை குற்றம்சாட்ட ஆரம்பித்தால் கலையும், கலைஞனும்; என்னவாவார்கள் என்பதை நான் கூறத்தேவையில்லை.

இதை அப்படியே ஒரு சமூகத்திற்கும் பிரதியீடுசெய்யலாம். ஒரு சமூகம் தனது கலைப்படைப்புக்களை விமர்சன ரீதியாக அணுகாமல், வெறுமனே முகஸ்துதிசெய்வதானது அச் சமூகத்தின் கலைப்படைப்புக்களுக்கு அவர்கள் வழங்கும் போலி அங்கிகாரம் எனறே கொள்ளப்படவேண்டும். வளர்ச்சியை விரும்பும் ஒரு சமூகம், போலியான அங்கீகாரம், முகஸ்துதி என்பவற்றை தவிர்த்துக்கொள்வது அவசியம். நேரிடையாக பேசுவதும் அவசியம்.
மௌனமாக இருந்துவிட்டு எழுந்து சென்று அர்த்தமில்லாத இடத்தில் விவாதமேடையை ஆரம்பிப்பதைவிட நேரடியாகவே எனது கருத்துக்களை முன்வைத்துள்ளேன். இது இயக்குனருக்கு மனவருத்தத்தைத் தரக்கூடும். ஆனாலும் ஒரு கலைஞன் ஒரு கலைப்படைப்பினை பொதுவெளியில் முன்வைக்கும்போது சில விடயங்களை நாம் பொதுவெளியில் பேசவேண்டியிருக்கிறது என்பதையும் சண் அவர்கள் புரிந்துகொள்வார் என்றும் நம்புகிறேன்.
சண் அவர்களின் அடுத்த படைப்க்கான செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கவுள்ளன. அனுபவங்களை அடிப்படையாகக்கொண்டு அடுத்த படைப்ப சிறப்பாக அமையவேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

முன்னோட்டம் அகத்தீ .

Copyright © 6391 Mukadu · All rights reserved · designed by Speed IT net