“அப்பால் ஒரு நிலம்” …பல வீரர் கதையும்.

“அப்பால் ஒரு நிலம்” நாவலை வாசிக்க தொடங்கும் போது வழமையான போர் பற்றிய வலியை பேசப்போகிறது என்னும் முன் சிந்தனையுடன் தான் தொடங்கியது வாசிப்பு ,ஏனெனில் குணா கவியழகன் அவர்களின் முதல் நாவல்கள் தந்து போன வலியை இது கொஞ்சம் கூடுதால கொடுக்கலாம் என்னும் எண்ணமும் இருந்தது, காரணம் அந்த போரோடு வாழ்த்த ஒவ்வெரு ஜீவனும் அறியும் அதன் உக்கிரம் அதிலும் அதில் தன்னை செலுத்தி நீந்திய இளையவர்களுக்கு அது இப்பொழுது பெரு வலி .

apaal

வீரன் பற்றி ஆசிரியர் சொல்ல தொடங்கும் போது, எம் அருகில் இருந்த ஒரு வீரன் நினைவில் வருகிறான் ,அவன் தான் இளங்கீரன் இவன் பூநகரி மண்ணில் பிறந்த ஒருவன் அழகிய வெண்மை நிறமான அவனுது தேகம், ஒரு பெண்ணுக்குரிய அவனின்வசீகர முகம் எவரையும் இவன் பெடியன என கேள்வியை கேட்க தோன்றும் ,அடிப்படை பயிற்சி முடிந்து ,வேவு பயிற்சிக்கு வந்து நிக்கிறான் மாங்குளம் அண்டிய பனிக்கம்குளத்தில், இரவு பகலாக தொடர் பயிற்ச்சி ஜெயசுக்குறு படைகளுக்கு எதிரா வேவு பார்பதற்கு மிக பெரும் தயார் படுத்தல், எவர் எப்ப உறங்குகிறார்கள் என்று கூட தெரியாத பயிற்ச்சி ஆக அது நீண்டு போகுறது ,அதன் களைப்பு அவனை அடிக்கடி ஓடும் போது கூட நித்திரைக்கு கொண்டு சென்றுவிடும் ,ஒரு இடத்தில இருந்து விட்டால் அப்படியே உறங்கி விடுவான் ஒரே கேலியாக அவனை போட்டு கிண்டி எடுப்பதுதான் சக போராளிகள் வேலையாக இருக்கும் ,மச்சான் இவனை நம்பி கம்பியை கடக்க முடியாது இவன் கம்பி நீட்டிவிடுவான் அப்புறம் ஆமி எங்களுக்கு கம்பி செருகுவான் என அவனை நக்கல் பண்ணாத போராளிகள் இல்லை எனலாம் .

மூன்று பட்டு கொமாண்டோ கம்பிகளை போட்டு ரைபிள் கோல்சாருடன் எழும்பி பாய்ய சொன்னால் ஓடிவந்த வேகத்தில் இடறி அதன் மேல் விழுந்து கம்பிகள் அவன் கைகளை உடலை கீறி இரத்தம் வடியும், ஆனாலும் மீண்டும் பின்னாடி வந்து முயற்ச்சி செய்வான் பார்வைக்கு பாவமாக இருக்கும், ஆனால் தான் கொள்கையில் சரியாக இருப்பான் அதை கடக்காமல் ஒருநாளும் வரவும் மாட்டான் ,பயிற்ச்சி மாஸ்டர் சொல்லுவார் பருவாயில்லை நாளைக்கு முயற்ச்சி செய் என இல்லை என்னால் முடியும் என்பான்,அவனுக்கு பிரச்சினை இந்த நித்திரை தான், ஒரு நிமிடம் மேலாக ஒரு இடத்தில நின்றால் அப்படியே அயர்த்து போவான் அவனுக்கு கொடுக்காத தண்டனை இல்லை,ஒரு முறை வெள்ளி பற்றி படிப்புக்கும் போது உறங்கி விட்டான் அதற்க்க மாஸ்டர் குண்டை கழட்டி கையில் கொடுத்து விட்டு சொன்னார் ,உன்கையில் இருப்பது எட்டுபேர் உயிர் கண்ணை மூடினால் கையை விடுவ விட்டால் வெடிக்கும் நீ தான் முடிவை எடுக்கணும் என,தலையை ஆட்டியவன் அப்படியே உறங்கி போனான் வெள்ளி பற்றி படிப்பை எவர் கவனித்தது இவனிடம் குண்டு இருக்க, அது மாஸ்டருக்கும் தெரியும் ,ஆனால் அவர் கொடுத்த குண்டு வெடிக்காது என அவருக்கு மட்டும் தான் தெரியும் ,அவன் மெதுவாக உறங்கி போக குண்டு நழுவ போகுது என ஆளையாள் பாய, மாஸ்டர் சிரித்த படி எழும்படா எழுப்பி நில் நீ திருந்த உன்னை நம்பினால் இப்ப எல்லோரும் வெள்ளி பார்க்க வேண்டி வந்திருக்கும் ,என குண்டை கையில் எடுத்தார் அப்ப தான் தெரியும் அது வெடிக்காது என .

இவ்வாறு இருந்த அந்த போராளி இளங்கீரன் ஜெயசுக்குறு ஆமியுடன் கிளிக்கோடு விளையாடிய வரலாறு இருக்கிறது ,அவனிடம் ஒரு அசாத்திய துணிவு இருக்கிறது சரியான கணிப்பு கூடவே இருக்கும் எப்பொழுதும் ,ஒரு முறை மாங்குளம் சின்ன கிணத்தடி கடந்து உள்ள போய் வரும் போது நால்வர் இவனும் அதில் ஒருவன் கண்டி றோட்டை கடந்து எங்கள் நிலைகளுக்கு வர நடக்க தொடங்க ஆமி கண்டுட்டு அடிக்க வெளிக்கிட ,ஓடுங்கடா என சுயாத் கட்டளை போட ,ஓடி வழமையான இடத்துக்கு வாங்கோ, பிரிச்சு போ, எல்லாம் பிரிச்சு போ, என கத்தியபடி ஓவரு திக்காக நால்வரும் பிரிந்து போக ஓடி மறைந்து பின்னேரம் ஒரு செக்கள் பொழுதில் கல்லிருப்பு றோட்டில் ஒரு இடத்தில நின்றுதான் போனது, ஆகவே அங்க போகணும்.

எல்லோரும் வந்தாச்சு இவனை காணவில்லை இப்ப இவன் இல்லாமல் போக முடியாது சண்டை நடந்த மாதிரி தெரியவும் இல்லை துப்பாக்கி சூட்டு சத்தமும் இல்லை எங்க போனவன் ஆமி பிடிந்து இருப்பன்,அல்லது குப்பி கடிச்சானா ,இடத்தை விட்டுடானா என பல யோசனை அனைவருக்கும் ,சரி ஆளை ஒருக்கா பார்ப்பம் பொறுங்க கொஞ்சம் இருளட்டும் என காத்திருந்து தேடியும் ஆள் இல்லை ,இப்ப போனால் பதில் சொல் வேணும் இன்னும் ஒருநாள் நிண்டு தேடுவம் என சுயாத் சொல்ல சாப்படு பிரச்சினை வந்தால் போவம் பக்கத்தில தானே நிக்கிறம் என சொல்லிபோட்டு இரவில் குருவி சத்தம் ,மெல்லிய விசில் சத்தமாக அவனிடம் இருந்து ஏதாவது சிக்னல் வருகிறாதா என தேடல் தொடங்குது .

அடுத்தநாளும் ஆள் கிடைக்கவில்லை இப்ப தளபதிக்கு என்ன பதில் சொல்வது என்ன நடந்தது என சொல்வது, எத்தினை கேள்விகள் எழும் ,என்னும் குழப்பம் லீடருக்கு, சரி எதுக்கு தொடர்பை எடுத்து சொல்லுவம் வேற வழியில்லையே, என்னும் நோக்கில் வேக்கியை ஒன் செய்தார் சுயாத் ஓவர் என முடிக்க முந்திக்கொண்டு டயஸ் சொன்னார், ஆள் வந்திட்டு நீங்க வாங்க என அட கருமம் தப்பிச்சம் சாமி என ஒரு சந்தோஷம் ,இரவு நடந்து விடியகாலை அறிவிச்சு எங்க ஆக்களின் இடம் வந்து முதல் வேலையா இவனை ஓடி போய் என்ன நடந்தது என கேட்க போனால் அவன் மிக பெறுமதியான தகவலுடன் வந்திருந்தான் .

செக்கள் பொழுதில் ஆமி கலைக்க இவன் கொஞ்ச தூரம் ஓடியவன் விழுந்து படுத்து விட்டான் ஒரு பற்றையில், இவனை கடந்து ஆமி போயிட்டு புலி ஓடிட்டு என கிளியர் பண்ணிபோட்டு போக, பிறகு எழும்பி இவன் நடக்க தொடங்கி இருக்கிறான், அப்பொழுது கல்லிருப்பு ரோட்டால் ஆமி ஆட்லறிகளை கட்டியபடி உழவு இயத்திரம் போவதை கவனித்தவன் றோட்டை கடக்காமல் பக்கவாடாக நடந்து எங்க போகுது என தொடர்த்து போய் மூன்று முறிப்பு சந்தியில் இருந்து கோண வாக்கில் ஒரு ஆட்லறி நிலை புதிதாக அமைக்கபட்டு இருப்பதையும் ,அதற்கு செல் அடிப்பது என்றால் மட்டும் பின்னணியில் இருந்து கொண்டுவந்து அடித்து விட்டு மீண்டும் ஆட்லறி கல்லிருப்பு நோக்கி போவதாகவும் இருநாள் பக்கத்தில் இருந்து அவதானித்து விட்டு தான் வெள்ளி பார்த்து வந்து சேர்த்த கதை சொன்னான் .

ஆச்சரியம் வெள்ளி படிப்பிக்க தூங்கியவன் இவனை நம்பி உள்ள கொண்டுபோக முடியாது என சொன்னவர்களுக்கு தான் செயல் மூலம் ஒரு பாடம் கொடுத்தான், வீரனை போல அவனும் நிலைமையில் தன்னை தயார் செய்து சாகாசம் புரிந்து வந்தான் ,சுயாத் நக்கலாக சொல்லும் இவன் ஓடி இருப்பான் ஐந்து பட்டு கம்பி வேலி குறுக்க வந்திருக்கும் பாயிற பஞ்சில அதிலையே படுத்திட்டான் போல என ,ஓம் அண்ணை அதுவும் உண்மைதான் நான் புகுந்து தான் வந்தான் என மறுத்தான் போட்டான் இளங்கீரன் அவன் பின்னாளில் தனித்து வேவு பார்த்து செம்பியன் வேவு அணிக்கு போகும் அளவு வளர்த்து இருந்தான் .

மணியின் காதலும் ,வீரனின் பாசமும் ,அருளினியின் காதலும் ,றோமியோவின் வேட்கையும் இறுதியில் வென்று இருக்க வேணும் எப்படி கனவாக போனது என்பதுதான் ரண வலி .

“அப்பால் ஒரு நிலம்” இப்படியான ஒரு சாகாச வீரனை பேசி போகிறது ,தாங்கள் கொண்ட இலட்சியத்தின் பற்றை இறுதிவரை ஏந்தி, உறவுகள் பிரிந்து ,வசந்த காலங்களை தொலைத்து ,சக பெண் போராளிகளை காணும் போது எழும் காதல் பார்வைகள் புறம் தள்ளி, போர் என்னும் அரக்கனை வெல்லும் ஒரு நோக்கு மட்டும் கொண்டு ஒரு போராளியாக பயணிப்பது என்பது ஒருவித தவநிலை தான் ,ஒவ்வெரு பெரு வெற்றியின் பின்னும் ஒரு சாதாரண வீரன் பெரு வீரனாக பேழையில் உறங்கி போன காலங்களை இப்பொழுது மனத்திரையில் கொண்டு வருகையில், இதயத்தின் ஒரு மூலையில் நெருச்சி முள்ளாக குற்றி போகுறது குற்ற உணர்வும் அவர்களால் வாழ்கிறோம் என்னும் இந்த பிச்சை வாழ்க்கையும் .

ஆனால் என்ன இந்த வீரர்கள் வாழ்வு எங்களில் இருந்து “அப்பால் ஒரு நிலமாக” வாழ்த்துகொண்டே இருக்கும் அது அவர்களுக்கான நிலம் .
அஞ்சரன்

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net