யாழ் தென்னிந்திய திருச்சபையின் உள் முரண்பாடுகளும் அரசியல் தலையீடும் பந்தாடப்படும் அப்பாவி மாணவிகளும்.

udu_ci
நீண்ட பாரம்பரியத்தை கொண்டதும், தென்னாசியாவின் முதல் பெண்கள் பாடசாலையுமான உடுவில் மகளீர் கல்லூரியின், கௌரவம் இப்போது வீதிக்கு வந்துள்ளது. ஊடகங்களிலும், சமூக வலைத் தலங்களிலும் இன்று பேசுபொருளாக மாறியுள்ள உடுவில் மகளீர் கல்லூரியையும், அங்கு கல்வி பயிலும் மாணவிகளையும், தென்னிந்திய திருச்சபையின் உள்முரண்பாடுகளில் சிக்கி இருப்பவர்களும், அரசியல், கட்சி முரண்பாடுகளில் முரண்டு பிடிப்பவர்களும் பயன்படுத்திக் கொள்வதனை உணர முடிகிறது.

உண்மையில் இலங்கையின் அரசாங்க, தனியார் சேவைகளில் கல்வி, மற்றும் நிர்வாக சேவைகள் உள்ளிட்ட அனைத்து தொழில் சார் முறைமைகளில் 60 வயதை அடைந்தவர்கள் ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது விதிமுறை. எனினும் அரசாங்கம், அல்லது தனியார் கம்பனிகளின் நிர்வாகங்கள், விரும்பினால் சேவை நீடிப்பை வழங்க முடியும். வழங்காவிடின் அதனை சட்டரீதியாக எதிர்கொள்ளும் உரிமை 60 வயதை அடைந்தவர்களுக்கு இல்லை.

இந்த வகையில், சரி பிழைகளுக்கு அப்பால் தென்னிந்திய திருச்சபையின் ஆளுநர் சபை உடுவில் மகளீர் கல்லுரியின் முன்னைய அதிபரை ஓய்வுக்கு செல்லுமாறு கேட்டுக்கொண்டதற்கு எதிராக போராடுவதற்கோ, சேவை நீடிப்பை வழங்குமாறு கோரி மாணவிகளை வீதியில் இறக்குவதற்கோ போராட்டத்தின் பின்னால் இருப்பவர்களுக்கு சட்டரீதியான வலு இல்லை.

மறுபுறம் முன்னைய அதிபர் சிறந்த சேவையாளர், வல்லவர், திறமையாக கல்லூரியை நடத்தியவர் என்பது எவ்வளவு உண்மையோ, ஓய்வு பெறும் வயதை அடைந்த ஒருவர் இவற்றுக்கு அப்பால் நிர்வாகம் விரும்பவில்லை என்றால் தானாக ஓய்வு பெறுவதே ஜனநாயக விழுமியம் கூட.

தவிரவும் தனக்கு அடுத்த நிலையில் உப அதிபராக இருப்பவருக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்பது உயரிய விழுமியங்களை கடைப்பிடிப்பவர்களுக்கு உரித்தானது என்பதும் மறுக்க முடியாது. இதற்கு உதாரணமாக ஒரு விடயத்தை சுட்டிக் காட்ட முடியும். பிரித்தானிய தொழிற்கட்சியில் இரண்டு தடவைகள் பிரதமராக இருந்த ரொணி பிளையர் தனது இரண்டாவது பதவிக் காலத்தின் கடைசி 2 வருடங்களுக்கான பிரதமர் பதவியினை, தனது கட்சியில் அடுத்த நிலையில் இருந்த கோடன் பிறவுனுக்கு கொடுத்து தானாக விலகியிருந்தார். காரணம் கட்சியின் அடுத்த பிரதமர் பதவிக்கான வேட்பாளருக்கான பயிற்சியாகவும், அவரது தலைமைத்துவத்தை மக்கள் உணருவதற்கான வாய்ப்பாகவும் அந்தக்காலம் அமையும் என்பதனை பிரித்தானிய ஜனநாயக விழுமியங்கள் ரொணி பிளையருருக்கு கற்றுக் கொடுத்திருந்தன.

இவற்றிற்கு அப்பால் வடக்கில் இன்று கல்வியில் இருந்து மதம் சார்ந்த நிறுவனங்கள், ஆலையங்கள், பொது அமைப்புக்கள் என அனைத்திலுமே அரசியல் புகுந்து விளையாடுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. முன்னைய காலங்களில் ஆளும் அரசாங்கங்களுக்கு ஆதரவாக அல்லது மிண்டு கொடுக்கின்றவர்களாக இருப்பவர்களும், கட்சிகளுமே தமது அரசியல் செல்வாக்கை, அரச மற்றும் பொது நிறுவனங்கள் மக்கள் சார்ந்த அமைப்புக்களின் நடவடிக்கைகளில் செலுத்தி வந்தனர். ஆனால் இப்போது தமிழ்த் தேசியம் சார்ந்து தொழிற்படுபவர்களாக இருப்பவர்களும் கட்சிகளும் ஏட்டிக்கு போட்டியாக தமது அரசியல் செல்வாக்குகளை அனைத்து மட்டங்களிலும் பிரயோகிக்கும் நிலை 2015களிற்கு பின் பலம் பெற்று வருகின்றது. குறிப்பாக கல்விச் சமூகத்தில் பாடசாலை மாணவர்களை தமது அரசியலுக்காக பகடைக்காய்களாக மாற்றுவதும், பந்தாடுவதும் கூட ஒரு வகையான சிறுவர் துஸ்பிரயோகமே…

இவ்வாறான செயற்பாடுகளுக்கு வழிவிட்டு பிரச்சனைகளை உருவாக்கிய பின், பொலிசார், ராணுவத்தினர் தலையிடுகிறார்கள், தமிழர்களுக்கு எதிராக செயற்படுகிறார்கள், மாணவிகளை படம்பிடிக்கிறார்கள் என வெறுப்பை வெளியிடுவதில் என்ன அர்த்தம் இருக்கிறது? பெரும்பான்மை இனத்தின் பெரும்பான்மை பெற்ற ஆட்சியாளர்களும், அந்த ஆட்சியாளர்களின், அரசாங்கங்களின் பொலிஸ் மற்றும் பாதுகாப்பு படையினரும், சிறுபான்மை இனங்களின் முரண்பாடுகளை தமக்கு சாதகமாகவே பயன்படுத்துவார்கள் என்பதனை இலங்கையின் ஒரு நூற்றாண்டு அரசியல் மூலம் புரிந்து கொள்ளாவிடின் யார் என்ன செய்வது?

இதே வேளை ஒரு நல்லாட்சி அரசாங்கம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவது என்ற பெயரில், பெண்கள் கல்லூரி ஒன்றின் மாணவிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு எடுத்த நடவடிக்கைகள் அடிப்படை மனித உரிமைகள் பற்றிய புரிதலில், இந்த அரசாங்கமும் முன்னைய அரசாங்கத்திற்கு ஈடானது என்பதனை சுட்டி நிற்கிறது.

விசேடமாக பாடசாலை வளாகத்தில் ஆண் பொலிசாரை குவித்ததும், மாணவிகளை படம் பிடித்தமுறைமைகளும், அவர்களை பின்தள்ளிய விதங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதனை நல்லாட்சி அரசாங்கமும், மத்திய, மாகாண கல்வி அமைச்சுக்களும் கவனத்தில் கொள்ள வேண்டியதோடு, பாடசாலை, பல்கலைக் கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் மாணவர், ஆசிரியர்கள், மற்றும் நிர்வாகங்களின் போராட்டங்களை எவ்வாறு கையாள்வது என்பது பற்றிய தெளிவான புரிதலையும் கொண்டு இருக்க வேண்டும் என்பதனை உடுவில் மகளீர் கல்லூரியின் போராட்டம் புலப்படுத்தி நிற்கிறது.

நடராஜா குருபரன் குளோபல் தமிழ்

Copyright © 8223 Mukadu · All rights reserved · designed by Speed IT net