வடக்கு, கிழக்கு காணிகளை டிசம்பர் 31 இற்கு முன் விடுவிக்க பணிப்பு

வடக்கு, கிழக்கு காணிகளை டிசம்பர் 31 இற்கு முன் விடுவிக்க பணிப்பு

– திருகோணமலை, அக்கரைப்பற்று நீர் விநியோகம்
– கிளிநொச்சி வரட்சி, மடு அபிவிருத்தி தொடர்பிலும் கவனம்

வடக்கு, கிழக்கில் வாழும் மக்களின் காணிகளை, டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்குமாறு, உரிய அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களின் சட்டபூர்வமான உரித்துடைய காணிகள் அம்மக்களுக்கு கட்டாயம் வழங்கப்பட வேண்டும் என்றும் காணி தொடர்பான அனைத்து பிரச்சினைகளையும் தீர்த்து இவ்வருடம் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அக்காணிகளை விடுவிக்குமாறும் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி செயலணி மூன்றாவது தடவையாக நேற்று (03) பிற்பகல் ஒன்று கூடியது.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்த கூட்டத்தின்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இப்பணிப்புரையை விடுத்தார்.

முறையான கால சட்டகத்திற்குள் குறித்த நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுக்குமாறும் இதன் முன்னேற்ற நிலைமைகளை, அடுத்த மாதம் இடம்பெறும் வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தின்போது முன்வைக்குமாறும் தெரிவித்தார்.

மேலும் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் படையினர் வசமுள்ள பாடசாலைகளுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் கட்டடங்களை விடுவிப்பது தொடர்பாகவும்; வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள சில பிரதேசங்களில், மக்கள் கடுமையான நீர் பற்றாக்குறைக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளதுடன், இப்பிரச்சினையை தீர்ப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்தார்.

அக்கரைப்பற்று பிரதேசத்தில் நீர் வளம் போதுமான அளவில் இருந்தபோதிலும் முறையான விநியோக வலையமைப்பு இல்லாத காரணத்தினால் சில கிராமங்களுக்கு நீரை விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கான உடனடித் தீர்வுகளை கண்டறிவது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வரட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வன்முறை மற்றும் போதைப்பொருள் பாவனையை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித் திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

மடு புனித பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்த ஜனாதிபதி, நீண்டகால யுத்தத்தின் காரணமாக வடக்கு, கிழக்கு மக்கள் இழந்த அபிவிருத்தியின் நன்மைகளை மீண்டும் அம்மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதில் அனைத்து தரப்பினரும் தமது பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பை பெற்றுக்கொண்டு எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி விளக்கினார்.

எதிர்க்கட்சி தலைவர் ஆர். சம்பந்தன் உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர். செனவிரத்ன உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள், முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு துறை முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net