எதிர்க்கட்சிகள் விரும்பினால் பிரதமராகத் தயார்!

எதிர்க்கட்சிகள் விரும்பினால் பிரதமராகத் தயார்!

எதிர்க்கட்சிகள் விரும்பினால் பிரதமராகத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள 2019 பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதாவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலுத்து வருகிறது.

முக்கியமாக எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் என்ற கேள்வியும் கட்சிகளிடையே நீடிக்கிறது. ஏற்கனவே பிரதமர் வேட்பாளராக நிற்க தயார் என ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் விரும்பினால் பிரதமராகத் தயாராக இருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய தலைநகர் டில்லியில் நேற்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “மாநில சட்டசபை தேர்தல் என்பது வேறு. நாடாளுமன்ற தேர்தல் என்பது வேறு. அதைத்தான் மாயாவதி சுட்டிக்காட்டி இருப்பார் என்று நினைக்கிறேன்.

நாடாளுமன்ற தேர்தலின்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக சேர்ந்துவிடும் என்று நம்புகிறேன். குறிப்பாக உத்தரபிரதேசத்தில் கூட்டணி அமைந்துவிடும்.

மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் அது காங்கிரசுக்கு உதவியாகத்தான் இருக்கும்.

என்றபோதிலும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தெலுங்கானா, சத்தீஷ்கார் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி நிச்சயம் வெற்றி பெறும்.” என கூறினார்.

எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த ராகுல்காந்தி, “நிச்சயமாக. எதிர்க்கட்சிகள் விரும்பினால் பிரதமர் வேட்பாளராக போட்டியிட தயாராகவே இருக்கிறேன்” என தெரிவித்தார்.

Copyright © 8885 Mukadu · All rights reserved · designed by Speed IT net