வடக்கின் பாதுகாப்பு ஓட்டை !

வடக்கின் பாதுகாப்பு ஓட்டை !

அண்மைக்காலத்தில் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, யாழ்ப்பாண இராணுவத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி ஆகியோர் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்த கருத்துக்கள் சர்ச்சைக்குரியனவாக இருப்பதைக் காண முடிகிறது.

இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பலாலி படைத் தலைமையகத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்த மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி யாழ்ப்பாணக் குடாநாட்டில் செயற்படும் ஆவா குழு போன்ற ஆயுதக் குழுக்களை அடக்குவதற்கு அனுமதி தருமாறு அரசாங்கத்தை இராணுவம் கேட்டிருந்ததாக கூறியிருந்தார்.

தமக்கு அதிகாரங்கள் தரப்பட்டால் குடாநாட்டில் செயற்படும் ஆயுதக் குழுக்களை 48 மணி நேரத்தில் அடக்கி விடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதற்குப் பின்னர் இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும், அதேபோன்ற கருத்தை வெளியிட்டு வருகிறார்.

இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க யாழ். படைகளின் தளபதியின் கோரிக்கையை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தார். ஆயுதக் குழுக்களை அடக்குவதற்கு அதிகாரம் தரும்படி அவர் கோரியிருந்தார்.

அதுபற்றி பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் ஆராயப்பட்டதாகவும் அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

அதற்குப் பின்னர் ஆயுதக் குழுக்களை அடக்கும் அதிகாரம் மாத்திரமன்றி போதைப்பொருட்களை கட்டுப்படுத்துவதற்கான அதிகாரத்தை இராணுவத்துக்கு வழங்க வேண்டும் என்று இராணுவத் தளபதி சில நாட்களுக்கு முன்னர் அரசாங்கத்திடம் கோரியிருக்கிறார்.

இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு மிகவும் வலிமையானது. வெளிநாடுகளில் கூட அது பரந்து விரிந்து கிடக்கிறது. இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைக்கும் போதைப்பொருள் கடத்தல் பற்றிய தகவல்கள் பொலிஸாருடன் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்றும் இராணுவத் தளபதி கூறியிருக்கிறார்.

ஆயுதக் குழுக்களை அடக்குவதற்கு அதிகாரம் கோரப்பட்ட முறைக்கும் போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதற்கு அதிகாரம் கோரப்பட்டுள்ள முறைக்கும் நிறையவே ஒற்றுமைகள் மற்றும் உள்நோக்கங்கள் இருப்பதாகவே தெரிகிறது.

இரண்டுமே வடக்கில் முகாம்களுக்குள் முடங்கியிருக்கும் படையினரை வெளியே கொண்டு வரும் நோக்கில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள் தான்.

வடக்கில் ஆவா குழு தனு ரொக் குழு என்று பல ஆயுதக் குழுக்கள் வாள்களுடனும் கத்திகளுடனும் அலைந்து கொண்டிருக்கின்றன. இப்போது புதிதாக அஜித் குழு என ஒன்றும் முளைத்திருப்பதாக பொலிஸ் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

நாட்டின் பிற பகுதிகளிலும் வாள்வெட்டுகள் நடந்தாலும் யாழ். குடாநாட்டில் நடப்பது போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களாக அவை இல்லை.

அதுபோலவே வடக்கு மாகாணம் தான் போதைப்பொருள் கேந்திரமாக இருக்கிறது என்பதையும் ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும். பாக்கு நீரிணை வழியாக கடத்தப்படும் போதைப்பொருட்கள் வடக்கின் ஊடாகவே நாட்டின் ஏனைய பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்தக் கடத்தலுக்கு தனியே வடக்கின் கடற்பகுதி வீதிகள் மாத்திரம் பயன்படுத்தப்படவில்லை. வடக்கில் உள்ள மீனவர்களும் அவர்களின் படகுகளும் வடக்கிலுள்ளவர்களில் பலரும் கூட பயன்படுத்தப்படுகிறார்கள்.

வேலையின்மை வறுமை போன்ற காரணங்களால் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நிலைக்குப் பெருமளவானோர் வடக்கில் தள்ளப்பட்டுள்ளார்கள்.

ஆக ஆயுதக் குழுக்களை அடக்குவாதானாலும் சரி போதைப்பொருளைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுப்பதானாலும் சரி இராணுவத்துக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டால் அதன் தாக்கம் வடக்கில் தான் அதிகமாக இருக்கும்.

வடக்கில் இப்போது படையினர் பெரும்பாலும் முகாம்களுக்குள் தான் இருக்கின்றனர். புலனாய்வுப் பிரிவினர் மாத்திரம் சிவில் உடையில் திரிகிறார்கள். மற்றப்படி நிர்வாகத் தேவைகளுக்காகவே இராணுவத்தினர் வெளியே செல்கின்றனேரே தவிர பாதுகாப்பு ரோந்துப் பணிகளை மேற்கொள்வதற்காக அவர்கள் வெளியே வருவதில்லை.

ஒரு காலகட்டத்தில் அவசரகாலச்சட்டம் இராணுவத்துக்கு முழுமையான அதிகாரங்களையும் கொடுத்திருந்தது. எந்த உயர் பதவியில் இருந்த சிவில் அதிகாரி ஒருவரையும் விட ஒரு இராணுவச் சிப்பாய் கூடுதல் அதிகாரம் படைத்தவராக வலம் வரும் நிலை மூன்று தசாப்தங்களாகக் காணப்பட்டது.

அப்படியான இராணுவத்தினர் அண்மைக்காலங்களாக முகாம்களுக்குள் முடக்கப்பட்டுக் கிடப்பதை அவர்கள் வெறுக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

அதிலிருந்து வெளியே வர எத்தனிக்கிறார்கள் என்பதையே லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவினதும், மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியினதும் கருத்துக்கள் எடுத்துக் காட்டுகின்றன.

போர் முடிவுக்கு வந்த காலத்தில் இருந்து வடக்கில் படையினரைக் குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் அந்தக் கோரிக்கை தமிழர்களால் இன்னும் கூடுதலாக வலியுறுத்தப்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்னர் வரை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவும் கூட அதற்குச் சாதகமாகவே கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

வடக்கில் பாதுகாப்பை முழுமையாக பொலிஸ் பொறுப்பேற்பதை வரவேற்கிறேன் என்றும் அவர்களிடம் பாதுகாப்பை ஒப்படைத்து விட்டு செல்வதற்கான நாளுக்காக காத்திருப்பதாகவும் அவர் ஒரு செவ்வியின் போது கூறியிருந்தார்.

ஆனால் இப்போது அவரது கருத்துக்கள் அதற்கு நேர்மாறானவையாக தென்படுகின்றன. இன்னொரு போரைத் தொடங்குவதற்காகத் தான் வடக்கில் இருந்து படையினரை அகற்றுமாறு கோருகிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் படை விலக்கத்தை சாதகமான சாத்தியமான ஒன்றாக குறிப்பிட்ட இராணுவத் தளபதி இப்போது அத்தகைய கோரிக்கைகளை இன்னொரு போருக்கான அடித்தளமாக காட்ட முனைகிறார்.

இது வடக்கின் பாதுகாப்பு தொடர்பான இராணுவத்தின் மூலோபாயத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.

ஆயுதக்குழுக்களை அடக்கும் அதிகாரத்தையும் போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்தும் அதிகாரத்தையும் படையினர் கோரியிருப்பது இந்தச் சந்தேகத்தை இன்னும் வலுப்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

இராணுவத் தரப்பின் இந்தக் கோரிக்கைக்கு அரசாங்கம் ஆதரவளிக்காதது போலவே காட்டிக்கொள்கிறது.

ஆயுதக் குழுக்களை அடக்குவதற்கு தமக்கு அதிகாரம் தருமாறு இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்தை சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார வெறுப்புடனேயே நோக்கியிருக்கிறார். இது அவருக்குத் தேவையில்லாத விடயம் என்ற தொனியில் அவர் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

அத்துடன் வடக்கில் நிலைமைகள் முற்றிலும் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன என்றும் அங்கு தீவிரவாதச் சூழல் ஏதும் இல்லை குழு மோதல்கள் தான் நடக்கின்றன அவையும் கூட மிகவும் பாரதூரமானவையாக இல்லை என்று அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார விளக்கமளிக்க முற்பட்டுள்ளார்.

பொலிஸாரைக் கொண்டே கட்டுப்படுத்தக் கூடிய குழுக்கள் தான் வடக்கில் செயற்படுகின்றன என்றே பொலிஸ் அதிகாரிகளும் கூறியிருக்கிறார்கள். ஆனால் பொலிஸார் மெத்தனமாக நடந்து கொள்வதாக பரவலான குற்றச்சாட்டு இருப்பது உண்மை. இது ஏன் என்ற கேள்வியும் இருக்கிறது.

அதாவது பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி விடும் விளையாட்டா இது என்ற சந்தேகங்கள் தமிழ் மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது.

எவ்வாறாயினும் ஆயுதக் குழுக்களை அடக்க போதைப்பொருளைக் கட்டுப்படுத்த என்ற போர்வையில் வடக்கில் தனது ஆதிக்கத்தை அதிகாரத்தை விரிவுபடுத்தும் எத்தனிப்பில் படைத்தரப்பு இறங்கியிருக்கிறது.

ஏற்கனவே வடக்கில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்தமைக்கும் ஆயுதக் குழுக்கள் உருவானமைக்கும் இராணுவமே காரணம் என்ற குற்றச்சாட்டு பரவலாக கூறப்பட்டு வந்தது. அதனை படைத்தரப்பு முற்றாகவே நிராகரித்தும் வந்தது.

வடக்கில் தமது செயற்பாடுகளையும் நிலைகொள்ளலையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக இராணுவத் தரப்பு இத்தகைய சமூக விரோத செயற்பாடுகளுக்கு மறைமுக ஊக்கம் அளிக்கிறது என்ற குற்றச்சாட்டில் உண்மைகள் இருக்கிறதோ இல்லையோ இந்த விவகாரங்களை வைத்து இராணுவம் வெளியே வர முனைகிறது என்பது மாத்திரம் உண்மையாகியிருக்கிறது.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தான் ஆவா குழு இதுவரை செயற்பட்டு வந்தது. அதனை அடக்குவதற்கு இராணுவம் அனுமதி கோரியுள்ள நிலையில் வவுனியாவிலும் தமது செயற்பாடுகளை விரிவுபடுத்தப் போவதாக ஆவா குழுவின் பெயரால் துண்டுப் பிரசுரங்கள் வீசப்பட்டிருக்கின்றன.

இதன் பின்னணியில் இருப்பது யார்? எதற்காக இந்தச் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு அவர்கள் தலையெடுக்க முனைகிறார்கள் என்பது சந்தேகங்களை இன்னும் வலுப்படுத்துகிறது.

ஆயுதக் குழுக்களை கட்டுப்படுத்தும் அதிகாரத்தைக் கோரும் இராணுவம் தன்னிடமுள்ள புலனாய்வுப் பிரிவின் மூலம் தகவல்களைத் திரட்டி அவற்றை பொலிஸாருக்கு வழங்க முடியும். போதைப்பொருள் கடத்தல் பற்றி இரகசியத் தகவல்களையும் அவர்களால் பொலஸாருடன் பகிர முடியும்.

48 மணி நேரத்தில் ஆயுதக் குழுக்களை அடக்குவோம் என்று சூளுரைக்கும் இராணுவம் தன்னிடமுள்ள புலனாய்வு வலையமைப்பை நம்பியே இதனைக் கூறியுள்ளது.

அவ்வாறாயின் ஏன் அந்தப் புலனாய்வுத் தகவல்களை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுடன் முழுமையாகப் பகிர்ந்து கொள்ளத் தயங்குகிறது?

வடக்கின் பாதுகாப்புத் தகவல்கள் தமது விரல் நுனியில் இருக்கிறது என்று கூறும் படைத்தரப்பு நினைத்தால் போதைப்பொருள் கடத்தல்காரர்களை ஒரு அங்குலம் கூட நகரவிடாமல் தடுத்து விட முடியும்.

என்னதான் போதைப்பொருட்கள் பிடிக்கப்பட்டாலும் அது தாராளமாக தொடர்கிறது என்றால் ஓட்டைகள் நிறைய இருக்கின்றன என்று தான் அர்த்தம்.

இவ்வாறான ஓட்டைகளை அடைக்க இராணுவம் விரும்பவில்லை. ஏனென்றால் வடக்கில் தாம் மீண்டும் வெளியே வந்து செயற்படுவதற்கு இந்த ஓட்டைகள் பயன்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள் போலும்.

தற்போதைய அரசாங்கம் இப்போதைக்கு இடமளிக்காவிடினும் அது நிரந்தரமானதாக இருக்கும் என்று நம்ப முடியாது.

-எழுத்தாளர் Subathra-

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net