ராகுல் காந்தியின் பிரசாரத்தில் வெடிப்புச் சம்பவம்! விசாரணைக்கு உத்தரவு!

ராகுல் காந்தியின் பிரசாரத்தில் வெடிப்புச் சம்பவம்! விசாரணைக்கு உத்தரவு!

ராகுல் காந்தியின் தேர்தல் பிரசாரத்தின் போது, பலூன் வெடித்து தீப் பற்றிய விவகாரம் குறித்து, இன்று (செவ்வாய்க்கிழமை) மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன்தினம் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரில் திறந்த வாகனத்தில் சென்றவாறு சட்டசபைக்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.

இதன்போது, சாலையோரம் அவரை வரவேற்க கட்சித் தொண்டர் ஒருவர் வைத்திருந்த ஹீலியம் நிரப்பிய பலூன்கள், இன்னொரு தொண்டர் வைத்திருந்த ஆரத்தி தீயில் உரசியது.

இதனால் பலூன்கள் வெடித்துச் சிதறி தீப்பிழம்பு ஏற்பட்டது. எனினும் அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயமடையவில்லை.

சிறப்பு பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு அளிக்கும் தேசியத் தலைவர் ஒருவருடைய பிரசாரத்தில் இதுபோன்ற அசம்பாவிதம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையிலேயே மத்திய உள்துறை அமைச்சகம் இச்சம்பவம் தொடர்பான விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து விசாரிக்க மத்திய பாதுகாப்பு அமைப்பு ஒரு குழுவை நியமிக்கும் எனவும், அந்த குழு, சம்பவம் தொடர்பாகவும் அதன் பின்னணி குறித்தும் விசாரணைகளை மேற்கொண்டு அதன் அறிக்கையினை உள்துறை அமைச்சிற்கு அளிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net