நாட்டின் குழப்பநிலையை தீர்க்க பொதுத் தேர்தலே ஒரே வழி!

நாட்டின் குழப்பநிலையை தீர்க்க பொதுத் தேர்தலே ஒரே வழி!

நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான அரசியல் சூழலுக்குத் தீர்வினை முன்வைக்க, பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டியத் தேவை தமது தரப்புக்கு இல்லை எனவும் அவர் கூறினார்.

கொழும்பில், நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுக் கொண்டார் என்ற செய்தி வரும் முன்னர், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்துக்கு வழங்கிய ஆதரவை வாபஸ் பெற்றுக்கொண்ட செய்தியே வெளிவந்தது. இதனால், அமைச்சரவை தானாகவே கலைந்தது. அரசமைப்பில் 42 (2) உறுப்புரையில் இந்த விடயம் தொடர்பில் தெளிவாக கூறப்பட்டுள்ளது.

அதாவது, அமைச்சரவை கலைந்தவுடன் பிரதமர் பதவியும் செல்லுபடியற்றதாகி விடும். அதேநேரம், 42 (4) உறுப்புரையில் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு இணங்க நாடாளுமன்றில் பெரும்பான்மை உள்ள ஒருவரை நியமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே உள்ளது. இந்த காரணத்தினால்தான் மஹிந்த ராஜபக்ஷவை அவர், பிரதமராக நியமித்தார். மேலும், நாட்டில் சிங்கள மொழிதான் தேசிய மொழி.

ஆனால், சிங்கள மொழி அரசியலமைப்புக்கும் ஆங்கில அரசியலமைப்புக்கும் இடையில் பாரிய வித்தியாசங்கள் இருக்கின்றன.

பிரதமரை நீக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளதென சிங்கள மொழி மூல அரசமைப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமையானது, ஆங்கில மொழி மூல அரசியலமைப்பில் பிரதமர் மரணித்தால் வேறு ஒரு பிரதமரை நியமிக்க முடியும் என்றே கூறப்பட்டுள்ளது.

ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர், ஆங்கில மொழி அரசியலமைப்பை பார்த்தக் காரணத்தினால்தான் இவ்வளவு குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பில், ரணில் விக்கிரமசிங்க உச்சநீதிமன்றத்தைக்கூட நாட முடியும்.

ஆனால், அங்கு சென்றால் தமக்கு பாதகமான தீர்ப்பு வந்துவிடும் என்ற காரணத்தினால்தான் இதுவரை அவர்கள் உச்சநீதிமன்றை நாடவில்லை.

மேலும், நாடாளுமன்றில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவந்தால் மட்டுமே மஹிந்தவை நீக்க முடியும். அவர்களுக்கு பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் இதனையும் அவர்கள் மேற்கொள்ள மாட்டார்கள். இந்நிலையில், நாடாளுமன்றைக் கூட்டுமாறு சர்வதேச நாடுகள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதியால் ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்றைக் கூட்டுமாறு வலியுறுத்த, அமெரிக்காவுக்கு என்ன அதிகாரம் உள்ளது? புதிய வரவு- செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்காகவே நாடாளுமன்றம் பிற்போடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்க வேண்டுமெனில் பொதுத் தேர்தலை நடத்துமாறு நாம் கோரிக்கை விடுக்கிறோம். மக்களின் ஆணைக்கு இணங்க புதிய பிரதமர் ஒருவரை நியமிக்க நாம் தயாராகவே இருக்கிறோம்.

எனவே, இந்த விடயத்தை மக்களின் தீர்ப்பிற்கு கொண்டுசென்றாலும், அதற்கு முகம் கொடுக்கத் தயாராகவே நாம் இருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.

Copyright © 0099 Mukadu · All rights reserved · designed by Speed IT net