அரசாங்கத்துடன் மீண்டும் இணைய போவதில்லை!

அரசாங்கத்துடன் மீண்டும் இணைய போவதில்லை!

காபந்து அரசாங்கம் அமைப்பதற்கான அழைப்பை ஏற்று மீண்டும் அரசாங்கத்துடன் இணையப் போவதில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”காபந்து அரசாங்கம் அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.

இதிலிருந்து அவர்கள் பயந்துவிட்டார்கள் என்பது புலப்படுகிறது. ஆனால், நாங்கள் அவர்களுடன் இணையப் போவதில்லை.

நாம் தேர்தலுக்கு செல்வதற்கு தயாராகவுள்ளோம். 2019ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதிக்கு பின்னர் ஜனாதிபதிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கு செல்ல முடியும்.

நாடாளுமன்றத்தில் 225 பேர் மத்தியிலான வாக்கெடுப்பை குழப்பியவர்கள், பொதுத் தேர்தலில் குழப்பத்தை ஏற்படுத்த என்னென்ன செய்வார்கள் என்பதை எம்மால் ஊகித்துக் கொள்ள முடியும்.

பொலிஸ், இராணுவம், அரச ஊடகங்களை பயன்படுத்தி எமது வாக்குகளை சூரையாட இந்த அரசாங்கம் முயலுமாயின் அதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம்.

யார் என்ன சதித்திட்டங்களை தீட்டினாலும் அதனை முறியடித்து ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஆட்சியை நிலைநிறுத்துவோம்” எனத் தெரிவித்தார்.

Copyright © 3407 Mukadu · All rights reserved · designed by Speed IT net