பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கண்டுகொள்ளாத உலக நாடுகள்!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை கண்டுகொள்ளாத உலக நாடுகள்!

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராகக் கொண்ட அமைச்சரவை பொறுப்பேற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவடைகின்ற நிலையில், எந்தவொரு நாடும், புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்துத் தெரிவிக்கவில்லை என செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மாதம் 26ஆம் திகதி, மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக நியமிக்கப்பட்டார். அதையடுத்து, அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.

இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல்கள்,வெளிவிவகார அமைச்சு ஊடாக, வெளிநாடுகளில் உள்ள இலங்கைக்கான தூதரகங்களுக்கு அனுப்பப்பட்டன.

இந்த ஆட்சி மாற்றம் பற்றி இலங்கை தூதரகங்கள் மூலம், அந்தந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கும் தெரியப்படுத்தப்பட்டது, எனினும், எந்தவொரு நாடும், வாழ்த்துச் செய்தியை அனுப்பாதமை அரசாங்கத்துக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

முன்னதாக, சீனத் தூதுவர் செங் ஷியுவான், மஹிந்த ராஜபக்ஷவை கடந்த 12 ஆம் திகதி சந்தித்து வாழ்த்துக் கூறியிருந்தார்.

எனினும், சீன அரசாங்கம் இந்தச் சந்திப்புக் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அதிகாரபூர்வ வாழ்த்துச் செய்தி பீஜிங்கில் இருந்து அனுப்பப்படவும் இல்லை.

அதைவிட, மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த அதே நாளன்று, அலரி மாளிகையில் ரணில் விக்கிரமசிங்கவையும், சீனத் தூதுவர் சந்தித்திருந்தார்.

அத்தோடு நவம்பர் 1 ஆம் திகதி பாகிஸ்தான் தூதுவர், மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த அதேவேளை, சபாநாயகரையும் சந்தித்து அரசியல் நிலைமைகள் குறித்து உரையாடியிருந்தார். வேறு எந்தவொரு நாடும், மஹிந்த ராஜபக்ஷவைச் சந்திக்கவோ, வாழ்த்துக் கூறவோ இல்லை.

புரூண்டியின் பிரதிநிதி ஒருவரை மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தார் என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காண்பிக்கப்பட்டது. எனினும், மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்தவர் ஒரு இராஜதந்திரியா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

பொதுவாக அரசாங்கம் ஒன்று மாறும் போது, வாழ்த்துச் செய்தியை அனுப்புவது இராஜதந்திர நடைமுறையாகும்.

ஆனால் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு ஒரு மாதமாகியும், எந்தவொரு நாடும் அதிகாபூர்வமாக வாழ்த்துச் செய்தியை அனுப்பாதமை, பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net