விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியுள்ளனர்! விமல் குற்றச்சாட்டு

விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியுள்ளனர்! விமல் குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியுள்ளதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலை நடத்துமாறு வலியுறுத்தி பத்து இலட்சம் கையொப்பங்களை திரட்டும் நோக்கில் நேற்று (சனிக்கிழமை) கடவத்தையில் ஆரம்பமான நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் உரையாற்றிய அவர், கடந்த மூன்றரை ஆண்டு காலப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் மீள எழத் தொடங்கியமை பற்றிய விபரங்கள் புலனாய்வுத் தகவல்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை இயங்கச் செய்வதற்கு ஆர்வம் அல்லது நாட்டம் கொண்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

இவ்வாறானவர்கள் புலம்பெயர் சமூகத்துடன் பேணி வரும் தொடர்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளது என கூறினார்.

இராணுவப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஓர் கட்டத்திற்கு அப்பால் விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது, ஏனெனில் கைது செய்யும் அதிகாரம் அவர்களுக்கு கிடையாது.

எனவே இந்த விடயங்கள் அனைத்தையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் பாதுகாப்புச் சபையில் சமர்ப்பித்தனர்.

பாதுகாப்புச் சபை இந்த விபரங்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைத்தது என தெரிவித்துள்ளார்.

அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இனவாதத்தை தூண்டு செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருவதாகவும் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் ஐக்கிய தேசிய கட்சிக்கு கட்டளையிடுகின்றார் என்றும் உளவுத்துறை ஆதாரங்களை மேற்கோள் காட்டி இனவாதத்தை தூண்டு செயற்பாட்டிலும் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net