சேப்பாக்கத்தில் அரசாணை எரிப்பு போராட்டம் – 200 ஆசிரியர்கள் கைது!

சேப்பாக்கத்தில் அரசாணை எரிப்பு போராட்டம் – 200 ஆசிரியர்கள் கைது!

சேப்பாக்கத்தில் அரசாணைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட 200 ஆசிரியர்களை போலிஸார் கைது செய்துள்ளனர்.

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் தமிழகம் முழுவதும் அரசாணை எரிப்பு போராட்டம் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

இடைநிலை ஆசிரியர்களுக்கும் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சென்னை சேப்பாக்கத்தில் மாநில பொதுச் செயலாளர் மயில் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் 1000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது தமிழக அரசு வெளியிட்ட 1988ஆம் ஆண்டு அரசாணை மற்றும் 2009ஆம் ஆண்டு அரசாணைகளை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை போலிஸார் கைது செய்தனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பொதுச் செயலாளர் மயில், தமிழகத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக 1988-ம் ஆண்டு முதல் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழக அரசு 7ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்தி இணையாக வழங்கப்பட்டு வந்த ஊதியத்தை குறைத்து விட்டது. இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 5,500 ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து அந்த இழப்பை சீர் செய்ய கடந்த 9 ஆண்டுகளாக தாம் போராடி வந்தபோதிலும் 8ஆவது ஊதியக்குழுவை அமுல்படுத்தி வெளியிட்ட அரசாணை, 303 மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க சிபாரிசு செய்யவில்லை என்றும் தெரிவித்தார்

இதனால் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 14,800 ரூபாய் இழப்பு ஏற்பட்டதால் ஒரே கல்வி, ஒரே பணியினை செய்து வரும் ஆசிரியர்களுக்கு 3 விதமான ஊதியம் வழங்கப்படும் நிலை காணப்பட்டது. இதனால் இடைநிலை ஆசிரியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

ஊதிய இழப்பை சீர் செய்ய வேண்டும் என இதுவரையில் 54 போராட்டங்களை நடத்தி விட்டபோதிலும் இதுவரையில் சீர் செய்யப்படாத நிலையில் அரசாணை எரிப்பு போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்ததாக தெரிவித்தார்.

இன்றைய போராட்டத்தில் கலந்துக்கொண்ட ஆசிரியர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ள போதிலும் தமது கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் அவர் சவால்விடுத்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net