வடக்கு – கிழக்கில் எஞ்சிய காணிகள் விரைவில் விடுவிப்பு!

வடக்கு – கிழக்கில் எஞ்சிய காணிகள் விரைவில் விடுவிப்பு: இராணுவம் அறிவிப்பு!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சுமார் ஆயிரத்து 300 ஹெக்ரெயர் நிலப்பரப்பு தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

எனினும் இது வரை 19 ஆயிரம் ஹெக்ரெயருக்கும் அதிகளவிலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விடுவிக்கக்கூடிய காணிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு முன்னெடுத்த ஆய்வுகள் தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதற்கமைவாக 95 வீதமான காணிகள் உரிமையாளர்களிடம் மீளக் கையளிக்கப்பட்டுள்ளதுடன், 5 வீதமான காணிகளே விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்படி, இரண்டு மாகாணங்களில் சுமார் ஆயிரத்து 300 ஹெக்ரெயர் நிலப்பரப்பு தமது கட்டுப்பாட்டில் இருப்பதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளதுடன், குறிப்பாக, பலாலி, முல்லைத்தீவு, கேப்பாப்புலவு, மயிலிட்டி மற்றும் கிளிநொச்சி உள்ளிட்ட பல பகுதிகளில் காணிகள் மீள வழங்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டு முதல் இது வரையான காலப்பகுதியில் 19 ஆயிரம் ஹெக்ரெயருக்கும் அதிகமான காணிகள் உரிமையாளர்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை என கருதப்பட்ட காணிகளே உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

வடக்கு, கிழக்கில் பாதுகாப்புப் பிரிவினர் வசமுள்ள காணிகளை எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளை பணித்திருந்தமைக்கு அமைவாகவே குறித்த ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net