கிடைத்த சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு நழுவவிடக்கூடாது!

கிடைத்த சந்தர்ப்பத்தை கூட்டமைப்பு நழுவவிடக்கூடாது!

இலங்கையில் இன்று அரசை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இந்த சந்தர்ப்பத்தை தமிழ் மக்களின் நலனுக்காக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்கட்சி தலைவர் தவராசா கோரிக்கைவிடுத்துள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற நிலையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னனிக்கு ஆதரவு வழங்கியிருப்பது இராஜதந்திரமா, அல்லது சரணாகதி அரசியலா என்ற கேள்வியை தோற்றுவிப்பதாகவும் அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

15 நாடாளுமன்ற உறுப்பினரக்ளைத் தன்னகத்தே கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குக் கிடைத்திருக்கும் இவ்வாய்ப்பானது சுதந்திர இலங்கையில் தமிழ் மக்களிற்கு கிடைத்திருக்கும் ஓர் அரிய சந்தர்ப்பம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பினால் நேற்று (வியாழக்கிழமை) ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ராஜதந்திரமா, அல்லது சரணாகதி அரசியலா என்ற கேள்வியினை எழுப்பி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான அவர்களின் செயற்பாடு கடந்த ஏப்ரல் மாதத்தில் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்ட போதும் மேற்கொள்ளப்பட்டதால் சந்தேகம் எழுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது உள்ள அரசியல் சூழலைப் பயன்படுத்தி எமது அடிப்படை அரசியற் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான அரசியலமைப்பு மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான உறுதிப்பாட்டினை ஐ.தே.மு அல்லது முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமிருந்து பெற்றிருக்க வேண்டுமென்று எதிர்பாரப்பது நடைமுறைக்கு சாத்தியமற்ற கோரிக்கையாக அமையும் என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஏனெனில் அரசியலமைப்பு மாற்றத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தேவை ஏற்படும் பட்சத்தில் சர்வஜனவாக்கெடுப்பிற்கும் செல்லவேண்டியிருக்கும். ஆனால், நிர்வாகரீதியாகவும், நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் தீர்க்கப்பட வேணடிய எத்தனையோ விடயங்கள் உள்ளன.

அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமற் போனோர் தொடர்பான விடயங்கள், படையினர் வசமிருக்கும் அரச காணிகளை விடுவிப்பது என்பனவும் உடனடியாகச் செயற்படுத்தப்பட வேணடிய அரசியல் வேலைத்திட்டங்கள் ஆகும்.

இவ்வாறாக நடைமுறையில் செயற்படுத்தக் கூடிய விடயங்களிலாவது ஐ.தே.முன்னணியிடமிருந்து உறுதிப்பாட்டைப் பெற்றுக்கொண்டு அதனை நடைமுறைப்படுத்துவதற்கான காலவரையறையுடனான நிபந்தனையுடன் ஆதரவினை வழங்குவது சிறந்ததாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறு இல்லாதவிடத்து இவ்விடயங்களை ஐ.தே.முன்னணிக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தரப்பினரிற்கும் தெரிவித்து தமிழ் மக்களின் பிரச்சினைக்கு உடனடி தீர்வினை பெற்றுத்தருபவர்களுக்கு ஆதரவு வழங்குவதே தமிழ் மக்களுக்கு ஏற்புடையது என்றும் தவராசா சுட்டிக்காட்டியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net