பச்சிளம் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற தாய்!

பச்சிளம் குழந்தையை தரையில் அடித்துக்கொன்ற தாய் – விசாரணையில் அம்பலமான கொடூரச் செயல்!

காசிமேட்டில் பிறந்து 18 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை தரையில் அடித்து கொலை செய்து விட்டு, பாலூட்டியபோது மூச்சுத்திணறி குழந்தை இறந்துவிட்டதாக நாடகமாடிய பெண்ணை பொலிஸார் கைது செய்தனர்.

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரைச் சேர்ந்த சத்யராஜ். கட்டிடத்தொழிலாளி. இவருடைய மனைவி செலஸ்டின் (வயது 23).

இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஏற்கனவே 1½ வயதில் நிஷாந்தி என்ற பெண் குழந்தை உள்ளது.

இதற்கிடையில் கடந்த மாதம் மீண்டும் பெண் குழந்தை ஒன்று பிறந்தது. கடந்த 12 ஆம் திகதி குழந்தை திடீரென இறந்தது. பாலூட்டியபோது குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்து விட்டதாக செலஸ்டின் கூறினார்.

இதுகுறித்து காசிமேடு பொலிஸார் வழக்குப்பதிவு செய்து குழந்தையின் பிணத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில், பச்சிளம் குழந்தையின் பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, இறந்துள்ளமை தெரியவந்தது.

இதையடுத்து ராயபுரம் பொலிஸ் உதவி ஆணையாளர் கண்ணன் தலைமையில் குழந்தையின் தாயாரான செலஸ்டினிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர், தனது குழந்தையை தரையில் அடித்துக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.

இந்த விசாரணையில் அவர் தெரிவித்ததாவது, “எனது கணவர் சத்யராஜூடன் வேளச்சேரியில் கட்டிட வேலைக்குச் சென்றிருந்தபோது அவருக்கு ஏற்கனவே ஜெயந்தி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று, அவருக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது.

ஏற்கனவே ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டு அதனை மறைத்து என்னை 2 ஆவதாக திருமணம் செய்து கொண்டது எனக்கு வாழ்க்கையில் வெறுப்பை ஏற்படுத்தியது.

1½ வயதில் பெண் குழந்தையை வைத்துக்கொண்டு வாழ்க்கை நடத்த முடியாமல் கஷ்டப்பட்டு வந்த நான், இந்த குழந்தையையும் வளர்க்க முடியாமல் கஷ்டப்படுவதைவிட அந்த குழந்தையை கொன்று விடலாம் என்று முடிவு செய்தேன்.

இதனால் மனதை கல்லாக்கிக்கொண்டு குழந்தையின் காலை பிடித்து, தலையை தரையில் ஓங்கி அடித்தேன்.

இதில் குழந்தை அலறி சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. உடனே குழந்தையை தூக்கி தொட்டிலில் போட்டுவிட்டு குழந்தை பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 2020 Mukadu · All rights reserved · designed by Speed IT net