அதிகார போட்டிக்குள் சிக்கவேண்டிய அவசியமில்லை!

அதிகார போட்டிக்குள் சிக்கவேண்டிய அவசியமில்லை!

எவ்வித நிபந்தனைகளுமின்றி ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு தெரிவித்து அவர்களுடைய அதிகார போட்டிக்குள் சிக்கவேண்டிய அவசியமில்லையென டெலோவின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி பரிந்துரைக்கும் பிரதமருக்கு, பெரும்பான்மையை கருத்திற்கொண்டு ஆதரவளிப்பதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளமைக்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ எதிர்பை வெளியிட்டுள்ளமை தொடர்பில்  செய்திப்பிரிவுக்கு (வெள்ளிக்கிழமை) வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அதில் மேலும் கூறியுள்ளதாவது,

“தற்போதைய சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்குவது குறித்து கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பு குழுவில் தீர்மானித்திருக்க வேண்டும்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீது நம்பிக்கையில்லை என்ற தீர்மானத்தை முன்மொழிய வேண்டுமென கடந்த நவம்பர் மாதம் 8ஆம் திகதி நடைபெற்ற த.தே.கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு முக்கியமான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுத்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதிக்கு முன்னர் இருந்த நிலைமைக்கு கொண்டுசெல்ல வேண்டுமென நாங்கள் கூறுவதாக இருந்தாலும் கூட ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான ஆட்சி இருக்கவில்லை.

அப்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கமே காணப்பட்டது.

ஆகையால் எவ்வித நிபந்தனைகளுமின்றி அவசரப்பட்டு ஆதரவு தெரிவித்து, அவர்களுடைய அதிகார போட்டிக்குள்ளே நாம் சிக்க வேண்டிய அவசியமில்லை என்பதே நிலைப்பாடு.

எனவே இனிமேல் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் அல்லது ஜனாதிபதி தேர்தலில் ஆட்சிக்கு யார் வருவார் என்பதை கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டியது மிகவும் அவசியமானவொன்றாகும்.

டிசம்பர் மாதம் 1ஆம் திகதி காலை 10 மணிக்கு டெலோ இயக்கத்தின் மத்திய குழு கூட்டம் வவுனியாவில் நடைபெறவுள்ளது. அதில் இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படும்

இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமொன்று, ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதில் ஆதரவு தெரிவித்துள்ள டெலோ இயக்கத்தின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பத்தை மீள பெறும் தீர்மானம் கூட மேற்கொள்ளப்படலாம்” என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net