பொட்டம்மான் உயிருடன் இல்லை..!!

பொட்டம்மான் உயிருடன் இல்லை..!! நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கும் ஒரு முக்கிய கோரிக்கை !

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி உயிரிழந்தவர்களுக்கு உயிர்கொடுக்க பலர்முனைகின்றார்கள் எனவும், உயிரிழந்த பொட்டம்மானை இன்று கொண்டு வந்திருக்கிறார்கள் என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகபேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார்.

வவுனியா ஊடகமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்கு மத்தியில் தமிழர் பிரதேசத்தில் ஏற்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் அசாதாரண நிலமைகள் தொடர்பாக எமது மக்களுக்கும், போராளிகளுக்கும் தெளிவூட்டல்களை மேற்கொள்ளவேண்டிய தேவை எமக்கு இருக்கிறது.2009ஆம் ஆண்டிற்கு பின்னர் விடுதலைப் புலிகளால் ஒரு சன்னம்கூட பாவிக்கபடாத நிலமையிலே தற்போது நடைபெற்றுகொண்டிருக்கும் அசம்பாவிதங்களுக்கு புலிகளை சுட்டிக் காட்டிக் கொண்டிருப்பது வெறுமனே ஒரு கண்துடைப்பாகவே அமைந்துள்ளது.

வவுணதீவு சம்பவம் தொடர்பில் சரியான முறையிலே விசாரணைகள் நிறைவுபெறுவதற்கு முன்னர் குறித்த விடயத்தில் போராளிகளை தொடர்புப் படுத்துவதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.

விசாரணைகள் முடிவடையும் வரை உங்களது அனுமானங்களை மிகவும் கவனமாக வெளியிட வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை பயன்படுத்தி இறந்தவர்களிற்கு உயிர்கொடுக்க பலர்முனைகின்றார்கள். உயிரிழந்த பொட்டம்மானை இன்று கொண்டு வந்திருக்கிறார்கள்.

இனிவரும் காலங்களிலே தளபதிகளான பால்ராஜ், கிட்டு, செல்லகிளி போன்றவர்களையும் கொண்டுவரக்கூடிய வாய்ப்புக்கள் இருக்கிறன.

எவ்வளவு கடினமான சூழ்நிலையிலும் புலிகளின் தலைமையோ, தளபதிகளோ ஒருகாலமும் நாட்டைவிட்டு தப்பி ஓடுவதற்கு எத்தணிக்கவில்லை. அவர்கள் இறுதிவரை போராடி அந்த மண்ணிலேயே தங்களை அர்பணித்துக் கொண்டார்கள் என்பதுதான் நிஜம்.

போராளிகளான நாங்கள் அரசியல் கட்டமைப்பாக, ஜனநாயக முறையிலே இலங்கை தேர்தல் திணைக்களத்தில் பதிவு செய்துவிட்டு எமது அரசியல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறோம்.

தற்போது புலம்பெயர் தேசத்திலே இருக்க கூடிய காகிதபுலிகள், தலைமைசெயலகம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், என்ற பெயர்களில் இயங்கி வருகிறார்கள். தலைமைசெயலகம் என்பது விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமான கைவேலியில் மாத்திரமே இருந்தது.

வெளிநாடுகளில் அதனை நிறுவசொல்லி எமது தலைவர் ஒருபோதும் கூறவில்லை. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தமது கட்டமைப்புகளை கலைத்துவிட்டு இங்கு வருகைதந்து மக்களுக்கு தேவையான விடயங்களை செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

தமிழர்களின் பேரம்பேசும் சக்தியாக திகழும் கூட்டமைப்பு அரசியல் கைதிகளின் விடயத்தில் எவ்வாறு செயற்படவேண்டும் என்ற திட்டங்களை நாம் வழங்கியிருக்கிறோம்.

அவர்களின் விடுதலை தொடர்பாக ஓரிரு தினங்களில் சம்பந்தன் ஐயா முக்கியமான செய்தியை வெளியிடுவார் என்று நாங்கள் எதிர்பார்கிறோம் என” அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net