முல்லைத்தீவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள்!

முல்லைத்தீவின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சில பகுதிகள்!

கொக்குத்தொடுவாய் – கருநாட்டுக்கேணியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் கொக்குத்தொடுவாய் வடக்கு, தெற்கு, மத்தி ஆகிய மூன்று கிராம அலுவலகர் பிரிவுகள் மற்றும் அதனையடுத்துள்ள, கருநாட்டுக்கேணி ஆகிய கிராம அலுவலகர் பிரிவுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால் வீடுகள், வீதிகள், பயிர் நிலங்கள் என்பன நீரினால் மூடப்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்கள் பலத்த இன்னல்களுக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இது தொடர்பில் ரவிகரனினால் கரைதுறைப்பற்று பிரதேசசெயலகருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன், முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவத்தினருக்கும் தெரியப்படுத்தப்பட்டது.

இந் நிலையில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களை கொக்குத்தொடுவாய் தமிழ் மகா வித்தியாலயத்தில் அமர்த்துவதாகவும், அவர்களுக்குரிய உணவு வசதிகளும் ஏற்படுத்தி தருவதோடு, ஊர் மனைகளுக்குள் புகுந்துள்ள நீரினை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் இ.பிரதாபன் தெரிவித்திருந்தார்.

மேலும் குறித்த பகுதி மக்களால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலக்கடலையும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவர்களுக்கான நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென ரவிகரனினால் கரைதுறைப்பற்று பிரதேச செயலகரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அத்தோடு குறித்த நிலமைகளுக்கான நடவடிக்கைகளை தாம் எடுப்பதாகவும் பிரதேச செயலாளர் தெரிவித்திருந்தார்.

கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான சி.லோகேசுவரன், மற்றும் சிவலிங்கம் ஆகியோரும் சம்பவ இடத்தில் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 4323 Mukadu · All rights reserved · designed by Speed IT net