மன்னாரில் கைவிடப்பட்டுள்ள முன்னாள் போராளிகள்!

மன்னாரில் கைவிடப்பட்டுள்ள முன்னாள் போராளிகள்! வாழ்வாதாரம் கேள்விக்குறி!

நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் வசிக்கும் முன்னாள் போராளிகள் மற்றும் போராளிகளுள் மாற்றுத்திறனாளிகள் என்போர் அனைத்து உதவித்திட்டங்களில் இருந்தும் கைவிடப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் இன்றைய தினம் கருத்துத் தெரிவிக்கையில்,

இவ் வருட ஆரம்பத்திலிருந்து நானாட்டான் பிரதேசச் செயலகம் மற்றும் ஜனாதிபதி செயலக இணைப்பாளர்களுடன் இரண்டு தடவைகளுக்கும் மேற்பட்ட கலந்துரையாடல்களை முன்னாள் போராளிகள் மற்றும் போராளிகளின் மாற்றுத்திறனாளிகளும் இணைந்து மேற்கொண்டிருந்தனர்.

குறித்த கலந்துரையாடல்களை தொடர்ந்து தற்போது வரை அதிகாரிகளினால் முன்னாள் போராளிகள் மற்றும், போராளிகளின் மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அவர்களின் தேவைகளை கருதி பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட போதும், இன்று வரை எந்த வித உதவிகளும் வழங்கப்படவில்லை என கவலை தெரிவித்துள்ளனர்.

நானாட்டான் பிரதேசத்தில் மட்டும் 60இற்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் முன்னாள் போராளிகளும் 15இற்கும் மேற்பட்ட அவயங்களை இழந்தவர்களும் வாழ்ந்து வருகின்றனர்.

தினமும் கூலி வேலைக்குச் செல்லும் இவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு நானாட்டான் பிரதேசச் செயலகம் தவறிவிட்டது. இதே சமயத்தில் வறட்சி நிவாரணம், வெள்ள நிவாரணம் தந்திருந்தால் கூட பெரிய உதவியாக இருந்திருக்கும்.

பிரதேச செயலகங்களுக்கு ஒதுக்கப்பட்ட கம்பரெலியா திட்டத்தில் கூட உதவித்திட்டங்கள் எதுவும் வழங்கப்படாது தாம் ஒதுக்கப்பட்டதாக முன்னாள் போராளிகளும் மாற்றுத்திறனாளிகளும் இதன்போது தொடர்ந்தும் விசனம் வெளியிட்டுள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net