நான் மட்டுமே இன்று அரசாங்கம், என்னால் எந்த முடிவையும் எடுக்கமுடியும்!

நான் மட்டுமே இன்று அரசாங்கம், என்னால் எந்த முடிவையும் எடுக்கமுடியும்!

இலங்கையின் அரசியல் நிலவரம் தொடர்ந்தும் மோசமாகிக்கொண்டிருக்கும் நிலையில் ஜனாதிபதி இன்னமும் தனிப்பட்ட கொள்கைகளையே முன்னிறுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசிம் இந்தக்குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

கடந்த புதன்கிழமை ஜனாதிபதியுடன் ஐக்கியதேசிய முன்னணியினர் நடத்திய சந்திப்பின்போது ஜனாதிபதி அரசியலமைப்பை மதித்து நடக்கும் வகையில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

மாறாக தமது தனிப்பட்ட கருத்துக்களையே முன்னிலைப்படுத்தியதாக ஹாசிம் செய்திசேவை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் புதன்கிழமை ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக்க வேண்டும் என்ற அடிப்படையில் நம்பிக்கை யோசனை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இதனை மையமாக வைத்துக்கொண்டு ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கவேண்டும் என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்கள் கோரினர்.

எனினும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக்கமாட்டேன் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். இது கட்சி ஒன்றின் இறைமையை மீறுவது மாத்திரமல்ல.

அரசியலமைப்பையும் மீறும் செயலாகும் என்று ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ரணில் விக்ரமசிங்கவை நியமிக்காதுபோனல் அது அரசியல் அமைப்பை மீறும் செயல் என்று முன்னாள் அமைச்சர் லச்மன் கிரியெல்ல ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியபோது,

நீங்கள் என்ன? என்னை பயமுறுத்துகீறார்களா? என்று ஜனாதிபதி சத்தமிட்டுள்ளார்.

இதன்போது குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, உங்களை ஜனாதிபதியாக கொண்டு வருவதற்கு நாங்கள் எந்தளவு முயற்சிகளை மேற்கொண்டோம்.

ஆனால் இன்று நீங்கள் எங்களை தூக்கியெறிந்துள்ளீர்கள் என்று ஜனாதிபதியிடம் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஜனாதிபதி,

நான் அடுத்த தடவை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடமாட்டேன். நான் பொலநறுவைக்கு சென்று விடுவேன். அப்போது நீங்கள் சந்தோசப்படுவீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒருக்கட்டத்தில் நான் மட்டுமே இன்று அரசாங்கம், எனக்கு எந்த முடிவையும் எடுக்க முடியும் என்று ஜனாதிபதி பயமுறுத்தும் பாணியில் சத்திமிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net