வெள்ளத்தில் மூழ்கியது அம்பாறை ; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

வெள்ளத்தில் மூழ்கியது அம்பாறை ; மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக பெய்து வரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. மழையுடன் கூடிய காலநிலை மாற்றத்தால் இம்மாவட்டத்தில் சில வேளைகளில் பனி மூட்டம் நிறைந்தும் காணப்பட்டது.

சீரற்ற இக்காலநிலை காரணமாக தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கிக் காணப்படுகின்றன. பாதைகள் பலவற்றில் நீர் நிரம்பிக் காணப்படுவதால் மக்களின் போக்குவரத்துகளுக்கும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறித்த மாவட்டத்தில் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக தாழ்நில விவசாயச் செய்கைகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதுடன், கடற்றொழிலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கடற் பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதால் மீனவர்கள் கடற்றொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கடற்கரைப் பிரதேசங்களில் வீசிவரும் பலத்த காற்றின் காரணமாக கரையோரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள மீனவ வாடிகள், சிறிய ரக குடிசைகள் என்பவற்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன.

இதேவேளை ஒலுவில் துறைமுகத்தினை அண்டிய பகுதியில் கடற்றொழிலுக்குச் செல்லும் சிறிய ரக வள்ளங்கள் சில காற்றின் வேகத்திற்கு தாக்குப் பிடிக்க முடியாமல், அலையின் வேகத்தினை தடுப்பதற்காக கடலினுள் போடப்பட்டுள்ள பாறாங் கற்களில் மோதுண்டு, சேதமாகியுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள தாழ்நிலக் குடியிருப்புக்கள், தாழ் வீதிகள் மற்றும் வடிகான்கள் போன்றவற்றில் நிறைந்துள்ள நீரை அப்புறப்படுத்தும் முயற்சிகளில் உள்ளுராட்சி மன்றத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும், விவசாயச் செய்கைகளிலும் நிறைந்துள்ள நீர் முகத்துவாரங்களினூடாக அப்புறப்படுத்தும் முயற்சிகளில் துறைசார் உத்தியோகத்தர்களும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.

அட்டாளைச்சேனை கோணாவத்தைப் பாலத்தினை அண்டி பகுதியில் நீர்த் தாவரங்கள் நிறைந்துள்ளதால் இப்பிரதேச விவசாய நிலங்களில் உள்ள நீரை அப்புறப்படுத்துவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net