மைத்திரி சொன்ன கால அவகாசம் இன்றுடன் முடிகின்றது!

மைத்திரி சொன்ன கால அவகாசம் இன்றுடன் முடிகின்றது!

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடிகளை ஏழு நாட்களுக்குள் முடிவுக்குகொண்டு வருவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்த நிலையில், இன்றுடன் ஏழு நாட்கள் நிறைவடைந்துள்ளன.

கடந்த 4ம் திகதி இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி “நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலைமை அடுத்த 7 நாட்களுக்குள் முடிவுக்கு கொண்டு வருவேன்” என கூறியிருந்தார்.

ஜனாதிபதி கூறியதன்படி, இன்றுடன் ஏழு நாட்கள் கடந்த நிலையில், அரசியல் நெருக்கடிகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா அல்லது இந்த பிரச்சினை தொடருமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு தொடர்பிலான தீர்ப்பிற்கு நீதிமன்றம் திகதி குறிப்பிடப்படாமையே இந்த நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது.

இவ்வாறான நிலையில், நீதிமன்றத் தீர்ப்பை துரிதமாக வெளியிடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நீதிமன்றத்தின் தீர்ப்பினை விரைவாக வெளியிடுமாறு சட்டமா அதிபரூடாக பிரதமர நீதியரசரிடம் ஜனாதிபதி கோரவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

இதனிடையே, நாடாளுமன்றை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான நீதிமன்றின் தீர்ப்பு வரலாற்றை மாற்றக் கூடியது என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டவுரிஸ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரணில் பிரதமர் பதவியில் இருந்து அகற்றப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் 2019 ஜனவரி 07 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுக்கப்படுமென உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், “நாட்டின் அரசியலமைப்பு தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் விளக்கத்தை நான் எதிநோக்குகிறேன். அந்த விளக்கம் எதுவாயினும் நான் ஏற்க தயார்.

அதன் பிரகாரம் எவ்வித தனிநபரோ குழுவோ அல்லது எந்த தரப்புக்கோ நன்மை பாராட்டாமல் எமது நாட்டின் நலனுக்காக எதிர்கால அரசியல் தீர்மானங்களை கிரமமாக எடுப்பேன்” என ஜனாதிபதி தனது டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஜனாதிபதி சொன்ன அந்த ஏழு நாள் கால அவகாசம் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அரசியல் நெருக்கடிகளுக்கு ஜனாதிபதி முற்றுவைப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பு அனைவர் மத்தியிலும் எழுந்துள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net