மக்களையே மறந்து ஜனாதிபதி செயற்படுகின்றார்!

மக்களையே மறந்து ஜனாதிபதி செயற்படுகின்றார்!

இலங்கை நாட்டு மக்களையே மறந்து செயற்படுகின்ற ஜனாதிபதி தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினையில் அக்கறை செலுத்துவார் என்று ஒரு போதும் எதிர்பார்க்க முடியாது என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

இரவோடு இரவாக பெருந்தோட்ட கம்பனி உரிமையார்களை பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை ஜனாதிபதி முன்வைத்தாலும் ஆச்சரியபடுவதற்கு இல்லை. சில வேளை அதற்காக ஒரு வர்த்தமாணி அறிவித்தலை கூட வெளியிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுகின்ற பெருந்தோட்ட கம்பனிகள் தங்களுடைய பொறுப்பில் இருந்து வெளியேற முடியாது. அது அவர்கள் தொழிலாளர்களுக்கு செய்கின்ற மாபெரும் துரோகம் என அவர் தெரிவித்துள்ளார்.

இன்று (13) அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பள விடயம் தொடர்பாக முக்கிய பங்கு வகிப்பது பெருந்தோட்ட கம்பனிகள்.

எனவே அவர்கள் ஒருபோதும் அதில் இருந்து வெளியேற முடியாது. அவர்களுக்கு ஒரு பெரிய பொறுப்பு இருக்கின்றது. ஏனென்றால் கடந்த பல வருடங்களாக தோட்டங்களின் இலாபங்களை முழுமையாக பெற்றுக் கொண்டு தோட்டங்களை காடுகளாக்கியது மட்டுமல்லாமல் தோட்டங்களில் இருந்த மதிப்புமிக்க மரங்களை எல்லாம் வெட்டி விற்பனை செய்துவிட்டு தோட்ட தொழிலாளர்களுக்கு முறையான சம்பள உயர்வை வழங்காமல் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இவ்வாறு தொழிலார்களை மோசமான நிலைமைக்கு இட்டுச் சென்று மக்களை சீரடிக்கின்ற நிலையை பெருந்தோட்ட கம்பனிகள் உருவாக்கி வருகின்றன.

தோழிலாளர்கள் தங்களுடைய உயிரை பணயம் வைத்து தொழில் செய்கின்றார்கள். ஆனால் அவர்களுடைய எந்த ஒரு விடயத்திலும் அக்கறை செலுத்துவதில்லை.

குளவி கொட்டினாலோ அல்லது வேறு அனர்த்தங்கள் நடந்தாலோ பாதிக்கப்பட்டவர்களை வைத்தியசாலைகளுக்கு எடுத்து செய்வதற்கு வாகன வசதிகள் கூட செய்து கொடுப்பதில்லை.

ஆனால் தொழிலாளர்கள் பறிக்கின்ற கொழுந்தின் மூலமாகவே தங்களுடைய அனைத்து சுகபோகங்களையும் அனுபவித்து வருகின்றார்கள். எனவே தொழிலாளர்களை பாதுகாக்கின்ற பொறுப்பு பெருந்தோட்ட கம்பனிகளுக்கு இருக்கின்றது.

வேலை நிறுத்த போராட்டம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்த தொழிலாளர்கள் இன்று அந்த தோல்வியின் காரணமாக செய்வதறியாது இருக்கின்றார்கள்.

இன்றும் கூட ஒரு சில தோட்டங்களில் வேலைக்கு செல்வதும் ஒரு சில தோட்டங்கள் வேலை நிறுத்தத்தில் தொடர்ந்து இடுபடுவதும் என தொழிலாளர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து செயற்படுகின்றார்கள்.

பணி பகிஸ்கரிப்பிற்கு அழைப்பு விடுத்த தொழிற்சங்கங்கள் அனைத்து தொழிற்சங்கங்களுடனும் கலந்துரையாடி ஒரு போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தால் அது வெற்றிபெற்றிருக்கும் அல்லது நேரடியாகவே தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய கருத்துக்களை கேட்டறிந்து கொண்டு அவர்கள் எதிர்பார்க்கின்ற தொகை எது என்பதை கேட்டறிந்து அதற்கேற்ப பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தொழிலாளர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு தொகைக்கு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டிருக்கலாம்.

இன்றைய நிலையில் அடுத்த மாதம் சம்பளம் நிலுவைத் தொகை இவை அனைத்தும் கேள்விக்குறியாக மாறியிருப்பதாகவும் அவர் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net