தென்னாபிரிக்க மண்ணில் அச்சமின்றி விளையாடுங்கள்!

தென்னாபிரிக்க மண்ணில் அச்சமின்றி விளையாடுங்கள்!

தென்னாபிரிக்கா மண்ணில் இதுவரை பெரிதும் சாதிக்காத பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இம்முறை சாதித்தே ஆக வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளது.

இந்த நிலையில் தென்னாபிரிக்க மண்ணில் அச்சமின்றி விளையாடுமாறு வீரர்களுக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவர் சப்ராஸ் அஹமட் அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கடினமான தொடர், வேகமான, பவுண்ஸ் ஆடுகளங்கள், ஆகவே பயமற்ற கிரிக்கெட்டை வீரர்கள் வெளிப்படுத்த வேண்டும். அசார், ஆசாத் ஷபீக்கிடமிருந்து பெரிய இன்னிங்ஸ்களை எதிர்பார்க்கிறோம். நல்ல ஓட்டங்களை எடுத்தால் நல்ல பந்து வீச்சு எங்களிடம் உள்ளது, ஆகவே வெல்லலாம்.

அசார் அலி, ஆசாத் ஷபீக், பாபர் ஆஸம் ஆகியோரை பாகிஸ்தான் அணி நம்பியுள்ளது. பந்து வீச்சில் மொகமது அப்பாஸ், மொகமது ஆமிர் ஆகியோருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன.

முகமது அமிர் உள்ளூர் தொடரில் சிறப்பாக விளையாடியதால் அணியில் மீண்டும் இடம் கிடைத்துள்ளது. அவர் டெஸ்ட் போட்டியில் முக்கியமான விக்கெட்டுக்களை எங்களுக்கு பெற்றுத்தருவார் என்ற நம்பிக்கை உள்ளது’ என கூறினார்.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 26ஆம் திகதி செஞ்சூரியனில் ஆரம்பமாகவுள்ளது.

பாகிஸ்தானின் இரண்டாவது சொந்த மைதானமாக பார்க்கபடும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில், பாகிஸ்தான் அணி 1-2 என தொடரை இழந்து கடும் விமர்சனத்துக்குள்ளானது.

இதனால் அணித்தலைவர் சப்ராஸ் அஹமட் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில் ஒட்டு மொத்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, பாகிஸ்தான் அணி, தென்னாபிரிக்கா மண்ணில் சாதித்தே ஆக வேண்டுமென்ற கட்டாயத்தில் உள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு தென்னாபிரிக்கா சென்ற பாகிஸ்தான் அணி, 0-3 என அவமான தோல்வியை சந்தித்தது.

அதுவும் ஜோஹான்னஸ்பர்கில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அதன் மிகக்குறைந்த டெஸ்ட் ஓட்ட எண்ணிக்கையான 49 ஓட்டகளுக்கு ஆட்டமிழந்தது.

இந்த நிலையில் இதுபோன்றதோரு அவமானம் நிகழாத வண்ணம் பார்த்துக் கொள்ள பாகிஸ்தான், கடுமையாக முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடுவதற்காக தென்னாபிரிக்கா செல்லவுள்ள பாகிஸ்தான் அணி, அங்கு சென்று ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ரி-20 தொடரில் விளையாடவுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net