கட்சி வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்!

கட்சி வேறுபாடின்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்!

தாய் நாட்டின் எதிர்கால நன்மை கருதி அரசியல் கட்சி வேறுபாடின்றி சகலரும் தமது கடமைகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தியத்தலாவை இராணுவ கல்வியியற் கல்லூரியின் 93ஆவது பயிற்சி நிறைவு விழாவில் இன்று (சனிக்கிழமை) கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பான நீதிமன்ற தீர்ப்பின் பின்னர் ஜனாதிபதி வெளியிடும் முதலாவது உரை இதுவென்பது சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த நிகழ்வில் தொடர்ந்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி,

”நாட்டில் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பலப்படுத்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் நிறைவேற்ற நான் தயாராக உள்ளேன்.

தேசிய பாதுகாப்பு தொடர்பிலான பொறுப்புகளையும் தற்போது தாய் நாட்டுக்கு எதிராக காணப்படும் சவால்கள் தொடர்பிலும் பாதுகாப்பு துறை விழிப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

வரலாற்று காலங்களில் எமது நாடு முகங்கொடுக்க நேர்ந்த படையெடுப்புகளை விட முற்றிலும் வேறுபட்ட அந்நிய நாடுகளின் செல்வாக்கு தற்போது எமது நாட்டின் மீது செலுத்தப்படுகிறது.

அத்தகைய சவால்களை கண்டறிந்து தாய் நாட்டின் எதிர்காலத்திற்காக ஆற்ற வேண்டிய பணிகளை அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து பிரஜைகளும் அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டியது அவசியமாகும்” எனத் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net