கிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை!

கிளிநொச்சியிலும் விலைபோகும் மருத்துவத்துறை – சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொது மக்கள் கோரிக்கை!

கிளிநொச்சியின் குறிப்பிட்ட சில சுற்றயல் வைத்தியசாலைகளை இலக்கு வைத்து வலைவீசும் மருத்துவ மாபியாக்களின் கைகளில் மருத்துவர்கள் சிலர் உள்ளிட்ட சுகாதாரத்துறைப் பணியாளர்கள் சிலர் வீழந்துள்ளமை குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக முழங்காவில் ஆதார வைத்தியசாலைக்குச் செல்லும் நோயாளர்கள் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பப்படாது, வைத்தியர் ஒருவரால் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலைக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படுவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு அனுப்பிவைக்கப்படும் பொதுமக்கள் வேண்டுமென்றே இரண்டு அல்லது மூன்று வைத்திய நிபுணர்களால் பார்வையிடப்பட்டு (ஒவ்வொரு பார்வையிடலுக்கும் தனிக் கட்டணம், பரிசோதனைகளுக்கு புறம்பான கட்டணம்) இறுதியில் பெருந்தொகைக்கு அத்தனியார் வைத்தியசாலையிலேயே சிகிச்சை பெறுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பினர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் வேதனையான விடயம் என்னவெனில் யாழ்ப்பாணத்தில் உள்ள அந்தத் தனியார் வைத்தியசாலையில் கிளிநொச்சி வைத்தியசாலை வைத்தியர்கள் சிலரும் கிளிநொச்சிப் பிரதேசத்தில் இருந்து அனுப்பப்படும் நோயாளர்களைக் கட்டணம் அறவிட்டுப் பார்வையிட்டு வருகிறார்கள். என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வியாபாரத்தில் இணைந்து செயல்படும் அனைத்து வைத்தியர்களும் மக்களது வரிப்பணத்தில் கல்வி கற்று மக்களுக்காகச் சேவையாற்றுவதாகக் கடமைச் சபதம் எடுத்தவர்கள் என்பதை சுட்டிக்காட்டும் பொது மக்கள்

இவ்வாறான மருத்துவ நியதிக்கும் நீதிக்கும் மாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் அதற்கு உடந்தையாகச் செயற்படும் பொறுப்புவாய்ந்த மேலதிகாரிகளுக்கும் எதிராக ஆதாரங்களுடன் சட்ட நடவடிக்கையில் இறங்குவது குறித்துப் பிரதேச பொதுமக்கள் சில அதிகாரிகளுடன் கலந்துரையாடி வருவதாக நம்பகமாகத் தெரியவருகிறது

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net