கூட்டமைப்புக்கு கோடி நன்றி! தமிழ் மக்களுக்குத் தீர்வு உறுதி!

கூட்டமைப்புக்கு கோடி நன்றி! தமிழ் மக்களுக்குத் தீர்வு உறுதி!

எதேச்சதிகாரத்துக்கு எதிரான எமது ஜனநாயகப் போராட்டம் நீதித்துறையின் ஊடாக வென்றுள்ள நிலையில் ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் அரியணை ஏறுகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

இதற்கு ஒத்துழைத்த வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நாம் மறந்திடலாகாது. அவர்களுக்கு கோடான நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று இன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கடந்த நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றியமைக்கு அமைய ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறியவுடன் புதிய அரசமைப்பைக் கொண்டு வந்தே தீரும்.

இனப்பிரச்சினையால் – ஆயுதப் போராட்டத்தால் மோசமாகப் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வை வழங்கியே தீரும். அந்தத் தீர்வு நாட்டின் மூவின மக்களும் ஏற்கும் தீர்வாக அமையும்.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் சூழ்ச்சி நடவடிக்கையால் அதிகாரத்துக்கு வந்தவர்கள் அதியுயர் சபையான நாடாளுமன்றத்தின் தீர்மானங்களை உதறி எறிந்துவிட்டு அராஜகம் புரிந்தார்கள்.

நீதிமன்றத்துக்கும் சவால் விடும் வகையில் அவர்கள் செயற்பட்டார்கள். ஆனால், மேன்முறையீட்டு நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் இவர்களுக்கு உரிய பாடம் புகட்டித் தீர்ப்பை வழங்கியுள்ளது.

அதிகார வெறி பிடித்தவர்களில் முக்கிய புள்ளியாக இருந்தவர் தனக்கு ஏற்பட்ட அவமானத்தையடுத்து பதவியைத் துறந்துள்ளார். இனிமேலாவது இவர்கள் திருந்தி நடக்க வேண்டும்.

அரச அதிகாரத்தை பலவந்தமாக கைப்பற்றியதும் எதிர்த்தரப்பு அரசியல் பழிவாங்கலில் ஈடுபட்டது போன்று நாங்கள் தாக்குதல் நடத்தப்போவதில்லை.

அரசமைப்பை அனைவரும் பாதுகாக்க வேண்டும் என்பதே தீர்ப்புக்கள் மூலம் கூறப்பட்டுள்ளது. நாங்கள் நாட்டின் தற்காலிகப் பொறுப்பாளர்கள்.

ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலின்போது எவரும் மாறலாம். நாம் சிறந்த முன்மாதிரியான அரசாகப் பயணிக்கத் தீர்மானித்துள்ளோம்.

இடம்பெற்ற தவறுகளைப் புரிந்து கொண்டு சரியான பாதையில் பயணிக்கவுள்ளோம். கடந்த மூன்றரை ஆண்டுகளாக அரசினுள் பிளவுகளை ஏற்படுத்த சூழ்ச்சித் திட்டமொன்று இடம்பெற்று வந்தது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26 அரசு உடைந்தது. மீண்டும் இணைந்து பயணிக்க முடியாது என்றனர். இன்று என்ன நடந்துள்ளது. உண்மை வெற்றி கொண்டுள்ளது.

எதிர்த்தரப்பு சதித்திட்டத்தின் மூலம் அரச அதிகாரத்தை கைப்பற்றி அரச பயங்கரவாத ஒடுக்குமுறையில் ஆட்சியைக் கொண்டு செல்லப் பார்த்தனர்.

அனைத்து அபிவிருத்திகளையும் இடைநிறுத்தினர். மக்களைப் படுகுழியில் தள்ளினர். இவை அனைத்தும் இன்று சட்டத்தால் முறியடிக்கப்பட்டுள்ளன.

பிரிக்க முடியாத பிளவுபடாத நாட்டில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவோம். மக்களுக்குப் பொய்யான விடயங்களை கூறி மக்களிடமிருந்து எம்மை பிரிக்க முடியாது. நாம் எவருடனும் உடன்படிக்கையை செய்யவில்லை.

ஆனால், இன, மத, பேதங்கள் கடந்து அனைவருக்கும் ஒரே மட்டத்தில் சலுகைகளை வழங்க வேண்டும். இனங்களுக்கு இடையில் உள்ள கசப்பான அனுபவங்களை கலைத்து சுமூகமான உறவுப்பாலத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக 220 இலட்சம் மக்களுடன் ஒரு சமூக உடன்படிக்கை உள்ளது.

வேறு எந்த உடன்டிபக்கையும் இல்லை. தேசிய சகவாழ்வை ஏற்படுத்துவோம். நாங்கள் செய்யும் வேலைக்கு எதிராக எவர் செயற்பட்டாலும் அவர்கள்தான் தேசத்துரோகிகள் என குறிப்பிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net