புதிய அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள வியாழேந்திரன் விருப்பம்!

புதிய அரசாங்கத்தில் இணைந்துக்கொள்ள வியாழேந்திரன் விருப்பம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பக்கம் தாவி பிரதி அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஷவைப் பிரதமராக நியமித்ததையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனும், கட்சி தாவி, அமைச்சர் பதவிகளைப் பெற்றிருந்தனர்.

எனினும், நீதிமன்றத் தீர்ப்புகளினால், அடுத்த சிலநாட்களிலேயே இவர்கள் அமைச்சர்களாகப் பதவி வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மைத்திரி-மஹிந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதையடுத்து, இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், முன்னதாக கட்சி தாவி அமைச்சுப் பதவிகளைப் பெற்ற, ஐ.தே.க. நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜேதாச ராஜபக்ஷ, ஆனந்த அழுத்கமகே, துனேஸ் கங்கந்த, அசோக பிரியந்த, எஸ்.பி நாவசின்ன ஆகியோரும், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான வியாழேந்திரனும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளனர்.

இவர்கள் புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இணைந்து கொள்வதற்கு, விருப்பம் வெளியிட்டுள்ளனரென செய்திகள் வெளியாகியுள்ளன.

மைத்திரி-மஹிந்த அரசாங்கத்தில் இணைந்துக்கொண்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், ரணில் விக்கிரமசிங்கவையும், வியாழேந்திரன் கடுமையாக விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net