தேசிய அரசாங்கமொன்றை அமைப்போம்!

தேசிய அரசாங்கமொன்றை அமைப்போம்!

அரசியல் ஸ்திரத்தன்மையை பேணும் வகையில் ஏனைய கட்சிகளிலிருந்து இணையும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சுப் பதவி வழங்கி தேசிய அரசாங்கத்தை அமைக்க திட்டமிட்டுள்ளதாக, சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராக பதவியேற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஸாஹிர் மௌலானாவை வரவேற்கும் நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) ஏறாவூரில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,

”மிகவிரைவில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதன் மூலமாக அரசாங்கம் ஸ்திரத்தன்மை பெறும்.

எமது நாட்டில் அரசியல் குழப்பம் தற்போது தணிந்துள்ளது. இந்நிலையில் ஏனைய கட்சிகளிலிருந்து அரசாங்கத்துடன் இணையவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு மிகவிரைவில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதன் மூலமாக தற்போதைய அரசாங்கம் ஸ்திரத்தன்மையை பெறும்.

அண்மையில் எமது நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தின்போது சில அரசியல்வாதிகள் பதவி மற்றும் பணத்திற்காக பொய்யான அரசாங்கத்தில் இணைந்தனர்.

ஆனபோதிலும் அழைப்புக்கள் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் நாம் அவற்றிற்கு தலைசாய்க்காது நீதி, நியாயம் ஜனநாயகத்திற்காக அகிம்சை வழியில் போராடினோம்.

எனக்கு கிடைத்துள்ள பதவி எப்போதும் நிரந்தரமானது அல்ல நான் எப்போதும் என் மக்களுடன் மக்களாக எனது பாதையிலிருந்து நழுவாமல் சேவை செய்பவனாகவே இருப்பேன்” எனத் தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net