235 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்கா

235 ஓட்டங்களுக்குள் சுருண்டது தென்னாபிரிக்கா

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களுக்குள் சுருண்டுள்ளது.

தென்னாபிரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியானது தென்னாபிரிக்க அணியுடன் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் இன்று டர்பனில் ஆரம்பமாகிய மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன களத்தடுப்பை தெரிவுசெய்தார்.

அதற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரக்க அணி 59.4 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களை முதல் இன்னிங்ஸிக்காக பெற்றது.

மக்ரம் 11 ஓட்டத்தையும், எல்கர் டக்கவுட் முறையிலும், அம்லா 3 ஓட்டத்தையும், பவுமா 47 ஓட்டத்தையும், டூப்பிளஸிஸ் 35 ஓட்டத்தையும், டீகொக் 80 ஓட்டத்தையும், பிலேண்டர் 4 ஓட்டத்தையு, மஹாராஜ் 29 ஓட்டத்தையும், ரபடா 3 ஓட்டத்தையும், ஸ்டெய்ன் 15 ஓட்டத்தையும் பெற்று ஆட்டமிழந்ததுடன், ஒலிவர் எதுவித ஓட்டமின்றி ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் விஷ்ப பெர்னாண்டோ 4 விக்கெட்டுக்களையும், கசூன் ராஜித 3 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மல் மற்றும் லஷித் எம்புலுதெனிய ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி இரண்டு ஓவர்களின் முடிவில் எதுவித விக்கெட் இழப்புகளுமின்றி 6 ஓட்டத்துடன் துடுப்பெடுத்தாடி வருகிறது.

ஆடுகளத்தில் திமுத் கருணாரத்ன 6 ஓட்டங்களுடனும், லஹிரு திரிமன்ன எதுவித ஓட்டங்களின்றியும் துடுப்பெடுத்தாடி வருகின்றனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net