சாமானியப் பெருங்கலைஞன் கருணா -இட்டு நிரப்பமுடியாத பெருவெற்றிடம்.குணரெட்ணம்

சாமானியப் பெருங்கலைஞன் கருணா – இட்டு நிரப்பமுடியாத பெருவெற்றிடம்

இதுவும் நடந்துவிட்டதா? என இன்றும் நம்பமுடியாமல் ஒரு வாரம் ஓடிமுடிந்திருக்கிறது. ஒவ்வொரு நாளும், அவன் நினைவுகளின் மலர்வுகளை படித்துப் படித்து, கருணா என்ற அந்த சாமானிய பெருங்கலைஞனின், பல பக்கங்களை தரித்து வருகின்றேன். ஏதோ ஒரு வகையில், பலரில் தாக்கம் செலுத்திய, அவனின் ஆளுமையே, ஒவ்வொரு பதிவின் வெளிப்பாட்டின் ஊடாகவும் எங்கும் வெளிப்பட்டு நிற்கிறது. யார் இந்தக் கருணா? என்பதை முழுமையாக புரியவேண்டும் என்றால், அந்தப்பக்கங்கள் அனைத்தும் ஒன்றினைக்கப்பட்டால் தான், கருணா என்ற பெருவடிவம் துல்லியமாக புலனாகும்… ஒரே பாடசாலை, தவழ்ந்து, பிரண்டது, ஒரே இடம் என்றாலும், இளைய கருணாவை தாயகத்தில் எனக்குத் தெரியாது… கனடாவில் தாயகம் சார்ந்த விடயங்களுக்காக, அவன் துறைசார்ந்து, அவ்அவ்போது சந்தித்திருக்கிறேன்.. பேசியிருக்கிறேன்… ஆனாலும் அவனுக்குள் இருந்த தேடுதல்களையும், அதில் அவனுக்கு இருந்த ஆத்மார்த்த ஈடுபாட்டையும், அதில் இருந்த மண் மணத்தையும், அனைத்தையும் இணைத்த ஆழமான பார்வைகளும், இவன் இன்றைய நிலையில் தமிழினத்திற்கு, அதிலும் குறிப்பாக புலம்பெயர் தமிழினத்திற்கு, எவ்வளவு முக்கியமான ஒரு பொக்கிசம் என்பதையும், எனக்கு அவவப்போது உணர்த்தியே வந்தன.

அதை அவன் வார்த்தைகளிலேயே எடுத்து வருகின்றேன். இது கருணா பகிர்ந்த கருத்து… “எமது சமூகத்தைப் பொறுத்தவரையில், ஏனைய கலைகளுக்கு வழங்கப்படுகின்ற முக்கியத்துவம் ஓவியத்திற்கு வழங்கப்படுவதில்லை, என்ற குற்றச்சாட்டு என்னிடம் இருக்கிறது. அதாவது ஓவியம் என்ற கலையைப் புறம்தள்ளி, நாம் ஒரு சமூகமாக எழுமுடியாது… அந்த ஒரு கலையினுடைய, அதாவது எங்களுடைய கதையை, இன்றைக்கு சொல்லி வைப்பதற்கும், எதிர்காலத் தலைமுறைக்கு நாம் எவ்வாறு வாழ்ந்தோம், எவ்வாறு எங்களுடைய கலாச்சாரம், பண்பாடு இருந்தது, போன்றவற்றை எதிர்கால தலைமுறைக்கு சொல்வதற்கு, ஓவியம் ஒரு முக்கியமான ஊடகம்… ஏனென்றால், ஓவியத்திற்கு மொழி தேவையில்லை…” இப்போது சொல்லுங்கள்… இந்த கருத்தியலை நடைமுறையில் இனி யாரால் செய்துவிட முடியும்..

இதற்கு தாயக மணம் முழுமையாக கமழ வேண்டும்… கலையில் உச்சம் வேண்டும்…. கூடவே ஓவியத்தின் நவீனப் பக்கம் மட்டுமல்ல, அதை இன்றைய கணணி உலகத்துடனும், நவீன முறைமைகளையும் இணைத்து, அது எக்காலத்திலும் வாழும் நிலையை எட்ட வேண்டும்… இவை அனைத்தும் இணையும் புள்ளியே கருணா.. அவ்வாறான மேலும் ஒரு புள்ளியை உருவாக்குவது சாத்தியமேயில்லை.. இதிலும் இதில் ஒரு புள்ளியில் உச்சம் பெற்றவர்கள், பல புள்ளிகளை பார்க்கவேயில்லை… ஆனால் ஒன்றோடு இன்னொன்றாக இணைந்த, இந்தப் புள்ளிகள் அனைத்தையும் தானாக சென்று தரிசித்து, உச்சம் பெற விழைந்ததே கருணாவின் உச்சம்…. அதனாலேயே Artist, Designer, Writer, Narrator, Art Director, Animator, Special Effect Director and Photographer என ஒன்றுடன் ஒன்று இணைந்த பல புள்ளிகளில் பல்பரிமாணக் கலைஞனாக மிளிர்ந்தான்… இதில் ஏதோ ஒரு புள்ளியில் அவனுடன் பரிச்சியமான பலருக்கும் கூட, அவனின் அடுத்த பரிமாணங்கள் குறித்த பக்கங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லைத் தான்…

இந்த இளைய வயதில், இந்த நிரந்தரப் பிரிவை அவனும் எதிர்பார்த்திருக்க மாட்டான்… நாமும் எதிர்பார்க்கவில்லைத் தான்… ஆனாலும் இன்றைய உலகில், என்றும், எதுவும், சாத்தியம் என்றாகிவிட்ட நிலையில், எதிர்காலத்தில் பலவற்றில் சமூகமாக அதீத கவனம் செலுத்த வேண்டிய, பல பக்கங்கள் இருக்கின்றன என்பதை கருணாவின் திடீர் மறைவு சுட்டி நிற்கிறது. ஒரு கலைஞனுக்கான செருக்கு இருந்தாலும், பந்தா இல்லாத ஒரு சாமானியக் கலைஞனாகவே, எவ்வித அங்கீகாரத்தையும் யாரிடம் இருந்தும் எதிர்பார்க்காமல், தன் ஆழ்மனத்திற்கு மட்டும் மகிழ்ச்சியை வழங்கிப் பயணித்தவன் கருணா என்ற இந்த மகாகலைஞன்… பகட்டுக்கு மட்டும் வெளிச்சம் போடும் சமூகமாக இருந்துவிடாமல், என் சமூகம் இன்று நிரந்தரமாக விடைபெற இறுதி யாத்திரையை ஆரம்பிக்கும், இந்த கருணா என்ற மாபெரும் கலைஞனுக்கு சமூக அங்ங்கீகாரம் வழங்கி, ஒன்றுபட்ட இனமாக வழியனுப்பி வைப்போம்…

இறுதி வணக்க நிகழ்வு
01/03/2019 வெள்ளிக்கிழமை
பிற்பகல் 4:00 மணி தொடக்கம் 9:00 மணி வரையிலும்
02/03/2019 சனிக்கிழமை
காலை 8:00 மணி தொடக்கம் 9:30 மணி வரையிலும்
Chapel Ridge Funeral Home & Cremation Centre
(8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1) இல் நடைபெற்று,
10:00 மணி தொடக்கம்
14 Highgate Drive, Markham இல் அமைந்துள்ள St Thomas the Apostle Roman Catholic Church இல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதன் பின்னர் திருவுடல் நல்லடக்கத்துக்காக 7770 Steels Ave East, Markham இலுள்ள Christ the King Catholic Cemetery க்கு எடுத்துச் செல்லப்படும்.

Copyright © 3581 Mukadu · All rights reserved · designed by Speed IT net