தட்டிக்கழிக்க முடியாத விசாரணை!

தட்டிக்கழிக்க முடியாத விசாரணை!

முள்ளிவாய்க்காலில் போர் முடிவுக்கு வந்து பத்து வருடங்கள் ஆகின்ற நிலையில் சர்வதேசத்தின் முன்பாக தலைகுனிந்து அரசாங்கம் இருக்கின்றது. அதற்குப் பிரதான காரணம் போர்க்கால மீறல்கள், குற்றங்களுக்கு நீதியை வழங்கத் தவறியமைதான்.

அண்மையில் ஜெனீவாவில் நடந்து முடிந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான மற்றொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2015ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தின் கடப்பாடுகளை முழுமையாக நடைமுறைப்படுத்த இணங்குவதாக மீண்டும் இலங்கை அரசாங்கம் புதிய தீர்மானத்தில் கூறியிருக்கின்றது.

ஆனாலும் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முக்கிய அம்சமான கலப்பு விசாரணைப் பொறிமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவ்வாறான பொறிமுறையை அமைப்பதற்கு நாட்டின் அரசியல் சட்டம் இடமளிக்காது என்றும் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கூறியிருந்தார்.

ஒரு பக்கத்தில் 30/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த இணங்கிய அரசாங்கம் இன்னொரு பக்கத்தில் அதன் ஒரு முக்கிய பகுதியை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் கூறியிருக்கின்றது. வெளிவிவகார அமைச்சரின் இந்த கலப்பு விசாரணை நிராகரிப்பு நாடாளுமன்ற அமர்வுகளிலும் பலமாக எதிராலித்து வருகின்றது.

கலப்பு விசாரணையை அமைக்கத் தவறினால் சர்வதேச நீதிமன்றத்தை நாட நேரிடும் என்று கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் நாடாளுமன்றத்தில் எச்சரிக்கை செய்திருந்தார். அதற்குப் பின்னர் திலக் மாரப்பன, மகிந்த சமரசிங்க போன்றவர்கள் வெளிநாட்டு நீதிபதிகளை உள்நாட்டு விசாரணைகளில் உள்ளடக்க முடியாது என்றும் அதற்கான சட்ட ஏற்பாடுகள் கிடையாது என்றும் நாடாளுமன்றத்தில் பேசினர்.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் கலப்பு விசாரணைகள் வெளிநாட்டு நீதிபதிகள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போன்ற விவகாரங்கள் குறித்து அதிகளவில் பேசப்பட்டது. வழக்கம்போலவே மகிந்த ஆதரவு கூட்டு எதிரணியினர் ஜெனீவாவில் அரசாங்கம் படையினரை காட்டிக்கொடுத்து விட்டது என்றும் கலப்பு விசாரணைக்கு இணங்கியுள்ளது என்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

ஜெனீவா தீர்மானத்திற்கு மீண்டும் இலங்கை அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியதால் அதிகளவு அதிருப்தி அடைந்திருப்பது மகிந்த தரப்புதான்.

ஏனென்றால் அடுத்த ஆண்டு ஆட்சியைக் கைப்பற்றுணவோம் என்ற கனவில் இருக்கும் அவர்கள் அவ்வாறு ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தற்போதைய 40/1 தீர்மானத்திற்கு அமைய பதில் கூறும் கடப்பாடும் ஒப்புக்கொண்டதை நிறைவேற்றும் கடப்பாடும் தமது அரசுக்கு ஏற்படும் என்று அவர்கள் கருதுகின்றார்கள்.

அதனால்தான் ஜெனீவா தீர்மானத்துக்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையில் இருந்து விலக வேண்டும் என்று முன்னர் குரல் எழுப்பினார்கள். இப்போது ஜெனீவா தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கியதையும் எதிர்க்கின்றார்கள்.

அதேவேளை, கடந்தவாரம் வெளிவிவகார அமைச்சின் நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளில் இருந்து ஒரு விடயம் தெளிவாகியிருக்கின்றது.

கலப்பு விசாரணைப் பொறிமுறையை அமைப்பதற்கும் வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளில் அனுமதிப்பதற்கும் மாத்திரமே முழுமையான எதிர்ப்பு காணப்படுகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த மற்றெல்லா கட்சிகளுமே இந்த விடயத்தில் ஒன்றுபட்டு நிற்கின்றன.

கலப்பு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என்று தப்பிக்க முனைகின்றது ஐ.தே.க தரப்பு. வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன ஜெனீவாவில் கூறியதும் நாடாளுமன்றத்தில் கூறியதும் ஒரே விடயம்தான்.

வெளிநாட்டு நீதிபதிகளை உள்நாட்டு விசாரணைகளில் அனுமதிப்பதற்கு நாட்டின் அரசியலமைப்பு இடமளிக்கவில்லை என்று அவர் கூறியிருக்கின்றார். அதுமாத்திரமின்றி வெளிநாட்டு நீதிபதிகளை விசாரணைகளின் போது அனுமதிக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யும் சாத்தியமும் இல்லை என்று அவர் கையை விரித்திருக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் தேவை. சர்வஜன வாக்கெடுப்பு நடத்த மக்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அதற்கும் அப்பால் உச்சநீதிமன்றமும் அதனை அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருக்கின்றார்.

இதன்மூலம் அவர் கலப்பு விசாரணைப் பொறிமுறையை சட்டரீதியாக அமைப்பதற்கான சாத்தியமே இல்லை என்பதுதான் அவரது இறுதியான நிலைப்பாடு. அதேவேளை மகிந்த ராஜபக்ச தரப்பும் சரி, ஏனைய எதிர்க்கட்சிகளும் சரி கலப்பு விசாரணையை உருவாக்குவதை அல்லது வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதை நாட்டின் இறைமையுடன் சுதந்திரத்துடன் தொடர்புபடுத்த முனைகின்றன.

வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதித்தால் நாட்டில் இறைமை பறிபோய்விடும் என்று கூறுவதன் மூலம் சிங்கள மக்கள் ஆதரவை இலகுவாக பெற்றுக்கொள்ளலாம் என்று அவர்கள் எதிர்ப்பார்க்கின்றார்கள்.

ஆனால், 30/1 தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய அரசின் பிரதான பங்காளி என்ற வகையில் ஐ.தே.கவினால் அவ்வாறு கூற முடியாது. அதனால் தான் அரசியல் சட்டத்தைக் காரணம் காட்டி நழுவ முனைந்திருக்கின்றார் திலக் மாரப்பன.

அதேவேளை சர்வதேச விசாரணைக தொடர்பான நெருக்கடிக்கு காரணம் உள்நாட்டு விசாரணை நடத்தப்பட்டு உரிய நீதி வழங்கப்படாதது தான் என்று பொதுவாக ஒப்புக்கொள்ளப்படும் நிலை உருவாகியிருக்கின்றது.

ஜே.வி.பியின் பிமல் ரத்நாயக்க மனித உரிமை மீறல் குற்றசாட்டுக்கள் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்தி நீதியை வழங்கியிருந்தால் இதுபோன்ற கோரிக்கைகள் எழுந்திருக்காது என்று சுட்டிக்காட்டியிருந்தார்.

அதேவேளை, முன்னதாக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் காலத்திலும் கூட்டு அரசாங்கத்தின் காலத்திலும் அரசின் பிரதிநிதியாக ஜெனீவாவுக்கு சென்ற மகிந்த சமரசிங்கவும் கூட இதே கருத்தை வெளிப்படுத்தியிருக்கின்றார்.

தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பில் இருக்கும் மகிந்த சமரசிங்க உடனடியாக உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைத்து போர்க்கால மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க வேண்டும் என்றும் அதன் மூலமே சர்வதேச விசாரணைக் கோரிக்கையில் இருந்து தப்பிக்கலாம் என்றும் ஆலோசனை கூறியிருக்கின்றார்.

அவர் இந்த ஆலோசனையை மகிந்த ராஜபக்ச காலத்தில் கூறியிருக்கவில்லை. கூட்டு அரசாங்கத்தின் காலத்திலும் கூறவில்லை. ஐ.தே.க ஆட்சிக்காலத்தில்தான் அவர் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையைப் பற்றிக் கூறியிருக்கின்றார்.

மங்கள சமரவீர வெளிவிவகார அமைச்சராக இருந்த காலத்தில் உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை அமைப்பதற்கான சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்தன. நல்லிணக்கப் பொறிமுறைக்கான கலந்தாய்வு செயலணியினால் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

அதனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையில் எடுத்தும் பார்க்கவில்லை. அப்போது மகிந்த சமரசிங்க போன்றவர்கள் அந்தப் பரிந்துரைகளை கவனத்திற் கொள்ளுமாறு ஜனாதிபதிக்கு ஆலோசனை கூறவும் இல்லை.

நம்பகமான நடுநிலையான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை மீது பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கையில்லை. ஆனால் நம்பகமான நடுநிலையான விசாரணைப் பொறிமுறை ஒன்றின் ஊடாக மீறல்களுக்கான நீதி வழங்கப்பட்டால் அதனை பாதிக்கப்பட்டவர்கள் நிராகரிப்பார்கள் என்றில்லை.

மகிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையை தான் அமைக்கக்கோரியது. அதனை அவர்கள் உருவாக்கத் தவறியதாவல் தான் கலப்பு விசாரணை முன்மொழியப்பட்டது.

அது நெருக்கடியை ஏற்படுத்தத் தொடங்கியதும்தான் மகிந்த சமரசிங்க போன்ற தரப்பினருக்கும் ஜே.வி.பியினருக்கும் கூட நம்பகமான உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை அமைத்திருந்தால் தப்பியிருக்கலாம் என்ற காலம் கடந்த ஞானம் பிறந்திருக்கின்றது.

கலப்பு விசாரணையை மறுக்கின்ற அரசாங்கம் இப்போது கூட ஒரு நம்பகமான உள்நாட்டு விசாரணைக்கு உத்தரவிடும் திராணியுடன் இருக்கின்றதா என்பது கேள்விதான்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, ஜே.வி.பி, ஐ.தே.க போன்ற எல்லா தரப்புக்களும் உள்நாட்டு விசாரணை ஒன்றுக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கின்றன.

ஒரு காலத்தில் போர்க்குற்ற விசாரணை என்றாலே முடியவே முடியாது என்று கைவிரித்தவர்கள் போர் முடிந்து பத்து ஆண்டுகளுக்கு பின்னர் உள்நாட்டு விசாரணையை நம்பகமாக நடத்த வேண்டும் என்று கூறுகின்ற நிலைக்கு வந்திருக்கின்றார்கள்.

இது ஒன்றும் சாதாரணமாக வந்ததல்ல. சர்வதேச ரீதியான அழுத்தங்களால்தான் இஅந்த நிலைக்கு அவர்கள் வந்திருக்கினார்கள். சரத் பொன்சேகா இதனைச் சுட்டிக்காட்டியிருக்கின்றார். அவர் கூட போர்க்குற்ற விசாரணைக்கு தயார் என்கின்றார்.

ஆனாலும் உள்நாட்டு விசாரணையை ஆரம்பிக்கும் திராணியும் அதனை நம்பகமாக நடுநிலையாக முன்னெடுக்கும் ஆற்றலும் தற்போதைய அரசாங்கத்திற்கு இருக்கின்றதா?

-எழுத்தாளர் Subathra-

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net