இன்றைய இலங்கையில் சமயத்தலைவர்களின் வகிபாகம்!

இன்றைய இலங்கையில் சமயத்தலைவர்களின் வகிபாகம்!

சமயத்தலைவர்களின் வகிபாகம் இன்றைய இலங்கையில் அதிமுக்கியத்துவமாக நோக்கப்படுகின்றது.

குறிப்பாக இலங்கையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பொறுப்பு வாய்ந்த உரை இன்று இலங்கையை பேராபத்திலிருந்து காப்பாற்றியுள்ளது. அல்லது பெரும் இனக்கலவரத்திலிருந்து மீட்டுள்ளது எனலாம்.

இதனை சகல சமயத்தவரும் வாயாரப் புகழாத சந்தர்ப்பமில்லை. நாடாளுமன்றத்திலும் பேசப்பட்டுள்ளது. அவருக்கு நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் என பிரதி அமைச்சர்களான அமிர் அலி வி.இராதாகிருஸ்ணன் போன்றோர் முன்மொழிந்துள்ளனர்.

அண்மையில் நீர்கொழும்பு வன்முறைச் சம்பவத்திலும் அவரது கருத்திற்கு பின்னர் வன்முறை ஓய்ந்தது. அத்துணை மதிப்பு அவருக்கு அச்சமூகம் வழங்கியுள்ளது. இதனையே ஏனைய சமூகத்தவரும் எவரைப்புகழக் காரணமாகும். ஆக இன்று சகல பொதுக்கூட்டங்களிலும் அது பேசுபொருளாக விளங்குகின்றது என்றால் அவரது வகிபாகம் ஏனைய சமயத் தலைவர்களுக்கும் முன்னுதாரணமாகக் காண்பிக்கக்கூடியது.

சமயத்தலைவர்கள் பொறுமையோடு சாந்தமாக தாம்சார்ந்த மக்களுக்கு உரையாற்ற வேண்டும். நல்ல தர்மக் கருத்துக்களைப் போதிக்கவேண்டும்.

பாடசாலை கலைத்திட்டத்தில் விழுமியக்கல்வியின் முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கிறது. விழுமியமில்லாத கல்வியால் எவ்விதபிரயோசனமுமில்லை என்று கூறப்படுகிறது.

பெயருக்கு டாக்டர் எந்திரி பட்டதாரி என்று கூறலாமே தவிர நல்ல மனிதர்களை உருவாக்க வேண்டுமாகவிருந்தால் விழுமியக்கல்வி முக்கியம். ஒழுக்கம் முக்கியம்.

சிலர் எப்போதும் பிறரைப் புண்படுத்துவதிலேயே குறிக்கோளாக இருப்பர்.

சிறுதவறைக்கூடப் இமாலயத்தவறு போல் காண்பிப்பார்கள். அத்தகையவர்கள் ஈனப்பிறவிகள். அவர்களது தரப்பில் உள்ள பிழைகளை அவர்கள் ஒருபோதும் திரும்பிப்பார்ப்பதில்லை.

எனவே ஒரு சமூகத்தில் ஒரு நாட்டில் அமைதியை சமாதானத்தை ஏற்படுத்துவதில் பெரும் ஆபத்தை இனக்கலவரத்தைத் தவிர்ப்பதில் அரசியல்வாதியை விட சமயத்தலைவர்களின் வகிபாகம் அதிமுக்கியமானது.

அம்பாறை மாவட்ட சர்வசமய சம்மேளனத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்து உரையாற்றிய அதன் ஸ்தாபகரும் தென்கிழக்குப்பல்கலைக்கழக முன்னாள் வேந்தருமான தேசபந்து ஜெசிமா இஸ்மாயில் கூறியதை இங்கு நினைவுபடுத்தலாமென நினைக்கிறேன்.

அதாவது சமுதாயத்தில் நாட்டில் அமைதி சமாதானத்தை ஏற்படுத்தவேண்டுமானால் அரசியல்வாதியைவிட சமயத்தலைவர்களுக்கு பிரதான பங்குண்டு என்றார்.

அவர் இதனைத் தீர்க்கதரிசனமாகக் கூறியது 2007இல். டாக்டர் ஜெமீலைத் தலைவராகக் கொண்ட அவ்வமைப்பு கடந்த 12வருடகாலமாகச் பயணித்த

சமாதானப் பயணம் இன்று ஸ்தம்பித்து விட்டதா? எனப் பலரும் கேட்கின்றனர். அதனை ஊக்கப்படுத்த மேலாளர்களும் தவறிவிட்டனர்.

இதேவேளை அண்மையில் கல்முனையில் நடைபெற்ற சமயத் தலைவர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரநிதிகள் மத்தியில் இடம்பெற்ற கருத்துரைப்புக்களை இங்கு தரலாமென விளைகின்றேன்.

இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப் பிராந்திய பணிமனையின் இனங்களிடையே நல்லுறவை சகவாழ்வை ஏற்படுத்தும் மாநாடு இலங்கை மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனைப்பிராந்திய இணைப்பாளர் லத்தீப் இஸ்ஸதீன் தலைமையில் நடைபெற்றது. இதில் சர்வசமய மதகுருமார்கள் சிவில்சமூகம் ஊடகக் குழுமத்தினர் மகளிர்அமைப்புகள் சர்வசமய அமைப்பினர் கலந்து கொண்டனர்.

முன்னதாக உயிர்நீத்தவர்களுக்கான மௌன அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.

ஓய்வுநிலை உதவிக்கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ். இசட்.எம்.நதீர் மௌலவி சோகத்தோடு பேசுகையில்,

நாட்டில் நடந்தது ஒட்டுமொத்தமாக சர்வதேச பயங்கரவாதமாகும். இதனை முஸ்லிம்களாகிய நாங்கள் 100வீதம் எதிர்க்கிறோம். எனவே தயவுசெய்து எங்களை விரோதியாகவோ பயங்கரவாதியாகவோ பார்க்காதீர்கள்.

நான் இங்கு இஸ்லாமிய ஆடை தொப்பி அணிந்துகொண்டு பேசுவதற்கு கூச்சமாக இருக்கிறது. சாந்தி சமாதானத்தை அடிநாதமாகக் கொண்ட இஸ்லாத்தின் பெயரோடு ஒருசில நபர்கள் செய்த பயங்கரகொடூரத்தால் முழு இஸ்லாமியர்களும் வெட்கித்தலைகுனிய வேண்டிய துரதிஸ்ட நிலைவந்துள்ளது.

உண்மையில் இந்தகுண்டுத்தாக்குதல் இலங்கைக்கு எதிரானதோ அல்லது ஒரு இனத்திற்கு அல்லது ஒரு மதத்திற்கு எதிரானதோ அல்ல. மாறாக இதுவொரு சர்வதேச பயங்கரவாதம் ஆகும்.

முஸ்லிம்கள் என்று சொல்லக்கூடியவர்களால் இது இடம்பெற்றபடியால் நாம் மன்னிப்புக் கோருகிறோம். உயிரிழந்தவர்களுக்காகவும் காயப்பட்டவர்களுக்காகவும் பிரார்த்திக்கிறோம். கிறிஸ்தவ சமூகத்திற்கு நன்றிகூறுகின்றோம்.

புனித அல்குர்ஆனை அருளிய நபிகள்நாயகத்தின் வாழ்விலும் யுத்தத்தை சந்திக்கும் நிலைஏற்பட்டது. அப்போதுகூட மாற்று மதத்தவரின் வணக்கஸ்தலங்களையோ மதகுருமார்களையோ அவர்களது அடையாளங்களையோ பச்சைமரங்களையோ சிதைக்கக்கூடாது அழிக்கக்கூடாது என்று கூறியிருக்கிறார்.

பலஸ்தீனத்தை கிறிஸ்தவமத குருமார் இஸ்லாமியரிடம் ஒப்படைக்ககோரிய போது மதினாவிலிருந்து வந்த உமர் வெற்றித்தொழுகைக்காக அங்கிருந்த தேவாலயத்தை தேர்ந்தெடுக்கவில்லை.

மாறான பிறிதொரு இடத்தில் தொழுகையை நடத்தினார்கள். அந்தளவிற்கு ஏனைய மதத்திற்கு மதிப்பளித்தது இஸ்லாம் மார்க்கம்.

ஆனால் இன்று ஏனைய இனங்களின் முன்னிலையில் முகம்பார்த்துக் கதைக்க ஒச்சப்படுகின்ற சங்கடம் ஏற்பட்டுள்ளதையெண்ணி வேதனையடைகின்றேன் என்றார்.

கல்முனை கிறிஸ்தவ போதகர் வண. ஏ. கிருபைராஜா பேசுகையில்,

சமயத்தலைவர்கள் விழிப்புடனிருந்தால் எந்த வன்முறையையும் தவிர்க்கலாம் என்பதற்கு பேராயரின் உரை சான்றாக அமைந்ததை இன்று உலகமே சாட்சியாகச்சொல்கிறது.

நடந்துமுடிந்த பயங்கரவாதத்தை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். உன்னைப்போல் பிறரை நேசி என்று இயேசு கூறியுள்ளார்.

இனிமேலாவது எந்த வன்முறையும் இடம்பெறாவண்ணம் ஒற்றுமைகாக்க வேண்டும் என்றார்.

கல்முனை சுபத்ராராமன விகாரதிபதி வண.ரண்முத்துகல சங்கரத்ன தேரர் பேசுகையில்,

பகைமையை பகைமையால் தணிக்கமுடியாது என தம்மபதம் கூறுகிறது. அன்புதான்சமயம். மனிதன் வாழவேண்டியதை சமயம் சொல்கிறது. பேராயரின் உரை எமது பாதுகாப்புபடையினரின் தியாகம் எல்லாம் பாராட்டுதற்குரியது என்றார்.

கல்முனை ஸ்ரீமுருகன் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ. சச்சிதானந்தக்குருக்கள் பேசுகையில்,

இறைவன்பால் உண்மையான அன்பைச் செலுத்துபவன் வன்முறையில் ஈடுபடமாட்டான். நடந்த சம்பவத்தால் சகல இனமக்களுக்கும் பாரிய கவலை வேதனை. மக்கள் மனங்களிலுள்ள தப்பிராயங்கள் மளஉலைச்சல்கள் களையப்பட வேண்டும். எமது சூழலிலுள்ள இளைஞர் யுவதிகளை ஆற்றுப்படுத்த வேண்டும். சுபீட்சமான நாட்டை உருவாக்க அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றார்.

கல்மனை பற்றிமா தேசியகல்லூரி முதல்வர் வண.சகோ.சந்தியாகோ பேசுகையில்,

அன்பே கடவுள். அன்புள்ளவனிடம் பொறுமை சகிப்புத்தன்மை இருக்கும். எமது ஒவ்வொரு செயற்பாட்டிலும் எமது மாட்சிமை வெளிப்படும். எனவே இயேசு பிரான் கிறிஸ்தவர்களின் மாட்சிமையை இச்சம்பவத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கலாம்.

அந்த சம்பவத்தில் மரித்தவர்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தவிதைகளாவது எம்மிடையே இனமத பேதங்களை களையட்டும் என்றார்.

கல்முனை மெதடிஸ் திருச்சபைத் தலைவர் வண. பிதா. எஸ்.டி.வினோத் பேசுகையில்,

இயேசு கற்பித்த சகிப்புத்தன்மை உள்ளவன் வாழ்வில் வெற்றி காண்கிறான். என்னதுன்பம் வந்தாலும் பொறுமை சகிப்பைக் கடைப்பிடிக்கின்றபோது சமாதானமாக வாழலாம். வெற்றிபெறலாம். மததலங்களுக்கு மக்கள் வரப்பயப்படுகின்ற சூழலை இல்லாதொழிக்க நாம் ஒன்றுபட வேண்டும் என்றார்.

கல்முனை பொலிஸ்நிலய பிரதி பொறுப்பதிகாரி சம்சுதீன் பேசுகையில்,

சாய்ந்தமருதுச்சம்பவத்தில் மக்கள் பாதுகாப்புகருதியே அவர்களை ஓரிடத்தில் சேர்த்தோம். அங்கு 17பேர் கொல்லப்பட்டுள்ளனர். இன்று ஊரடங்குச்சட்டத்தின் போது 24 பேர் விசாரணை செய்யப்பட்டிருக்கிறார்கள். இன்று நற்பிட்டிமுனை சுற்றிவளைக்கபட்டுள்ளது. வாள்கள் துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளன. மக்கள் ஒத்துழைத்தால் தீவிரவாதிகளை விரட்டமுடியும் என்றார்.

கல்முனை பிரதேசசெயலாளர் எம்.நசீர் பேசுகையில்,

கொழும்பு பேராயர் மற்றும் கிறிஸ்தவசமுகத்தினர் இலங்கைவாழ் ஏனைய இன மக்களுக்கு முன்மாதிரியாக நடந்துள்ளார்கள். பொறுமை சகிப்பு என்றால் என்ன என்பதைக் கற்றுத் தந்துள்ளார்கள்.

சம்பவத்திற்கு யார் பொறுப்பாகவிருந்தாலும் அவர்கள் கைதுசெய்யப்பட வேண்டும். பயங்கரவாதம் அழிக்கப்பட வேண்டும். மதத்தலைவர்கள் பேராயர் போன்று செயற்பட்டால் எந்தப் பிரச்சினையுமில்லை என்றார்.

இறுதியில் உயிர்நீத்தவர்களுக்கான கல்முனையில் சகல இனபிரமுகர்களும் இணைந்து பாரிய அஞ்சலி பிரார்த்தனையை செய்ய வேண்டும் என இணைப்பாளர் இஸ்ஸ்தீன்லத்தீப் கேட்டுக்கொண்டார்.

சமயவேறுபாடுகள் என்றால் என்ன?

சமய வேறுபாடுகள் என்பது ஒரு புதிய தோற்றமல்ல. இது மனித இனத்தின் நீண்ட வரலாறு போன்றே தொன்மையானது. ஒரே பிராந்தியத்துக்குள்ளும் ஒரே கலாச்சாரத்துக்குள்ளும் பல்வேறு சமய நம்பிக்கைகளும், சமயங்களும், ஆதரவாளர் குழுக்களும் தற்போது காணப்படுவது போன்றே முற்காலத்திலும் காணப்பட்டன.

எல்லா சமய போதகர்களும் தமது சக மனித இனத்தினது நன்மையைப் பற்றியே அக்கறையாகவுள்ளனர். எந்தவொரு சமயமும் மனிதர்களுக்கு எதிராக செயற்படவோ முரண்பாடுகளை ஊக்குவிக்கவோ போட்டா போட்டிகளை ஏற்படுத்தவோ போதிப்பதில்லை.

சமயங்களின் ஸ்தாபகர்களின் குறிக்கோள்களை சரிவரப் புரிந்துகொள்ளாத அளவுக்கதிக ஆர்வம் கொண்ட அல்லது அர்ப்பணிப்புக் கொண்டவர்களே சமய வேறுபாடுகளை ஒரு பிரச்சினையாக மாற்றுவதற்கு காரணமாகவுள்ளனர்.

இவர்களின் செயற்பாடுகளே முரண்பாடுகளை உற்பத்தியாக்குவதற்கும் மனக்கிளர்ச்சி மற்றும் தீவிரவாத உணர்ச்சி போன்றவற்றிற்குத் தூபமிடவும் உதவுகின்றது.

சிலவேளை சமய வேறுபாடுகள் காரணமாக ஏற்பட்ட முறுகல்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பல மில்லியன் மக்களின் உயிர்களைக் காவுகொண்டதோடு எண்ணிலடங்கா பெறுமதியான உடமைகளையும் அழித்துள்ளது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

சமய வேறுபாடுகள் ஒரே இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரிவுகளுக்குள்ளும் யுத்தங்களைத் தோற்றவித்துள்ளன. சமய வேறுபாடுகள் தமக்குப் பாதகமானது எனக்கருதியவர்களால் இப்பூமியில் இருந்து பல கலாச்சாரங்கள் தயவுதாட்சண்யமின்றி அழித்தொழிக்கப்பட்டுள்ளன.

சமய வேறுபாடுகள் அபாயகரமாக மாறுவது ஒருவர் அதனை தனக்கு சாதகமானதும் இயற்கையானதுமான விடயமாகப் பார்க்காது தனக்குப் பாதகமானது அல்லது எதிரியாகப் பார்ப்பதினாலாகும்.

சமய வேறுபாடுகளை சிறந்த முறையில் நோக்கினால் அது ஒரு அழகானதும் மனித குலத்துக்கு நலவானதும் அனுகூலமானதும் உதவக்கூடியதாகவும் காணலாம். இதுவே எல்லா சமயங்களினதும் குறிக்கோளும் ஆகும்.

சமயங்கள் சமாதானத்திற்கும் நல்லிணக்கத்துக்குமான ஆயுதங்களாகப் பாவிக்கப்பட வேண்டுமே தவிர அவை சமாதானம். புரிந்தணர்வு நம்பிக்கை போன்றவற்றை அழிக்கும் ஆயுதங்களாகப் பாவிக்கப்படக் கூடாது.

சமயம் ஒரு மனிதனின் தனிப்பட்ட விடயம். ஓவ்வொருவருக்கும் அவர் விரும்பும் சமயத்தைக் கடைப்பிடிக்கும் உரிமையுண்டு. ஒரு சமயத்திற்கு சேவையாற்றுவது என்பது அச்சமயத்தை நம்பிக்கையுடன் கடைப்பிடிப்பதாகும்.

எல்லோருக்கும் ஒரு சமயமே இருக்க வேண்டும் என்று எந்த சமயப் போதகரும் கூறியதில்லை.

சமயங்கள் என்பது அதனைப் பின்பற்றுவோரின் மகிழ்ச்சி மற்றும் நன்மைக்காக அச்சமயப் போதகர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் செய்யப்பட்ட முயற்சிகளின் பலனேயாகும்.

சாந்தமான மன நிலையானது எல்லாவற்றையும் குறிப்பிட்ட இலக்குடன் நோக்கி பக்கசார்பில்லாமல் நல்லதை மதிக்கவும் கெட்டதைப் புறந்தள்ளவும் இயலுமாக்குகின்றது.

இந்த வகையான ஞானம் ஊடாக அறிவுடை நிலையை நாங்கள் பின்பற்றுவதன் மூலம் முரண்பாடுகளும் மோதல்களும் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும்.

இதுவே வேறுபாடுகள் நிறைந்த உலகில் சமாதானமான சகவாழ்வுக்கான வழியாகும். நாங்கள் சமாதானமாகவும் நல்லிணக்கத்துடனும் வாழ விரும்பினால் இதுவே அதற்கான ஒரே ஒரு தேர்வு ஆகும்.

-எழுத்தாளர் V.T.Sahadevarajah-

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net