ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதல் நடத்திய கோடிஸ்வரர் பற்றி புதிய தகவல்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை தாக்குதலை நடத்திய கோடிஸ்வர வர்த்தகரான மொஹமட் இப்ராஹிம் இன்சாப் அஹமட் என்பவர் 62 லட்சம் ரூபாய் பெறுமதியான அலுமினியம், பித்தாளை மற்றும் இரும்பு அடங்கிய கொள்கலன் பெட்டிகளை திருடிய சம்பவம் தொடர்பாக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் பிரதான சந்தேக நபர் என நீதிமன்றத்தில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு கடந்த ஜனவரி 29 ஆம் திகதி கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சனா டி சில்வா முன்னிலையில், விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது பிரதான சந்தேக நபரான கொழும்பு தெமட்டகொடை மாவில கார்டன் இலக்கம் 658/90 என்ற விலாசத்தில் வசித்து வந்த மொஹமட் இப்ராஹிம் இன்சாப் அஹமட் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

62 லட்சம் ரூபாய் பெறுமதியான அலுமினியம்,பித்தளை மற்றும் இரும்பு அடங்கிய கொள்கலன் பெட்டிகளை கொள்ளையிட்டதாக கடந்த 2013 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி கிராண்ட்பாஸ் பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்ததுடன் 7 பேரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியிருந்தனர்.

அப்துல் காதர் மொஹமட் மன்சூர், மொஹமட் புஹாரி மொஹமட் சுவார், கொடித்துவக்கு ஹெட்டியராச்சி அத்துல தசநாயக்க, மொஹமட் நசீர் மொஹமட் அஸ்லம், தேவகே ஜினேஸ் நாலக மற்றும் மோப்பு ஆராச்சிகே கௌசல்ய புத்தி பெரேரா ஆகியோரே ஏனைய சந்தேக நபர்களாவர்.

அத்துடன் சம்பவத்துடன் ஆரம்பத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய 7வது சந்தேக நபர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Copyright © 8411 Mukadu · All rights reserved · designed by Speed IT net