மங்கள,ராஜித,சதுர ஆகியோருக்கு விகாரைக்குள் செல்லத் தடை!

அமைச்சர்களான மங்கள சமரவீர, ராஜித சேனாரட்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சதுர சேனாரட்ன ஆகியோரை, கம்பஹா மாவட்ட விகாரைகளுக்கும் மதம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மகா நாயக்க தேரர்களை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டார்கள் என்று கூறியே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கம்பஹா மாவட்ட பௌத்தசாசன பாதுகாப்புச் சபையின் விகாராதிபதி சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த அரசியல்வாதிகள் மூவரையும் கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள எந்தவொரு விகாரைகளுக்கும் அனுமதிக்க வேண்டாம் என்றும் கம்பஹா மாவட்டத்தில் மதம் சார்ந்த எந்தவொரு நிகழ்வுகளுக்கும் அழைக்க வேண்டாம் என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

இந்தத் தீர்மானமானது எதிர்வரும் காலங்களில் நாட்டில் உள்ள ஏனைய இடங்களிலும் அமுல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கம்பஹா மாவட்ட பௌத்தசாசன பாதுகாப்புச் சபையின் விகாராதிபதி சங்கம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த தீர்மானத்திற்கு அமைச்சர் மங்கள சமரவீர கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தன்னைக் கொல்ல வந்த தேவதத்தருக்குக் கூட விகாரையைத் தடை செய்யவில்லை புத்த பெருமான் என்றும் உன்னதமான பாதையை புரியாத முட்டாள் தேரர்கள் துன்பத்திலிருந்து நீங்கி சுகம் பெறட்டும். கவலையில் இருந்து நீங்கட்டும் என தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net