அசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் இல்லாத இலங்கை!

அசாதாரண சூழ்நிலையில் ஜனாதிபதி, பிரதமர் இல்லாத இலங்கை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயமாக தஜிகிஸ்தானுக்கு பயணமாகவுள்ளார்.

நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூருக்குச் சென்றையடுத்து இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதியும் வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

தஜிகிஸ்தான் நாட்டின் தலைநகர் டுஷான்பே நகரில் இடம்பெறவுள்ள ஆசியாவில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் தொடர்பான கருத்தரங்கில் பங்கேற்கவே ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த மாநாட்டில் ரஷ்ய மற்றும் சீன ஜனாதிபதி உள்ளிட்டவர்களும் பங்குபற்றவுள்ளனர்.

3 நாட்கள் தஜிகிஸ்தானில் தங்கவுள்ள ஜனாதிபதி, நாளை மற்றும் நாளை மறுதினம் இடம்பெறவுள்ள மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

அதனையடுத்து, மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள முக்கிய தலைவர்களுடன் பிரத்தியேக சந்திப்புகளை நடத்துவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று சிங்கபூருக்கு பயணமாகியிருந்தார். அவர் நாளை நாடு திரும்புவாரென கூறப்படுகிறது.

பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளாகி மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பாத இலங்கை, அதன் பின்னர் இடம்பெற்ற அரசியல் மாற்றங்கள் காரணமாக ஸ்திரமற்ற நிலையில் காணப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையிலேயே ஜனாதிபதியும் பிரதமரும் ஒரேநேரத்தில் வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 1367 Mukadu · All rights reserved · designed by Speed IT net