பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை பலப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை!

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி, பயங்கரவாதத்திற்கு எதிரான செயற்பாடுகளை பலப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்க செனட் சபையில் சமர்ப்பித்துள்ள அறிக்கை ஒன்றிலேயே தெற்காசிய வலய அமெரிக்காவின் அபிலாஷைகள் என்ற தொனிப்பொருளில், தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கைகள் தொடர்பான பிரதம பிரதி உதவி செயலாளர் Alice G. Wells இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் சமர்ப்பித்துள்ள அறிக்கையில்,

‘தெற்காசிய வலயத்தின் பொருளாதார மற்றும் அரசியல் சுதந்திரத்தை மாத்திரம் அமெரிக்கா எதிர்பார்க்கவில்லை.

உலக சனத்தொகையின் ஒரு பகுதியான இந்திய, பசுபிக் வலயங்களில் வாழும் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும், வலயத்தின் நீண்ட கால எதிர்காலத்திற்கும் இந்த கொள்கை முக்கியமானதாகும்.

இந்து, பசுபிக் வலயத்தின் ஊடாகவே உலகின் 70 வீத வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அமெரிக்காவின் இராஜதந்திர செயற்பாடுகள், அபிவிருத்தி செயற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஊடாக தங்களின் சமுத்திரம் மற்றும் வான் மார்க்கத்தை பாதுகாக்க முடியும்.

அத்துடன், அமெரிக்காவின் நட்புறவு மற்றும் பங்காளர்களான இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட ஏனைய நாடுகளுடன் இந்து – பசுபிக் நாடுகளுக்கு அரசியல் மற்றும் பொருளாதார சுயாதீன தன்மையை உறுதிப்படுத்த ஒத்துழைப்பு வழங்கப்படும்.

அதன் ஊடாக சுதந்திரம் மற்றும் சௌபாக்கியத்தை எட்டக்கூடிய வழியை ஏனையவர்களின் பங்களிப்பின்றி அவர்களால் அமைத்துக்கொள்ள முடியும்.

ஒழுக்கம் மற்றும் ஜனநாயக பண்புகள் அற்றுப்போன, நிலையற்ற அடிப்படை வசதிகளின் ஊடாக சுமக்க முடியாத கடனால் எமது பங்குதாரர்கள் பாதிப்புக்குள்ளாவதற்கு சீனா அல்லது வேறு நாடுகளுக்கு இடமளிக்க மாட்டோம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தெற்காசிய வலயத்தின் புதிய பாதுகாப்பு ஒத்துழைப்பு திட்டமொன்றுக்கு 30 மில்லியன் அமெரிக்க டொலர் அடுத்த வருடம் தேவைப்படுவதாக இராஜாங்க திணைக்களம் அந்நாட்டு செனட் சபைக்கு அறிவித்துள்ளது.

இதன் ஊடாக இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளின் கடல் எல்லைகள் மேம்படுத்தப்படவுள்ளதுடன், பாதுகாப்பை அதிகரிப்பதற்கு வெளிநாட்டு இராணுவங்களுக்காக நிதி செலவிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

Copyright © 2963 Mukadu · All rights reserved · designed by Speed IT net