பிரான்ஸ் மீண்டும் பொது முடக்கமா.?

ஐந்நூறுக்கு மேல் உயிரிழப்புகள் பதிவு!
சுகாதார நெருக்கடி குறித்து மக்ரோனின் முக்கிய தொலைக்காட்சி உரை நாளை

பிரான்ஸில் கடந்த 24 மணிநேர சுகாதார நிலைவர அறிக்கையின்படி நாடெங்கும் வைரஸ் தொற்றினால் 500 க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகி உள்ளன. 33 ஆயிரத்து 417 புதிய தொற்றுக்கள் உறுதிப்படுத்தப்பட் டுள்ளன.

இன்று வெளியாகிய உயிரிழப்புகளின் தொகை கடந்த ஏப்பிரலுக்குப் பின்னர் பதிவாகும் அதி கூடிய எண்ணிக்கை என்று குறிப்பிடப்படுகிறது.

தொற்றின் தாக்கம் வீரியமடைந்துவரும் நிலையில் நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை அதிபர் மக்ரோன் நாளை புதன்கிழமை இரவு 20 மணிக்கு தொலைக்காட்சியில் தோன்றி மக்களுக்கு அறிவிக்கவுள்ளார்.

அமைச்சர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளோடு தொடர்ச்சியாக இரு தினங்கள் நடத்திய தீவிர ஆலோசனையின் பின்னர், பாதுகாப்பு சபைக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய, தேசிய அளவிலான பொது முடக்கம் ஒன்றை மீண்டும் நடைமுறைப்படுத்த அரசு உத்தேசித்துள்ளது எனத் தகவல் வெளியாகி உள்ளது.

புதிய பொது முடக்கத் திட்டம் தீவிர தொற்றுப் பகுதிகளைத் தனித்து வரையறுக்காமல் நாடு முழுவதுக்குமான பொதுவான கட்டுப்பாடுகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்றும் –

கடந்த மார்ச்சில் முதல் தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டதைப் போன்று அல்லாமல் சற்றுத் தளர்வுப் போக்கான(confinement national mais plus souple) விதிகளை அது கொண்டிருக்கும் என்றும் பாரிஸ் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

27-10-2020
செவ்வாய்க்கிழமை

பிரதி

Copyright © 0357 Mukadu · All rights reserved · designed by Speed IT net