கடைகளை டிசெம்பரில் திறக்க தீர்மானம் உணவகங்கள் இனி ஐனவரியில் தான்.

கடைகளை டிசெம்பரில் திறக்க தீர்மானம் உணவகங்கள் இனி ஐனவரியில் தான்?

Gouvernement n’envisage pas de réouverture pour les bars, les cafés et les restaurants avant le 15 janvier- Franceinfo.

உணவகங்கள், அருந்தகங்கள்(cafes, bars and restaurants) என்பன இந்த ஆண்டின் இறுதிக்குள் திறக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. உத்தேசமாக ஜனவரி 15 ஆம் திகதி அவற்றைத் திறக்கமுடியும் என்று மதிப்பிடப்பட்டிருப்பினும் அது பற்றிய எந்த முடிவும் அரசு மட்டத்தில் தீர்மானமாக எடுக்கப்படவில்லை.

அரசாங்க வட்டாரங்களை ஆதாரம் காட்டி “பிரான்ஸ்இன்போ” (Franceinfo) செய்திச் சேவை இத்தகவலை வெளியிட்டிருக் கிறது.

உணவகங்கள் மற்றும் அது சார்ந்த துறைகளுக்கு மேலதிக நிதி உதவிகளை வழங்குவதற்கான திட்டங்கள் தற்சமயம் பரிசீலிக்கப்படுகின்றன. பொருளாதார அமைச்சு ஜனவரி 15 ஆம் திகதி அளவிலேயே உணவகங்களை திறக்க உத்தேசித்துள்ளது. ஆனால் உறுதியான திகதியை அறிவதற்கு அடுத்தவாரம் பிரதமர் விடுக்கவிருக்கும் அறிவுப்புக்கு காத்திருக்க வேண்டும் – என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்சமயம் மூடப்பட்டிருக்கின்ற அத்தியாவசியமற்ற வர்த்தக நிலையங்கள் அனைத்தும் இம்மாத இறுதியில் – பெரும்பாலும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கறுப்பு வெள்ளி (Black Friday) மலிவு விற்பனை நாளன்று – திறக்கப்படலாம் என இன்று தகவல் வெளியாகி உள்ளது.

நிதி அமைச்சர் புறுனோ லூ மேயர் இத்தகவலை உறுதிப்படுத்தி உள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

27 வெள்ளி அல்லது மறுநாள் 28 சனிக்கிழமை கடைகளைத்திறந்து நத்தார் வர்த்தக நடவடிக்கைகளைத் தொடங்க வாய்ப்புக் கிட்டும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கடைகளில் கைக்கொள்ளவேண்டிய மேலும் புதிய பல சுகாதார விதிமுறைகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதற்கிடையில் நாடு முழுவதும் தேவாலயங்களில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளைச் செய்வதற்கு அனுமதிக்குமாறு கேட்டு கத்தோலிக்க மதத்தவர்கள் அமைதிப் பேரணிகளை நடத்தி வருகின்றனர்.

கத்தோலிக்க மதப் பிரதிநிதிகளுடன் இது குறித்து பிரதமர் இன்று கலந்துரையாடி உள்ளார். பெரும்பாலும் தேவாலயப் பிரார்த்தனைகளில் மக்கள் கூடுவதற்கான அனுமதியும் இம்மாத இறுதியில் வழங்கப்படலாம் எனத் தெரியவருகிறது.

பிரதி இணையம்

Copyright © 5828 Mukadu · All rights reserved · designed by Speed IT net