மீண்டும் மியான்மர் இராணுவத்தின் கட்டுப்பாட்டில்.

பர்மா என்கின்ற மியான்மர் நாட்டு மக்களது தலைவிதி மீண்டும் இருண்ட யுகத்தினுள் பிரவேசிக்கிறது. அங்கு நாட்டின் அதிகாரத்தை மீண்டும் இராணுவம் முழுமையாகக் கைப்பற்றி யிருப்பதாக செய்திகள் வருகின்றன.

75 வயதான தலைவர் ஆங் சான் சூ கீ (Aung San Suu Kyi) உட்பட ஆளும் கட்சிப் பிரமுகர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று இன்று காலை முதல் வெளியாகி வருகின்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

சதிப் புரட்சியை ஒத்த சம்பவங்கள் தலைநகர் நெய் பீ தாவ்வில் (Nay Pyi Taw) நிகழ்ந்துள்ளன என்று அங்குள்ள செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

ஒராண்டு காலத்துக்கு அவசர காலநிலையைப் பிரகடனம் செய்திருக்கின்ற இராணுவம், நாட்டின் ஆட்சி அதிகாரம் தலைமைத் தளபதி மின் ஆங் லைங்கிடம் (Min Aung Hlaing) ஒப்படைக்கப் பட்டிருப்பதாக அறிவித்துள்ளது.

தலை நகரில் அரச தொலைக்காட்சி சேவையும் தொலைத் தொடர்பு, இன்ரநெற் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. வைப்புகளை மீளப் பெறுவதற்காக மக்கள் வங்கிகளுக்கு முன்பாக முண்டியடிக் கின்றனர் என்று கூறப்படுகிறது.

சூ கீயின் சார்பில் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் இராணுவப் புரட்சியை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் தெருக்களில் இறங்கி எதிர்க்குமாறும் நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தலைநகரில் பதற்றம் நிலவுகிறது.

கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு மத்தியில் கடந்த ஆண்டு நவம்பரில் அங்கு நடந்த தேர்தலில் ஆங் சான் சூ கீயின் தேசிய ஜனநாயக லீக் (National League for Democracy – NLD) கட்சி ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெற்றிருந்தது.அதனை அடுத்து புதிய அரசுத் தலைவரும் அரசாங்கமும் பதவியேற்க இருந்த சமயத்திலேயே அங்கு இராணுவப் புரட்சி நிகழ்ந்துள்ளது.

தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளன என்று கூறியே இராணுவம் தற்போது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளது.நாட்டின் தேர்தல் ஆணைக்குழு இராணுவத்தின் இக்குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையை அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் ஐ. நா. செயலாளர் நாயகமும் கண்டித்துக் கருத்து வெளியிட்டுள்ள ளனர்.பிராந்தியத்தின் அமைதிக்குப் பெரும் அச்சுறுத்தலான இந்த சதிப் புரட்சியை உலக நாடுகள் பலவும் கண்டித்து வருகின்றன. தங்கள் பிரஜைகளை அங்கிருந்து வெளியேற் றுவது குறித்தும் சில நாடுகள் ஆலோசித்து வருகின்றன.

மியான்மர் நிலைவரம் ரோஹின்யா சமூகத்தினரிடையேயும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. எந்த விலை கொடுத்தாவது உடனடியாக ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கு உலக நாடுகள் முன்வர வேண்டும் என்று ரோஹின்யா அகதிகள் சமூகத்தின் தலைவர் டில் முகமட் (Dil Mohammed) ரொய்ட்டர் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ஆசிய வட்டகையில் நீண்டகால இராணுவ ஆட்சி அடக்கு முறைக்கு உட்பட்ட வரலாறு கொண்ட ஒரு நாடு மியான்மர்.மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசுக்கு எதிரான இராணுவ ஆட்சி அங்கு 1962 இல் ஆரம்பித்தது.

ஜனநாயக முறை மாற்றத்துக்கான நடவடிக்கைகள் 2011 இல் தொடங்கிய பிறகுதான் இராணுவம் படிப்படியாக ஆட்சி அதிகாரங்களை சிவிலியன் அரசாங்கத்திடம் கையளித்தது. 2015 இல் நடைபெற்ற முதலாவது ஜனநாயக முறைத் தேர்தலில் சூ கீயின் தேசிய ஜனநாயகக் லீக் ஆட்சியைப் பிடித்தது. ஆனாலும் நாட்டின் நிர்வாக விடயங்களில் இராணுவத் தலையீடுகள் தொடர்ந்து இருந்து வந்தன.

மியான்மரில் 2008 இல் வெளியிடப்பட்ட அரசமைப்பின் படி இராணுவம் நாடாளுமன்றத்தில் 25 வீதமான ஆசனங்களையும் மூன்று முக்கிய அமைச்சுப் பொறுப்புகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். இந்த முறைமை சூ கீயின் ஆட்சி நிர்வாகத்துக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தி வந்தது.

1989 முதல் 2010.வரையான காலப்பகுதியில் சுமார் 15 ஆண்டுகள் இராணுவ ஆட்சியாளர்களால் சிறை வைக்கப்படிருந்தவர் ஆங் சான் சூ கீ. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அவரது ஆட்சியை நிராகரித்த இராணுவம் நாட்டை தனது பிடியில் நீண்ட காலம் வைத்திருந்தது.ஜனநாயக ரீதியில் வாக்குகளால் தெரிவாகியபோதிலும் சிறையிலேயே தன் வாழ் நாளைக் கழித்துவந்த சூ கீக்கு சர்வதேச அங்கீகாரம் இருந்துவந்தது. சிறையில் இருந்தவாறே நோபல் உலக சமாதான விருதை வென்றவர் அவர். ஆனால் அண்மைக்காலமாக நாட்டின் றோஹின்யா (Rohingya) சிறுபான்மை முஸ்லிம் மக்கள் மீதான அவரது அரசின் அடக்கு முறைகள் சூகீயின் சமாதான முகத்தின் மீது கடும் விமர்சனக் கறைகளை ஏற்படுத்தி இருந்தன.

(படம் :ஆங் சான் சூ கீயும் இராணுவ ஆட்சித் தலைவரும்)

குமாரதாஸன். பாரிஸ்.

Copyright © 4281 Mukadu · All rights reserved · designed by Speed IT net