உயிர் வலி ? எனது பார்வையில்..கானா பிரபா

FB_IMG_1461105607709
சகோதரி ஷாலினி சார்ள்ஸ் இயக்கத்தில் உருவான “உயிர் வலி” குறும் படத்தை இன்று காலை என் ரயில் பயணத்தில் பார்க்கக் கிட்டியது.
போருக்குப் பின்னான ஈழத்துச் சமூகத்தில் நிலவும் சமகாலத்துக் கலாசாரப் போரின் ஒரு கூறாக அமையும் இளையோரின் தவறான வழிப்படுத்தலும், அதன் வழி கிட்டும் பாலியல் நோயையும் மையப்படுத்திய கதை. பதின்ம வயதுக் காதலை இந்தக் கருத்தோட்டதுக்குப் பயப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

முதலில் எழுத்தோட்டத்துக்கு முன்னான குறு நிமிடத் துளிகளில் தன் முக்கிய பாத்திரங்களையும் களத்தையும் அறிமுகம் செய்தவகையில் தன்னை ஒரு சிறப்பானதொரு இயக்குநராக வெளிப்படுத்துகிறார்.
தொடர்ந்து வரும் காட்சி அமைப்பில் பயன்படுத்தப்பட்ட வெளிப்புறக் களங்கள் எல்லாமே சிறப்பு. யாழ்ப்பாணத்தில் இவ்வளவு சிறப்பான காட்சிப் படிமங்கள் இருக்கின்றனவே என்ற பெருமிதமும் எழுந்தது.

“உயிர் வலி” என்ற குறும் படத்தின் அடி நாதத்தை வலுச் சேர்க்கிறது த.பிரியனின் இளமை துள்ளும் பின்னணி இசை. காதில் ஹெட் போன் போட்டுக் கொண்டு படத்தைப் பார்த்ததால் மிகவும் நுணுக்கமாக இதை ரசிக்க முடிந்தது.
சொல்லப் போனால் இந்த மாதிரியான பரிமாணத்தில் இசையை வெளிப்படுத்தியிராவிட்டால் படமே உருக்குலைந்திருக்கும்.

இந்தப் படத்தில் பங்கேற்ற கலைஞர்கள் தம் பங்கைச் சரி வர உணர்ந்து செய்தது வலுச் சேர்க்கிறது.

ஒரு குறும் படத்துக்கும் குறும் தொலைக்காட்சி நாடகத்துக்குமான வேறுபாடு தான் ஒரு படைப்பைச் சீர் தூக்கி ஒப்பு நோக்க உதவும்.
இந்தக் குறும்படத்தின் ஆரம்பக் காட்சி, இறுதிக் காட்சியில் வெளிப்பட்ட படத் தொகுப்பின் சிறப்பைப் படம் நெடுகிலும் கொண்டு வந்திருக்கலாமோ என்று எண்ணத் தோன்றியது.
குறிப்பாக நாயகியின் தாய், தந்தை உரையாடல் காட்சி அமைப்பை நறுக்கி விட்டு அந்த நாயகியின் படுக்கை அறைக்குள் இருந்தே வெளி ஒலிகளைப் பிரதிபலித்திருக்கலாம்.
படத் தொகுப்பாளர் ஶ்ரீ துஷிகரனுக்கு அந்தத் திறன் இருக்கிறது என்பதால் தான் இன்னும் எதிர்பார்க்கிறேன்.
இப்படியானதொரு படத்தை முதலில் அப்படியே முழுதும் எடுத்து விட்டுப் பின்னர் பிற் தயாரிப்பில் படத்தொகுப்பு, ஒலியமைப்பின் வழியாகக் காட்சியைப் பூரணப்படுத்துதல், ஒளியமைப்பின் வழி காட்சியின் கனத்தைப் பிரதிபலித்தல் போன்றவை ஒரு குறும் படத்தை மேலும் மெருகேற்றும். ஆனால் இது கத்தி மேல் நடக்கும் வித்தை. கொஞ்சம் பிசகினால் பிரச்சாரப் படமாகி விடும்.

படத்தின் தலைப்பில் எளிமைத் தன்மை இருந்திருக்கலாம். உயிர் வலி என்பது மிகவும் கனம் பொருந்தியதொரு சொல். அது பல்வேறு சமுதாயப் பிரச்சனைகளை ஒருங்கமைத்தது.

இந்த “உயிர் வலி” குறும் படத்தைப் பார்த்து முடித்த போது நம் இளம் கலைஞர்களின் திரை முயற்சிகள் தென்னிந்திய சினிமாவை அடியொற்றியதாக அன்றித் தனித்துவமாகவும் வெளிப்படுத்தலாம் என்ற வேட்கையின் வெளிப்பாடு தெரிகிறது. இது தொடர வேண்டும். வாழ்த்துகள் படக் குழுவினருக்கு.

“உயிர் வலி” குறும் படம் காண

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net