புத்தாண்டு நாளில் .ரதி மோகன்

m1
புத்தாண்டு நாளிலே
புத்தாடை புனைந்து
புதுப்பானை வைத்து
பச்சையரிசி பொங்கல்
கோலமிட்ட முற்றத்தில்….
பொங்கிவரும் பாலாக
பொங்கிய சந்தோசங்கள்
பகிர்ந்துண்டு சொந்தத்தோடு
பார்த்திருந்த கைவிசேஷம்
வெற்றிலையில் அப்பா தர….
இருநூறு போதாது என்றே
முகத்தை தொங்கப்போட்டு
வருசப்பிறப்பிலே அழாதே
வாஞ்சையுடன் அம்மாவும்
இன்னும் நூறு கையில் வைக்க…
காட்டி காட்டி பெருமிதமாய்
பாட்டிக்கும் தாத்தாக்கும்
புதுச்சட்டை அழகோடு
பூஜையில் கலந்து மகிழ்ந்த
அந்தக்காலம் போல் இனி
வருமா இங்கே…
பொங்கியும் இங்கில்லை
சந்தோசங்கள்
பக்கமிருந்து கதைபேச
சேர்ந்திருந்து பொங்கல்
சுவைத்துண்ணுவதற்கு
நிமிடங்களுக்கு கூட
பஞ்சமான எம் கதையை
யாரறிவார்….
என்ரை பிள்ளை வெளிநாட்டிலை
பகட்டோடு சொல்கின்ற
பெற்றவருக்கும் புரிவதில்லை
ஏக்கத்தில் கரைகின்ற
எங்களது கண்ணீர் பொழுதுகள்.

ரதி மோகன்
ஓயாதகவியலைகள்
13/4/16

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net