ஈழ விடுதலைப்போராட்ட முன்னோடி, சிந்தனையாளர், கவிஞர், எழுத்தாளர், ஊடகவியலாளர் எனத் தமிழ்ச் சூழலில் பன்முக வகிபாகம் கொண்டிருந்த கி.பி.அரவிந்தன் அவர்களின் முதலாவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்ஸ் தலைநகர் பாரிசில் 26.03.16 சனிக்கிழமை நடைபெற்றது.
மலர் வணக்கத்துடன் தொடங்கிய நினைவேந்தல் நிகழ்வினை புலவரும் ஆசிரியருமான திரு. குமரன் நெறிப்படுத்தினார். ஆய்வாளரும் இடதுசாரிச் சிந்தனையாளருமான பி.ஏ.காதர், எழுத்தாளர் குணா கவியழகன், முன்னாள் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைப் பீடத் தலைவர் பாலசுகுமார், ஊடகவியலாளர் ரூபன் சிவராஜா ஆகியோர் நினைவோடைப் பகிர்வுகளையும் கருத்துரைகளையும் நிகழ்த்தியிருந்தனர். அத்தோடு கி.பி. அரவிந்தன் நினைவு மலர் (நூல்) வெளியீடு, நினைவுத்திரையிடல், வில்லிசை, கி.பி அரவிந்தனின் பாடல்கள், கவிதைகள் ஆற்றுகை என நிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தன.
பி.ஏ காதர் உரை:
சமூக அரசியல் ஆய்வாளரும் இடதுசாரிச் சிந்தனையாளருமான பி.ஏ காதர் தனதுரையில், ஈழ விடுதலைப் போராட்டம் கருநிலையில் இருந்தபோது அதில் அரவிந்தன் பங்கு கொண்டவர். அந்தப் போராட்டம் எழுந்து, நடந்து, விழுந்த போதும் அதனோடு இருந்தவர் எனக் குறிப்பிட்டார்.
தேசிய விடுதலைப் போராட்ட களத்தினில் அடிமட்ட மக்களிடம் சென்று, சமூக விடுதலையையும் தேடிய ஒரு போராளி அரவிந்தன்.
அவரது கவிதைகளில் வார்த்தை ஜாலங்கள் இல்லை, அழுத்தமும் வெளிப்படைத்தன்மையும் நிறைந்திருக்கும். அவற்றில் தேர்ந்த சமூக விமர்சகனைக் காணலாம். ஓட்டுமொத்தமாக அவரது கவிதைகளில் அவரைக் கவிஞனாக, மானிட நேயனாக, போராளியாக, விமர்சகனாகக் காணலாம்.
ki-pi-paris (1)
ki-pi-paris (2) ki-pi-paris (3)
ki-pi-paris (4)
மலையக மக்கள் மீதான ஆக்கபூர்வமான பார்வையை அவர் கொண்டிருந்தார். அவர்களைப் பரிதாபத்திற்குரியவர்களாகப் பார்க்காது, அவர்களுக்குள் இருக்கும் போராட்ட குணத்தை அரவிந்தன் போன்றவர்கள் சரியாக அடையாளம் கண்டிருந்தனர்.
எனக்கும் எழுதுவதற்குரிய ஊக்க சக்தியாக அரவிந்தன் திகழ்ந்திருக்கின்றார். என்னைத் தேடி பிரித்தானியாவிற்கு வந்து என்னை இரண்டு ஆய்வு நூல்கள் எழுத வைத்தவர். அடித்தள மக்களை நேசித்த பண்பாளரான அவரைத் துதிபாடுவதல்ல அவருக்கு நாம் செய்யும் மரியாதை. அவருடைய சிந்தனை, கனவுகளுக்கு செயல்வடிவம் கொடுப்பதே அவருக்கான உண்மையான மரியாதையாகும்.
தமிழ் பேசும் மக்களைப் பேதமின்றி, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து பொதுநோக்கத்திற்காகப் பொதுத்தளத்தில் செயற்படுகின்ற பண்பினை வளர்ப்பதில் அரவிந்தன் முன்நின்றார். இன்று குறுகிய நோக்கத்துடன் கூடிய அரசியல் வறுமை நிலவுகின்றது. காலமறிந்து காலத்திற்குத் தேவையான பணிகளை, உடனடி அரசியல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் முன்னுணர்வு மிக்க பார்வையும் செயற்பாடுகளுமே அரவிந்தனுக்கு நாம் செய்யவேண்டிய உண்மையான மரியாதையாகும் என்று பி.ஏ காதர் தனது கருத்துக்களை முன்வைத்தார்.
நினைவு மலர் அறிமுகமும் குணா கவியழகன் உரையும்:
கி.பி.அரவிந்தன் அவர்களின் ஓராண்டு நினைவு மலர் பற்றிய அறிமுகக் குறிப்புகளோடு, அவர் பற்றிய தனது அனுபவங்களையும் சிந்தனைகளையும் குணா கவியழகன் தனதுரையில் பகிர்ந்துகொண்டார். 30 வரையான சமூக, அரசியல் கலை இலக்கிய ஆளுமைகள், கல்வியாளர்கள் கி.பி அரவிந்தன் தமக்குள் ஏற்படுத்திய மனச்சித்திரங்கள், அனுபவங்களை இந்நூலில் பதிவு செய்துள்ளார்கள்.
விடுதலைப் போராட்ட முன்னோடி, சமூக செயற்பாட்டாளர், இலக்கியவாதி என்ற பரிமாணங்கள் ஊடாக அவர் பற்றிய சித்திரங்கள் இந்நூலில் வரையப்பட்டுள்ளன. இந்நூலில் அதிகம் சொல்லப்படாத ஒரு பரிமாணத்தினூடாக நான் அரவிந்தன் அவர்களைப் பார்க்கிறேன். அவரை ஒரு பண்பாட்டாளனாகப் பார்க்கிறேன். பண்பாட்டு அடையாளத்தை இழக்க நேர்ந்தால் அது இன அழிவில் போய் முடியும். புலம்பெயர் தேசங்களில் சமூகம், அரசியல், கலை, இலக்கியம் மொழிக்கல்வி எனப் பல தளங்களில் முன்கை எடுப்பாளனாக அவர் திகழ்ந்துள்ளார். மற்றவர்களைத் தூண்டி சமூக மேம்பாட்டுக்கான பணிகளை முன்னெடுக்க வைத்துள்ளார்.
அவர் பொருளாதார பலம் மிக்கவராக எப்பொழுதும் இருந்ததில்லை. பணம் தேடும் முயற்சிகளில் ஈடுபட்டவரல்ல. சமூக இயக்கத்திற்கான ஓட்டத்திலேயே அவரது கவனக்குவிப்பு எப்பொழுதும் இருந்துள்ளது. தோழமை, அன்பு, அறம், அர்ப்பணம், கடமை போன்ற பெறுமதிமிக்க பண்புகளைக் கொண்ட மனிதராக அவர் வாழ்ந்துள்ளார் என்பது நூலில் முக்கிய அம்சங்களாகப் பதிவாகியுள்ளன.
ki-pi-paris (5)ki-pi-paris (6)ki-pi-paris (7)ki-pi-paris (10)
மேற்குலக நாடுகள் தமது ஜனநாயகப் பண்பாட்டினை நிலைநிறுத்துவதற்காக வெளிநாட்டவர்களுக்கு புகலிடத் தஞ்சம் வழங்கவில்லை. அதன் பொருட்டு அகதிகளை உள்வாங்கவில்லை. ஐரோப்பாவின் நிதிநகரங்களின் இயங்குதலுக்கு அகதிகள் தேவை, அவர்களின் உழைப்புத் தேவை என்பதே மூலகாரணி. முதல் தலைமுறையின் முன்கை எடுப்புகளினால் தான் புகலிடச் சமூகம் பலமாக உருவாக முடியும். புகலிட நாடுகளில் அரசியல் ரீதியாகச் சிக்கல்களையும் அழுத்தங்களையும் எதிர்கொள்ளாதிருப்பதை உறுதி செய்வதற்கு ஒரு சமூகமாகப் பலமாக இருத்தல் அவசியம்.
தனது சாவைக் கொண்டாட வேண்டாமெனக் கேட்டுக்கொண்ட அரவிந்தன் அவர்களை நாங்கள் கொண்டாடுவது சரியா என்ற கேள்வி எழலாம். நிச்சயமாகக் கொண்டாட வேண்டும். கொண்டாட வேண்டாம் என்று சொன்னமை அவரது உளப்பண்பாட்டினைக் கட்டியம் கூறுகின்றது. கொண்டாட வேண்டியது எமது பண்பாட்டை வெளிப்படுத்துவதற்கானது. பண்பாட்டாளர்களையும் சமூக அசைவியக்கத்தின் முன்னேற்றத்திற்கான திசைகாட்டிகளையும் கொண்டாடத் தவறுவோமாயின் சமூகம் வியாபாரிகளையும், நடிகர்களையும் கொண்டாடத் தொடங்கிவிடும் என்றும் குணா கவியழகன் தனதுரையில் சுட்டிக்காட்டினார்.
பாலசுகுமார் உரை:
முன்னாள் கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைப் பீடத் தலைவர் பாலசுகுமார் தனதுரையில் குறிப்பிட்டதாவது, புலம்பெயர் சூழலில் ஈழத்தமிழர்களின், குறிப்பாக இளைய தலைமுறையினரின் அடையாளங்களைத் தக்கவைத்தல், பேணுதல், வளர்த்தெடுத்தல் சார்ந்து அதீத அக்கறையும் செயல்முனைப்பும் கொண்டிருந்தார் கி.பி.அரவிந்தன்.
தமிழர்களின் கூத்து வடிவங்கள் மற்றும் மண் சார்ந்த, மக்கள் சார்ந்த இசையை அடுத்த தலைமுறையினர் மத்தியில் ஊடுருவச் செய்வதில் கரிசனை கொண்டிருந்தார். ’இன்னியம்’ எனும் ஈழநாட்டிய வடிவத்தை பிரான்ஸ் மற்றும் நோர்வே உட்பட்ட புகலிட தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் எடுத்துச் செல்வதில் தனக்கு உந்துதலாக அவர் இருந்தமையை பாலசுகுமார் நினைவு கூர்ந்தார்.
சுந்தரின் (கி.பி.அரவிந்தன்) நினைவாக ஈழத்தமிழ் கலை அடையாளங்களை உலகம் முழுவதும் பரவச் செய்தலும், ஈழத்தமிழ்ப் பின்னணியைக் கொண்ட இளைய தலைமுறையினர் மத்தியில் எடுத்துச் செல்வதும் அவருக்குச் செய்யும் மரியாதையாக அமையும் என்றும் கூறினார்.
சுந்தர் மறைந்து ஒரு ஆண்டுக்குள் அவரது நினைவுகளையும் பன்முக ஆளுமை மற்றும் வகிபாகங்களைத் தாங்கி மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன. ஈழப்போராட்ட வரலாற்றில் பங்குகொண்டவர்களில் சுந்தருக்கு மட்டும் தான் இது நிகழ்ந்திருக்கிறது என்பதிலிருந்து அவருடைய தனிச்சிறப்பு புலனாகிறது என்றும் தனதுரையில் பாலசுகுமார் மேலும் தெரிவித்தார்.
ki-pi-paris (8)
ki-pi-paris (9)
ரூபன் சிவராஜா உரை:
இந்தக் குறிப்பினை எழுதியவர் உரையாற்றுகையில், தனக்கும் கி.பி அரவிந்தன் அவர்களுக்குமிடையிலான அனுபவங்களைப் பற்றிக் குறிப்பிட்டதோடு, உளப்பண்பாட்டினை ஜனநாயகமாக்குதல்; பற்றிய அவரது கூற்றினைச் சுட்டிக்காட்டினார்.
நான்கரை தசாப்தங்கள் சமூக விடுதலை, இன விடுதலை மீதான கனவுகளோடும் தீராத காதலோடும் சமூகத்தின் மீதான நேசத்தோடும் இயங்கிய ஒரு வரலாற்று வகிபாகத்தையுடைய ஆளுமை கி.பி. அரவிந்தன் என்று குறிப்பிட்டார். விடுதலைப் போராட்ட முன்னோடியான அவர் அதன் தோற்றம், வளர்ச்சி, எழுச்சி, வீழ்ச்சி என அனைத்தினதும் சாட்சியமாக விளங்கியுள்ளார். இரண்டரை தசாப்தங்காக புலம்பெயர் வாழ்வியக்கத்தின் பல தளங்களில் விதையாகவும் விழுதாகவும் இருந்துள்ளார். ஒவ்வொரு காலகட்டத்திலும் காலத்தேவை கருதிய காத்திரமான பங்களிப்பினை சிந்தனை சார்ந்தும் செயல்வடிவம் சார்ந்தும் வழங்கியிருக்கின்றார்.
இத்தகைய வரலாற்று வகிபாகத்தைக் கொண்டிருந்த அரவிந்தன் அவர்கள் முழுமையானதொரு தன்வரலாற்று நூலினை எழுதியிருப்பின் தமிழுலகிற்கு அது மாபெரும் பங்களிப்பாகவும் பொக்கிசமாகவும் அமைந்திருக்கும். ஆனால் கொடிய நோய் அப்பணியைச் செய்யவிடவில்லை எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
கவிதை – பாடல்கள் – வில்லிசை – நினைவுத்திரையிடல்
மேலும் நினைவந்தல் நிகழ்வில், கி.பி.அரவிந்தன் அவர்களது கவிதைகள் பிரெஞ் மொழியிலும் தமிழிலும் ஆற்றுகை செய்யப்பட்டன. அவரது சில கவிதைகளும் பாடல்களும் பாடகர் இந்திரன் குழுவினரால் இசைப்பாடலாகப் பாடப்பட்டன. அத்தோடு அரவிந்தன் அவர்களது ’நாடோடிகள்’ எனும் சிறுகதை வில்லிசைக் கலைஞர் நாச்சிமார் கோவிலடி ராஜன் அவர்களால் கதையாற்றுகை செய்யப்பட்டது.
கலைஞர் நாச்சிமார் கோவிலடி ராஜன் குழுவினரின் ’கண்மணியாள் காதை: நமக்கென்றோர் நலியாக் கலையுடையோம்’ வில்லிசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது.
ki-pi-paris (11)
ki-pi-paris (12)
ki-pi-paris
திருமதி விஜிதா, கி.பி அரவிந்தன் அவர்களின் மகள் செல்வி மானினி பிரான்சிஸ், செல்வி அகலியா நல்லையா மற்றும் அதிசயா நல்லையா ஆகியோர் கவிதைகளை ஆற்றுகை செய்தனர்.
மாணி நாகேஸ் எழுத்துருவில், ஊடகர், திரைக்கலைஞர் றொபேர்ட் திருவினால் உருவாக்கப்பட்ட கி பி அரவிந்தன் அவர்கள் பற்றியதொரு ஒளியாவணத் தொகுப்பு திரையிடப்பட்டது. . இது ஈழத் தமிழர் திரைப்படச் சங்கத்தினால் (LIFT) தயாரிக்கப்பட்ட குறுங்காணொளித் தொகுப்பாகும்.
கி.பி.அரவிந்தன் நினைவாக ’சிறுகதைப் போட்டி’ முடிவு:
இதேவேளை கி.பி.அரவிந்தன் அவர்களின் நினைவாக காக்கைச் சிறகினிலே இதழ் சார்பில் முன்னெடுக்கப்பட்டிருந்த ’புலம்பெயர் சிறுகதைப் போட்டி’ முடிவுகளும் இந்நிகழ்வில் அறிவிக்கப்பட்டிருந்தன. காக்கைச் சிறகினிலே இதழின் அதன் ஆசிரியர் குழுமத்தின் சார்பில் திரு முகிலன் கந்தையா அவர்களால் சிறுகதைப் போடமுடிவுகள் அறிவிக்கப்பட்டன.
தந்தையின் நினைவேந்தல் நிகழ்வுகளைச் சிறப்புற ஒழுங்குபடுத்தியதோடு, காத்திரமான உள்ளடக்கத்தோடு ’நினைவு நூலாக்க’ப் பணிகளுக்கான பொறுப்புகளை முன்னெடுத்த அவரது மகன் அங்கதன் இந்நிகழ்வில் மதிப்பளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
ki-pi-paris (13)
ki-pi-paris (14)ki-pi-paris (15)
நன்றியுரையினை அரவிந்தன் அவர்களின் துணைவியார் சுமத்ரி பிரான்சிஸ் அவர்கள் ஆற்றினார். அவர் ஆற்றிவந்த பணிகளைத் தன்னாலான வரையில் தொடர்வதற்கான மனத்திடத்தை சுமத்ரி அவர்கள் வெளிப்படுத்தினார்.
கி.பி அரவிந்தன் அவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவரது நெருங்கிய நண்பர் முகிலன் ஆகியோரின் ஏற்பாட்டில் எளிமையாகவும் அதேவேளை நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் உணர்வுபூர்வமாக அமைந்தன.